Skip to main content

சாதித்த தலைவரா? சாதித்  தலைவரா?

Published on 30/10/2019 | Edited on 29/10/2019

சகமக்களுக்காக உழைத்தவரை 'சாதி' என்ற  சிறிய அடையாளத்துக்குள் அடக்கிவிட்டனர். தேசியம், தெய்வீகம் என்ற பரந்துபட்ட மனப்பான்மை இன்று ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கப்படுகிறது. சிலர் தங்களின் அரசியல் வாழ்விற்கு அவரை பயன்படுத்திக்கொண்டுவிட்டதால்தான் அவருக்கு இந்த நிலை. சிலைகள் உயரமாக அமைக்கப்பட்டன, ஆனால் அவரின் அறநெறி கருத்துகள் மண்ணோடு மண்ணாக மறைக்கப்பட்டுவிட்டன. அவர் தனது வாழ்நாளில் சாதிப்பெருமையோ, சாதிய மனப்பான்மையோ இல்லாதவராகவே இருந்தார். சாதியவாதியாகவும், மதவாதியாகவும் காட்டப்படும் முத்துராமலிங்கர் தனது வாழ்நாளில் சாதிய மனப்பான்மை கொண்டிருந்தாரா அல்லது தேசியம், தெய்வீகம் என பரந்துபட்ட மனப்பான்மை கொண்டிருந்தாரா?

 

Pasumpon muthuramalingar


ஒரு சாதிக்காரரா முத்துராமலிங்கர்?


முத்துராமலிங்கர் பிறப்பால் ஒரு சாதியைக் கொண்டிருந்தாரே தவிர, வாழ்வால் அவர் அப்படியில்லை. ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்காக அவ்வளவு உழைத்துள்ளார். தனது சொந்த சாதிக்காரர்களையே பல இடங்களில் தோற்கடித்துள்ளார். பின்வரும் சம்பவங்களெல்லாம் அதற்கு உதாரணங்களே.


ஜமீன்தார் ஒழிப்பு முறை


கிட்டத்தட்ட 600 ஏக்கர் நிலத்துடன் ஜமீன்தாராக இருந்த முத்துராமலிங்கர் ஜமீன்தார் ஒழிப்பு முறையை முன்னெடுத்தது அவரது மேன்மையை சொல்லும் விஷயம்.   அவரது சுயசாதியினரும் மிகப்பெரிய ஜமீன்தார்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  1938ம் ஆண்டு ஜமீன்தார் ஒழிப்பு முறை போராட்டம் நடைபெற்றதில் முத்துராமலிங்கரின் பங்கு முக்கியமானதாகும். அதனால் பாதிக்கப்படுவது தனது இன மக்கள் எனத்தெரிந்தும் அவர் அதை முன்னெடுத்தார். மேலும் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் உழுது வாழ்பவர்களாக அரசு ஆக்குமானால் அவர்கள் பிறருக்கு கைகட்டி வாழும் நிலையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாக வாழ்வார்கள் என்றும், அரசு பயன்பாடு இல்லாத நிலங்களை பணக்காரர்களுக்கு கொடுப்பதை நிறுத்திவிட்டு, ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் அப்படி கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும், வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்தால் சாதிவேற்றுமைகளை களைய முடியும் என்றும் கூறினார். பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் சாதி வேற்றுமைகளைக் களையலாம் என முத்துராமலிங்கர் கருதினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


ஆலயநுழைவு போராட்டம்


மதுரையில், அதே ஆண்டில் நடைபெற்ற அரிசன சேவா சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவது என்றும், அரிசன நல நடவடிக்கைகளுக்காக ஒரு குழுவைக் கேரளாவிற்கு அனுப்புவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   இந்தக் குழுவில் முத்துராமலிங்கரும் இருந்தார். மதுரை மீனாட்சி அம்மன்  கோவில்  நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் இந்து சனாதனவாதிகள்அந்த முயற்சியைத் தடுக்க முயற்சித்தனர்.  இந்த நிலையில்  ராஜாஜி, முத்துராமலிங்கரின் உதவியை நாட சொல்லி,  வைத்தியநாதருக்கு ஆலோசனை வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கர் ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அதில் 'எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, எனது மக்கள் தருவார்கள். பிரச்சனை எழுப்ப   நினைக்கும் சமூக விரோதிகளை எச்சரிக்கிறேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நானே சந்திப்பேன்' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியாக அந்த ஆலய நுழைவு போராட்டம் வெற்றிகரமாக  நடைபெற்று முடிந்தது.


குற்றப்பரம்பரை சட்ட ஒழிப்பு போராட்டம்


பிரிட்டிஷ் அரசு 1911இல் குற்றப்பரம்பரைச் சட்டத்தை கொண்டு வந்தது. இதன் கீழ் 89 ஜாதிகளை சேர்ந்தவர்களை குற்றம் உடையவர்களாக அடையாளப்படுத்தியது. இதன்மூலம் அவர்கள் மிகுந்த கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இது 1927லும் தொடர்ந்தது. இதனை எதிர்த்து முத்துராமலிங்கர் போராட்டம் நடத்தினார். "குற்றம் செய்பவர்களை தண்டிப்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவர் குற்றவாளி என்று அடையாளப்படுத்துவது பெரும் தவறு" என்று கூறி அந்தச் சட்டம் தொடரக்கூடாது என்பதையும் வலியுறுத்தினார். இது அவரது சாதிக்காரர்களுக்காக மட்டும் நடத்தப்பட்ட போராட்டம் அல்ல, அனைவருக்குமானது. இந்த சட்டத்தால் பல்வேறு சாதியை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க ஆங்கில அரசு இந்த சட்டத்தைப் பயன்படுத்தியது. இமானுவேல் சேகரன் கொலைக்கும், முத்துராமலிங்கருக்கும் தொடர்பில்லை என்பதை நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பதையும், முதுகுளத்தூர் கலவரமும் அவ்வாறே அரசியல் சூழ்ச்சியால் நடைபெற்றது என்றும் அறிந்தவர்கள் விளக்குகின்றனர்.


"எல்லா சாதியும் சேர்ந்த எல்லா மக்களுக்குமே ஆண்டவன்தான் தகப்பன். மனிதனாக பிறந்து விட்டால் வயதில்தான் வித்தியாசம், சாதியில் அல்ல. சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் பொருளே இல்லை" - இது முத்துராமலிங்கர் சொன்னது. தனக்காக எதையும் எதிர்பாராதவர், நாட்டுக்காக சகலத்தையும் துறந்தவர் வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர். உண்மைகளை மறைக்காமல் வெளியிடுவதில் தனித் துணிச்சல் பெற்றவர், சுத்தத் தியாகி என பெரியாரால் போற்றப்பட்டவர்.


சரி, அவர் சாதிக்காரர் இல்லை, ஆனால் அவர் எங்கள் மதம்


இப்படி நீங்கள் அவரை உரிமை கொண்டாடிச் சுறுக்கினால் அதுவும் தவறுதான். ஏனென்றால் அவர் தன்னுடைய வாழ்வில் இந்து, கிறித்துவம், இஸ்லாம், புத்தம் என பல மதநூல்கள் குறித்தும் கற்றறிந்திருந்தார். கற்றறிந்தது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் கிறித்துவ, இஸ்லாமிய சமயக்கொள்கைகளை மேற்கோள்காட்டியும் பேசக்கூடியவர், ஒருமுறை பர்மா சென்றபொழுது புத்த சமயத்தின் 12 கிரந்தங்களையும் அதன் பொருள் குறித்தும் விளக்கமாகப் பேசி அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார். வீரசோழன் என்ற ஊருக்கு சென்றவர், 18 சான்றுகளுடன் முகமது நபிகள் குறித்து பேசியுள்ளார். மேலும் பர்மா சென்றிருந்தபோது புத்தவழக்கப்படி வரவேற்க ஏற்பாடு செய்தனர். அதாவது, பெண்கள் மண்டியிட்டு அமர்ந்து தங்கள் கூந்தலை தரையில் விரித்திருப்பர், அதன்மேல் முத்துராமலிங்கரை நடந்துவரக் கூறினர். அதற்கு அவர், “பராசக்தியின் வடிவமாக பெண்களைப் பார்க்கிறேன், தாய்குலத்தின் கூந்தல் மீது நடக்கச்சொல்லி என்னை வற்புறுத்தாதீர்கள்” எனக்கூறி மறுத்துவிட்டார். இந்து சமய கடவுள்களை போற்றிய அவர் இந்து சமயத்திலிருந்த மூடப்பழக்கங்களையும், சாதிய முறைகளையும் எதிர்த்தார். இப்படியாக அவர் அனைத்து சமயங்களை அறிந்தவராக, அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கைகளை மதிப்பவராகத் திகழ்ந்தார்.

 

Pasumpon muthuramalingar


புலிக்குளம் எஸ்டேட்டில் கம்பு, கேழ்வரகு, அரிசி சாதம் என சமையல் நடைபெறும். இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக ஹலால் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்படும். இஸ்லாமியர்களுக்கு ஹலால் செய்யப்பட்ட அசைவ உணவையே வழங்கவேண்டுமென முத்துராமலிங்கர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.


“சாதியிலே, மதங்களிலே, சாத்திரக் குப்பையிலே அபிமானித்து அலையாதீர்கள்", தொழில் அடிப்படையில் சாதி வந்தது என்று நம்பிய முத்துராமலிங்கர், "தொழில் மாறினால் சாதியம் மாறும், மரியாதையும் மாறும்” என்றும்,


“ஆன்மீகத்தின் அடிப்படையில் அநியாயம் செய்பவனைவிட, நாத்திகத்தின் பெயரில் ஒழுக்கத்தில் உயர்ந்தவனே உண்மையில் உயர்ந்தவன்” என்றார்.


முதுகுளத்தூர் கலவரம்:


1957ம் ஆண்டு பொதுத்தேர்தலில், முத்துராமலிங்கர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும், ஒருசேர வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் ஒருவர் உறுப்பினராக தொடர முடியாது என்ற சட்டத்தின் அடிப்படையில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்புவரை சிறிய பிரச்சனையாக இருந்த அது இடைத்தேர்தல் என்ற அறிவிப்பு வந்தபிறகு வளரத் தொடங்கியது. முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1937 ஆம் ஆண்டிலிருந்து முத்துராமலிங்கர் வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அவர் சசிவர்ணத்தேவர் என்பவரை வேட்பாளராக நிறுத்துகிறார். அதேநேரம் காங்கிரஸ் அந்த தொகுதியைக் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த தொகுதியில் தலித் மக்களின் வாக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் இரு கட்சிகளும் அந்த வாக்குகளை பெறும் முனைப்பில் இருந்தன. ஆளுங்கட்சியான காங்கிரஸ் அதில் சில சூழ்ச்சிகளை செய்தது.


மேலும் சாதி வெறுப்புணர்வுகளையும் தூண்டியது இருந்தும் முத்துராமலிங்கர் நிறுத்திய வேட்பாளர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே சிற்சில பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு, முதுகுளத்தூர் சமூக பதட்டம் உள்ள பகுதியாக மாறியது. இந்தநிலை குறித்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். காங்கிரஸ்க்கு வாக்களிக்காத சில சமூகத்தினரை வெளியூரில் இருந்து ஆட்களை கூட்டி வந்து மிரட்டுவதாகவும், அதனால் அந்த ஊர் மக்கள் ஊரைவிட்டு வெளியேறுவதாகவும், தாக்குதலிலிருந்து மற்றவர்களை காப்பாற்றுமாறும் கேட்டுக்கொண்டனர். இந்த செய்தி 4.9.1957 அன்று தினமணியில் இடம்பெற்றது.


இந்த மோதல்களுக்கு தீர்வு காணும் வழியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆர். பணிக்கர் செப்டம்பர் 10ம்தேதி, முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டமே கலவரத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாதிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மக்கள் பிரதிநிதிகளை மட்டும் அழைத்து இருந்தால் இந்த பிரச்சனை தொடர்ந்து இருக்காது என அறிந்தவர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே முத்துராமலிங்கர் கலந்துகொண்டிருந்தார், இது பின்னாளில் திரிக்கப்பட்டது. ஆனால் முக்குலத்தோர் சமூகம் சார்பாக கலந்து கொண்டவர் நவசக்தி என்பவர். இதேபோல நாடார் சமூகத்தின் சார்பாக பேரையூர் வேலுச்சாமி, கமுதி சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டனர். தலித் சமூகம் சார்பாக பேரையூர் பெருமாள் பீட்டர், இமானுவேல் சேகரன், வீரம்பல் வேதமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Pasumpon muthuramalingar


இக்கூட்டத்தில் முதலில் மூன்று பிரிவினரும் தனித்தனியே அழைத்து பேசப்பட்டனர். பின் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து கலந்தாலோசித்தனர். ஒவ்வொருவரும் அவரவரது தரப்பு கருத்துக்களைக் கூறினர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊராக சென்று மக்களை அமைதிப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு ஊராக சென்று மக்களை அமைதிப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. முத்துராமலிங்கர் இதற்கு ஆதரவு தெரிவித்தார், வேலுச்சாமி நாடார் இதை எதிர்த்தார், இமானுவேல் முதலில் ஒப்புக் கொண்டாலும், பிறகு அதை எதிர்த்தார். இதனால் மாவட்ட ஆட்சியர், எல்லோரும் சேர்ந்து அமைதி அறிக்கை வெளியிட வேண்டும் என்றார். அப்போது அதில் யாரெல்லாம் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழுந்தது. முத்துராமலிங்கர் எம்.பி. என்ற முறையில் நான் கையெழுத்து இடுகிறேன். அதேபோல் தலித் எம்.பி. என்ற முறையில் ஆறுமுகம் (காங்கிரஸ்) தலித் மக்களின் சார்பாக கையெழுத்திடட்டும். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சசிவர்ணத்தேவர் கையெழுத்திடட்டும், தலித் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தோப்புப்பட்டி பெருமாள் கையெழுத்திடட்டும் என்று கூறினார். இதன்மூலம் ஜாதி பிரதிநிதியாக இல்லாமல், மக்கள் பிரதிநிதிகள் இணைந்து அறிக்கைகள் வெளியிடட்டும் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால், பின்னாளில் இம்மானுவேலை அதில் கையெழுத்திட வைக்கக்கூடாது என்றுதான் முத்துராமலிங்கர் அப்படி கூறினார் என்றும் கூறுகின்றனர்.


இந்த கூட்டம் முடிந்தவுடன் முத்துராமலிங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் அவரவர் வாகனத்தில் அவரவர் ஊர் திரும்பினர். இமானுவேல் பேரையூரில் தங்கிவிட்டு, மறுநாள் பரமக்குடி சென்றுள்ளார். அதுவரை அங்கு எந்தவிதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நிகழவில்லை. அதற்கடுத்த நாள் 11.9.1957 அன்று இரவு 9.30 மணிக்கு இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு பதட்ட சூழ்நிலையை கலவரமாக மாற்றியது. கலவரம் உடனடியாக தொடங்கவில்லை, இம்மானுவேலின் உடல் 12ம் தேதி பரமக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு பரமக்குடி அருகே உள்ள ஒரு ஊரில் திருவிழா நடந்தது, அந்தப் பகுதி இருதரப்பு மக்களும் சம அளவில் வாழும் பகுதி, பொதுவாக அந்த காலகட்டங்களில் நடக்கும் நாடகங்களில் முத்துராமலிங்கர் குறித்து பாடுவதும் அதற்கு கலைஞர்கள் பரிசு பெறுவதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்தது. அதேபோல அந்த நாடகத்திலும் முத்துராமலிங்கர் குறித்து புகழ்ந்து பாடப்பட்டது, அதை அங்கிருந்த சிலர் எதிர்த்தனர். இதுவே வாக்குவாதமாக மாறி பின்னர் கலவரமாக மாறியது. இந்த பிரச்சனையில் காங்கிரஸ் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது எனவும், அதை வளர்க்க நினைத்தது எனவும் கூறலாம். அதனால்தான் அந்தப் பகுதியோடு முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை பெரிய கலவரமாக மாறியது. காவல்துறை ஆய்வாளர் ‘ரே’ என்பவர் இம்மானுவேல் கொலையில் சிறிதும் தொடர்பில்லாத ஐந்து மறவர் சமுதாய இளைஞர்களை கண்களைக்கட்டி கீழத்தூவல் கிராமத்தில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதைப்பார்த்த அக்கிராம தலித் மக்கள் காவல் துறைக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர். இதேபோல பல இடங்களில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது, இருவரை படுகாயப்படுத்தியது. இதுபோல தொடர்ந்து சில சம்பவங்கள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து கலவரமும் பெரிதாகியது.


இமானுவேல் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இருவருக்கும், இமானுவேலுக்கும் முன்னரே விரோதம் இருந்தது, அதாவது ஒரு வழக்கில் அவ்விருவருக்கும் எதிராக  இமானுவேல் சாட்சியளித்தது தொடர்பாக முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெற்ற, தலித் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை தலித் மக்களின் காப்பாளராக அங்கீகரிப்பதா, அல்லது இம்மானுவேலை அங்கீகரிப்பது என்பது மட்டுமே பிரச்சனையாக இருந்தது. மேலும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போதும் முத்துராமலிங்கருக்கும் இமானுவேல் சேகரனுக்கும் இடையில் கொலை செய்யும் அளவிற்கு எந்த மோதல்களும் இருந்ததாக தெரியவில்லை.


அதைத்தொடர்ந்து 28.9.1957 அன்று தமுக்கம் மைதானத்தில் பேசிய முத்துராமலிங்கர், மற்ற இன மக்களை தாக்கிப் பேசாமல், காங்கிரசையும், காமராஜர் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் எனது சொந்த ஊரில் எந்த சச்சரவும் ஏற்படவில்லை இருந்தும் பசும்பொன்னில் எனது சமையல்காரர்களையும், வேலைக்காரர்களையும், சொந்தங்களையும் கைது செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அந்த உரையின் முடிவில், “என்ன நடந்தாலும், தலித் மக்கள்மீது தாக்குதல்கள் நடத்தினால், அது எனது நெஞ்சைப் பிளந்து, இதயத்தில் வழியும் ரத்தத்தைக் குடித்ததற்கு சமமாகும்” எனக் கூறினார். இந்த பேச்சு கலவரத்தின் உக்கிரத்தைக் குறைத்தது. இந்த மேடைப்பேச்சை முடித்துவிட்டு தமுக்கம் மைதானத்திலிருந்து, வைகை பாலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுதுதான் முத்துராமலிங்கர் முதுகுளத்தூர் பகுதியில் நடந்த கலவரத்தை தொடர்புபடுத்தி, இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன் நினைவாகவே கோரிப்பாளையத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டது. பிறகு முத்துராமலிங்கர் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதுகுளத்தூர் கலவரத்திற்கு பின்னால் அரசியல் ஓங்கி இருந்தது என்பதை நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.


முத்துராமலிங்கரும், காமராஜரும்:


1936ஆம் ஆண்டு நகரசபைத் தேர்தல் நடந்தது அப்போது, விருதுநகரில் காமராசர் போட்டியிட முத்துராமலிங்கர் விரும்புகிறார். காமராஜரின் அம்மாவிடம் சென்ற அவர், “அம்மா உங்கள் மகனை தேர்தலில் நிறுத்த நினைக்கிறேன். உங்கள் வீட்டை உங்கள் மகன் பெயருக்கு மாற்றிக் கொடுத்தால், சொத்துவரி கட்டி அவரை நிறுத்துவேன்” என்றார். இன்றுள்ளது போல் 18 வயது நிரம்பியவர்கள் யாராயினும் தேர்தலில் நிற்க முடியாது, சொத்துவரி கட்டியவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அதனால்தான் முத்துராமலிங்கர் வீட்டை மாற்றி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா, “ஐயா நான் விதவை பெண், எனக்கு ஒரு மகள் இருக்கிறாள், அந்த வீடு இருந்தால் மட்டுமே அவளுக்கு திருமணம் நடத்த இயலும் என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கூறுகிறார். அதன்பின் நான்கு ஆடுகளை வாங்கி, அதற்கு சொத்து வரி கட்டி காமராசரை தேர்தலில் நிறுத்துகிறார் முத்துராமலிங்கர். அதேபோல இன்னொரு நகர சபைத் தேர்தலின்போது, காங்கிரசுக்கும், சோஷியலிஸ்ட் கட்சிக்கும் போட்டி. சோஷியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், காமராஜர் நிற்கக் கூடாது என்பதற்காக அவரை கடத்திச் சென்று விடுகின்றனர். இதையறிந்த முத்துராமலிங்கர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், “நான் இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து இறங்குவதற்குள் காமராசர் இங்கே வர வேண்டும். இல்லையேல் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும்” என எச்சரிக்கிறார். கூட்டம் முடிவதற்குள் காமராஜர் மேடைக்கு வருகிறார். அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் ராஜாஜியா, காமராஜரா என்ற நிலை ஏற்பட்டபோது, முத்துராமலிங்கர் காமராஜரை முன்மொழிந்து காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராக பொறுப்பேற்க உதவினார். இந்த செய்தி காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய மாநாடு குறித்த நூலில் உள்ளது.


தனது வளர்ப்புத்தாய் ஆயிஷா பேகத்திற்கு கடைசிவரை நன்றியுடன் இருந்தது, பல்வேறு சிக்கல்கள், தடைகளுக்கிடையே அவரது இறப்பிற்கு சென்று மரியாதை செய்தது என பலவற்றைக் கூறலாம். அவரது பிறப்பு முதல் இறப்புவரை எங்கும் அவர் இந்து மதத்திற்குள் அடங்கவில்லை. தனது தாயை இழந்து ஆறுமாதக் குழந்தையாக இருந்த அவருக்கு தாய்ப்பாலூட்டி வளர்த்தது ஆயிஷா பேகம் எனும் இஸ்லாமியர். அவர் படித்தது கிறித்துவ பள்ளி, கல்லூரிகளில். அவரது இறந்த உடல்கூட அவர் சார்ந்த சாதியையோ மதத்தையோ தொடர்புபடுத்தவில்லை. அவர் இறந்த உடல் உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அதை முன்னின்று நடத்தியவர்கள் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அன்று கூடிய கூட்டமும், அவரை தேர்தலில் வெற்றிபெற வைத்த கூட்டமுமே சாட்சி அவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதற்கு.


இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது, இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்கள் பலர் பாகிஸ்தானுக்கு சென்றனர். அந்த சமயம் முத்துராமலிங்கர் இஸ்லாமியர்களுக்கு, “யாரும் இங்கிருந்து செல்ல வேண்டாம், நம் தாய் தமிழகத்தை விட்டு யாரும் போகவேண்டாம்” என வேண்டுகோள் விடுத்தார்.​

 

Pasumpon muthuramalingar



இப்படியாக அவர் இருக்கும்வரை, அவரை சாதியோ, மதமோ கைப்பற்றவில்லை. அவர் இறந்தபின்பு அனைத்தும் மாறியது. தங்களின் சொந்த அரசியல் வாழ்விற்காக அவரை சாதி அடையாளமாக மாற்றினர், அவரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும். ஒரு பெருந்தலைவரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்பட வேண்டிய விழா, 144 தடை உத்தரவுடன் கொண்டாடப்படும் அவலத்தை ஏற்படுத்திவிட்டனர். சாதி அரசியல் செய்பவர்களுக்கு அவர்கூறுவது இதுதான்…


சாதி என்பது பச்சை அநாகரிகம் சாதியையும் நிறத்தையும் பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை. 


சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும், சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை, ஆன்மீகத்துக்கும் இல்லை.