முதல் மரியாதை பார்க்கும் ஜெயலலிதா?
சிகிச்சை வீடியோவின் பின்னணி இசை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ள நிலையில், இன்று காலை திடீர் பரபரப்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
மருத்துவமனை போன்ற அமைப்பில் கட்டிலில் சாய்ந்து படுத்திருக்கும் ஜெயலலிதா, திரவ உணவை ஸ்ட்ரா வழியாக அருந்துகிறார். குறுகிய அளவில், ஓரிரு நொடிகளே நீளும் வீடியோ, மீண்டும் மீண்டும் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் இளைத்து காணப்படுகிறார் ஜெயலலிதா. அருகில் ஒரு சாதாரண கட்டில் இருக்கிறது. கட்டிலுக்கு பின்புறம் இரண்டு கடவுள் படங்கள் இருக்கின்றன. பின்னணியில் ஜன்னலுக்கு வெளியே மரங்கள் இருக்கின்றன. பின்னணியில் சிவாஜி கணேசன் - ராதா நடித்த 'முதல் மரியாதை' திரைப்படத்தின் பின்னணி இசை (நீ தானா அந்தக் குயில்) ஒலிக்கிறது. ஜெயலலிதா, முதல் மரியாதை திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம்.
ஜெயலலிதா மரணம் பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபொழுதெல்லாம் வெளியிடப்படாமல் காக்கப்பட்ட வீடியோக்களில் மிகக் குறுகிய பகுதி, நாளை ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடக்கிறது. இந்த வீடியோ எப்பொழுது எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது, சிகிச்சையின் எந்த கட்டத்தில் எடுக்கப்பட்டது, என்று இன்னும் பல கேள்விகள் தொடர்ந்து எழுந்து நிற்கின்றன.