ஆகஸ்ட் 5ந்தேதி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுயிருந்த சிறப்பு அந்தஸ்த்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை இந்தியாவை ஆளும் பாஜகவை சேர்ந்த மோடி அரசாங்கம் நீக்கிவிட்டது. ஜம்மு – காஷ்மீர் மாநிலமாக இருந்ததை இரண்டாக பிரித்து ஜம்மூ காஷ்மீர் – லடாக் இரண்டு என யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளார். இவைகளுக்கு அம்மக்களிடம்மிருந்து எதிர்ப்புகள் வரக்கூடாது என்றும், அரசியல் கட்சிகள் தங்களது வலிமையான எதிர்ப்பை காட்டிவிடக்கூடாது என 144 தடையுத்தரவு போட்டு இணையம் துண்டிப்பு, செல்போன், லேண்ட் லைன் துண்டிப்பு, கடித போக்குவரத்து துண்டிப்பு, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் என அனைவரையும் வீட்டு சிறையில் அடைத்து வைத்துவிட்டது.
இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த எம்.பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்கட்சிகள் உட்பட யாரும் அங்கு செல்ல முடியாதபடி செய்துள்ளது மோடி அரசாங்கம். கடந்த 85 நாட்களாக அந்த மாநிலம் ஒரு தீவாகவே உள்ளது. வெளிநாட்டு செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டு விட, உள்நாட்டு செய்திகளுக்கு பெரும் தணிக்கையே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடாளமன்ற உறுப்பினர்கள் 27 பேர் காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கியுள்ளது இந்திய அரசு. அவர்கள் அக்டோபர் 29ந்தேதி காஷ்மீர் சென்று வந்தவர்கள், பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்கள். இது தான் இந்தியாவில் உள்ள பாஜகவை சேராத தலைவர்களையும், பொதுமக்களையும் ஆச்சர்யத்துடன் கவனிக்க வைத்துள்ளது. உள்ளுரை சேர்ந்த தலைவர்களுக்கு அனுமதியில்லை, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு எதற்காக அனுமதி வழங்குகிறார்கள் என்கிற கேள்வி எழுந்து, இந்த விவகாரத்தை உற்று நோக்க வைத்துள்ளது.
இந்நிலையில் இதன் பின்னால் உள்ள விவகாரத்தை உடைத்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த வடமேற்கு இங்கிலாந்தின் பாராளமன்ற உறுப்பினர் லிபரல் ஜனநாயக கட்சியை சேர்ந்த கிரிஸ் டேவிஸ். அவர் பிபிசிக்கு அளித்துள்ள நேர்காணலில், இந்திய பிரதமராகவுள்ள மோடியின் ஆதரவாளர்கள் அடங்கிய குழு ஒன்று தான் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, மோடியை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம். காஷ்மீரை சுற்றி பார்க்கலாம் எனச்சொன்னது. நான் சுதந்திரமாக காஷ்மீரில் எங்கும் செல்வேன், என்னுடன் பத்திரிக்கை, மீடியா அணியினர் வரவேண்டும் எனக்கேட்டேன், எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்ப பெற்றுக்கொண்டது அந்த அமைப்பு என்றுள்ளார்.
தன்னை அழைத்தது தனியார் அமைப்பான பெண்களின் பொருளாதார மற்றும் சமூக ஆலோசனை அமைப்பு (Women’s Economic and Social Think Tank – WESTT) என்றும், இந்த பயணத்துக்கான செலவை, அணிசேர ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம் செய்கிறது, இவர்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது எனத்தெரியவில்லை. காஷ்மீர் மாநிலம் மிக மோசமான நிலையில் உள்ளது. அது நன்றாக உள்ளது என உலகத்துக்கு காட்ட மோடி ஒரு விளம்பரம் செய்ய இப்படி ஏற்பாடு செய்துள்ளார் என வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய எம்.பிக்கள் வருகைக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கும் எந்த சம்மந்தமும்மில்லை, தனி அமைப்பு ஒன்று இவர்களை அழைத்துவந்துள்ளது என அறிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை. அப்படியாயின் அந்த அமைப்பை நடத்துவது யார் ?, அவர்கள் அழைத்து வருபவர்களுக்கு காஷ்மீர் செல்ல எப்படி அனுமதி தந்தீர்கள் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும்.
தற்போது அந்த அமைப்பு பற்றிய தகவல்கள் தான் இந்திய – ஐரோப்பிய மீடியாக்களில் பேசும் பொருளாகியுள்ளது. இந்த அமைப்பை நடத்துபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெல்ஜியத்தில் வசிக்கும் மேடி சர்மா என்கிற பெண்மணி. தனது டுவிட்டர் பக்கத்திலேயே சர்வதேச தொழில்துறை தரகர் என அறிவித்துக்கொண்டு அமைப்பு நடத்துகிறார்.
இவர் தான் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 30 எம்.பிக்களுக்கு மின்னஞ்சல் மூலமாக, இந்திய பிரதமர் மோடியை பற்றி போற்றி புகழ்ந்து எழுதி, அவருடன் சந்திப்பு பின்னர் காஷ்மீர் பயணம் குறித்து கூறியுள்ளார். சுதந்திரமாக காஷ்மீரில் வலம் வர விரும்புகிறோம் என கிரிஸ்டேவிஷ் சொன்னது போல் மேலும் இருவர் சொல்லியுள்ளனர். இதனால் அவர்களுக்கு தரப்பட்ட அழைப்பை திரும்ப பெற்றுக்கொண்டு 27 எம்.பிக்களை அக்டோபர் 28ந்தேதி டெல்லி அழைத்து வந்துள்ளார். வந்தவர்கள் அனைவரும் ஐரோப்பாவில் வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், வலதுசாரி தீவிரவாதிகளுக்கு உதவினார்கள் என்கிற குற்றச்சாட்டு கொண்டவர்களும் இங்கு வந்துள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
வெளியுறத்துறை என்பது வெளிநாட்டு அரசாங்கத்திடம் ஒப்பந்தங்கள் போட வேண்டும், தொழில் கூட்டு வைக்க வேண்டும், தொழில் தொடங்க தொழிலதிபர்களை தன் நாடு நோக்கி வரவேற்க வேண்டும் என ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் அரசு துறைகளை நேரடியாக அனுக முடியாத பட்சத்தில் இப்படிப்பட்ட என்.ஜி.ஓக்களை அணுகி அவர்கள் மூலம் அங்குள்ள அரசின் உயர் மட்டத்தில் இருப்பவர்களை சரிக்கட்டி தங்கள் காரியத்தை சாதிக்கும். இதுயெல்லாம் வெளியுலகத்துக்கு தெரியாமல் மறைமுகமாக நடக்கும்.
அப்படித்தான் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மீடியாக்களில் நல்ல விதமாக பேசவைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடாளமன்ற உறுப்பினர்களை இந்தியாவுக்கு அழைத்து வர, அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண் தொழில்துறை புரோக்கரை மறைமுகமாக மோடி அரசாங்கம் அணுகி காரியத்தை முடித்துள்ளது, தற்போது அது வெளிநாட்டு எம்.பியால் வெளியாகி, சர்ச்சையை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது என்கிற பேச்சு எழுந்துள்ளது.