பல சவால்களுக்கு மத்தியில் சமத்துவம், மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை முதன்மையாக கடைபிடித்தார் ஜவஹர்லால் நேரு. ஆனால் இன்று அந்த முதன்மையானவை எல்லாம் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்டமைப்புகள் கேள்வி குறியாக்கபடுகின்றன. அதிக படிப்பறிவின்மை, மதவாதம், சாதிய பிரச்சனைகள் ஆகியவற்றை கடந்து இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார் நேரு. இன்று அடிப்படைவாதம் முன்னெடுக்கப்பட்டு நாம் பின்னோக்கி செல்கிறோமா என்ற அச்சம் மனதில் எழுகிறது.
ஜவஹர்லால் நேருவுக்கு பதில் படேல் வந்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் தவறு செய்துவிட்டார், பொருளாதாரம் அழிந்து விட்டது, தவறான வெளியுறவு கொள்கைகளை கடைபிடித்தார் என்று சிலர் கூக்குரலிடுகின்றனர். இன்று அப்படி சொல்லும் அவர்கள், இந்திய ஜனநாயகத்தை செதுக்கிய நேரு போன்றவர்களை என்ன வேண்டுமானாலும் சொல்ல ஜனநாயக உரிமையைக் கொடுத்ததும் நேரு மற்றும் அவரது சகாக்கள்தான். நேருவின் ஆட்சி காலங்களில் தவறுகளே நடக்கவில்லை என சொல்லவில்லை. ஆனால் தொலைநோக்கு திட்டங்களுடன் தேசத்துக்கு எது நன்மை பயக்குமோ அந்த விஷயங்களை மட்டுமே செய்தார்.
சமீபத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சுமார் ரூ.3000 கோடியில் சிலை நிறுவப்பட்டது. பல கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் நம் நாட்டில், இது போன்ற நிகழ்வுகள் பாமர மற்றும் நடுத்தர மக்களை வெறுப்படைய செய்கின்றன. படேல் அவர்களை காங்கிரஸ் கட்சி பெருமைப்படுத்த தவறிவிட்டதால், இது அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்திய மக்களின் அனைத்து அடிப்படை பிரச்சனைகளும் சரிசெய்யபட்ட பின்னர் இந்த சிலை அமைக்கபட்டால் இந்தளவு எதிர்ப்பு இருந்திருக்காது.
படேல் குடும்பத்தின் உறுப்பினர்களே இந்த சிலை பற்றி “படேல் அவர்களே இதை விரும்பமாட்டார்” என்று கருத்து தெரிவித்தனர். அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தார் நேரு. இன்று ஆடம்பர நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றன. நேரு காண விரும்பிய இந்தியா இன்று தலைகீழாக மாறி பல விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
ஒட்டு அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, இந்தியாவின் முன்னேற்றமே ஒரே இலக்கு என்று நேரு மற்றும் அவரது சகாக்கள் பணிபுரிந்தனர். இன்று அனைத்தையும்விட ஒட்டு அரசியல் மட்டுமே ஒரே இலக்காக உள்ளது. அதற்காக மட்டுமே அரசியல் நடைபெறுவதாக மக்கள் ஆழமாக நம்ப தொடங்கிவிட்டனர். ஒட்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகளால், அரசியல் மீது மக்களுக்கு தவறான எண்ணம் அதிக அளவில் ஏற்பட்டுவிட்டது.
எந்த ஒரு காரணம் கொண்டும் நாட்டில் வகுப்புவாதம் தலைதூக்கி விடகூடாது என்பதில் உறுதியாக இருந்தார் நேரு. சிறுபான்மையினர்களை தவறாக பார்க்கும் போக்கை நேரு அறவே விரும்பவில்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும் இடையில் சமத்துவம் மலர வேண்டும் என விரும்பினார் நேரு. ஆனால் இன்று அரசியல் காரணங்களுக்காக மதவாதமும், சாதிய அரசியலும் முன்னிறுத்தப்படுகிறது. இதில் இன்னொரு மிகப்பெரிய விஷயம் எதுவென்றால் இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியவர்கள், இதை கட்டுபடுத்த வேண்டியவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், மதவாதம் மற்றும் சாதிய பிரச்சனைகளின்போது அமைதியாக இருக்கின்றனர் அல்லது அதை ஆதரித்து குரல் கொடுக்கின்றனர். இது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நேருவின் காலத்தில் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள்கூட அமைச்சர்கள் ஆக்கபட்டனர். சமூகம் சார்ந்த விவாதங்கள் நடைபெற்று தீர்வுகள் எட்டப்பட்டன. அந்த ஆரோக்கியமான விவாதங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தது. ஆனால் இன்றோ விவாதங்கள், அரசியல் என்ற ஒன்றை தவிர எதையும் கருத்தில் கொள்ளவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் நசுக்கப்படுகின்றனர். வெறுப்பு அரசியல் மேலோங்கி வருகின்றது. இது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது.
வேறு எந்த பிரதமரும் சந்திக்காத பல சவால்களை சந்தித்தார் நேரு. பல மொழி பேசும் மக்கள், சாதி, மதம், மூடநம்பிக்கைகள், எழுத்தறிவின்மை ஆகியவற்றையும் கடந்து நவீன இந்தியாவை சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவாக்கினார் நேரு. மற்ற நாட்டின் பிரதமர்கள் அவர்களது தேசத்தை முன்னேற்றுவதில் சிறந்து விளங்கினர். நேரு நம் நாட்டின் முன்னேற்றத்துடன் நின்று விடவில்லை. நம் நாட்டுடன் சேர்ந்து உலக நாடுகளும் அடுத்த கட்டத்திற்கு செல்வதை விரும்பினார்.
நேருவின் இந்தியா பற்றிய கனவுகள் இன்று அரசியலை மட்டுமே மையப்படுத்தி செயல்படும் நபர்களால் சிதறுண்டு வருகின்றன. சகிப்புதன்மையில் சிறந்தவர்கள் நேரு காலகட்டத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள். அமெரிக்கா பத்திரிக்கையாளர் படேல் அவர்களை நோக்கி “3 மில்லியன் மக்கள் இந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு படேல் “இந்த கூட்டம் நேருவுக்காக வந்த கூட்டம், எனக்காக அல்ல” என்று கூறினார். ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து நாட்டின் வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டனர். இன்று நிலைமை தலைகீழாக உள்ளது.
ஒரு வேளை, இவர்கள் சொல்வதுபோல் ஜவஹர்லால் நேருவிடம் குற்றம் கண்டுபிடித்தே ஆகவேண்டுமென்றால், பல நாடுகளைப் போல வறுமையையும், படிப்பறிவின்மையையும் மட்டுமே தேர்தல் நேர பிரச்சனைகளாக பேசாமல், மதம், ஊழல் போன்றவற்றை முக்கிய பிரச்சனைகளாக பேசும் அளவிற்கு வறுமையையும், கல்வியறிவின்மையையும் பின்னுக்குத் தள்ளியதுதானோ என்னவோ?