நாடு முழுவதும் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 6050 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக தற்போது வரை 28 ஆயிரத்து 303 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களும் மீண்டும் கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வரும் நிலையில், புதுச்சேரி மாநிலமும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவிக்கையில், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி இருப்பதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களான கடற்கரை, சந்தை, திரையரங்குகள் போன்ற பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்ட்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் பேரிடருக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்து கையிருப்பு, ஆக்சிஜன் இருப்பு போன்றவை மாக் ட்ரில் மூலம் கண்காணிக்கப்பட இருக்கிறது” எனக் கூறினார்.