அக்டோபர் 30 நவம்பர் 2 நக்கீரன் இதழில் "குழந்தைக்காக கதறிய தமிழகம் ! பறி போன உயிர்! துண்டான உடல்! 80 மணி நேரம் நடந்தது என்ன?' என்கிற அட்டைப்பட கட்டுரை வெளியானவுடன் சென்னையில் பேரிடர் மீட்பு மற்றும் வருவாய் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "மத்திய அரசின் கடுமையான விதிமுறைகள் இருப்பதால் உடலை காட்டவில்லை, முக்கியமான பாகங்களை மீட்டோம்' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 2-5 இதழில் "ஆழ்துளைக் கிணறு கல்லறை! சிறுவன் மீட்பில் புதைந்த உண்மைகள்' என்கிற தலைப்பில் ஆழ்துளைக் கிணற்றிற்கு சுஜித் அம்மா-அப்பா ஆகியோர் அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதழ் வெளியான அன்று காலையில் மதுரையில் "சுஜித் மரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து கிடையாது. தனியாருக்கு சொந்தமான இடத்தில், பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்து விட்டது'' என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.
இதற்கிடையில் உடலை காட்டினார்கள்! ஆனால் முழுமையாக காட்டினார்களா? என்கிற நமது கேள்விக்கு "அதைப் பற்றி பேச வேண்டாம்' என்று சுஜித் பெற்றோர் மறுத்த நிலையில் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மணப்பாறை வட்டாட்சியர் தமிழ்கனி ஆகியோர் சகிதமாக பெற்றோரிடம் நேரில் வழங்கினார்.
அப்போது பேசிய கலெக்டர் சிவராசு "ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது. மீட்புப் பணி குறித்து தமிழக முதல்வர், அமைச்சர்களிடமும் என்னிடமும் தொலைபேசியின் வாயிலாக கேட்டு வந்தார். இவ்வளவு முயற்சிகள் செய்தும் குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை. குழந்தையின் சிறு திசுவை உடல் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்; இன்னும் சில தினங்களில் சுஜித் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும். டி.என்.ஏ. பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அறிக்கைகள் கிடைத்தால் சுஜித் உடல் உறுதி செய்யப்படும்'' என்றார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். வி.சி.க. தொண்டர்களும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர். சுஜித் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மணப்பாறை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் வெங்கடாசலம் கஸ்டடியில் இருக்கிறார்கள். அவர்கள் மேலும் வாய் திறக்கக்கூடாது என்பதற்காக போலீஸார், "இது சந்தேக மரணம்' என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்த விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.