தேர்தல் பரபரப்பு தமிழ்நாட்டையே ஆட்கொண்டுள்ளபோது, ஒரு வரலாற்றை, ஒரு பழமையான கலையின் நவீன வடிவத்தில் கொடுத்துள்ளார் சங்ககிரி ராஜ்குமார். சங்ககிரி ராஜ்குமார் தமிழ் திரைப்பட இயக்குனர், வெங்காயம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தற்போது இவர் மூன்றாம் நந்திவர்மனின் வாழ்க்கையை 'நந்திக்கலம்பகம்' என்ற பெயரில் தெருக்கூத்து வடிவில் நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சி தி.நகரிலுள்ள பி.டி. தியாகராயர் ஹாலில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது. அவர் நக்கீரனுக்கு அளித்த பேட்டி...
கம்போடியாவில் நடைபெற்ற தெருக்கூத்து நாடகத்திற்கு மக்களின் வரவேற்பு எவ்வாறாக இருந்தது?
கம்போடியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 86 நாடுகளிலிருந்து மக்கள் வந்திருந்தார்கள். ரொம்ப பெரிய வரவேற்பு கிடைத்தது. இவ்வளவு விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக இதை செய்யமுடிந்தது என்பது அவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இரண்டு மணிநேரம் நிகழ்ச்சி நடந்தது. அந்த இரண்டு மணி நேரமும் கைதட்டி, விசிலடித்து அவ்வளவு நெகிழ்ச்சியாக பார்த்தனர்.
வரவேற்புகள் எப்படி இருக்கிறது, இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வாய்ப்பிருக்கிறதா?
இப்போது நல்ல வரவேற்பு இருக்கிறது, மரபுக்கலைகளில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்திருப்பதால் வரவேற்பு அதிகமாகியிருக்கிறது. நாமும் நமது தெருக்கூத்து கலையை காலத்திற்கேற்றாற் போல் மாற்றியுள்ளோம். முன்பெல்லாம் ஒரு இரவு முழுக்க நடத்துவார்கள் அதை அப்போது அனைவரும் பார்த்தார்கள், ஆனால் இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் 2.30 மணிநேரத்திற்கு மேலானால் சலிப்படைகிறார்கள். அதனால் தெருக்கூத்தையும் தற்போதைக்கு ஏற்றவாறு நேரத்தை குறைத்து, திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு ஒரு அறிமுகப்படுத்தும் நிகழ்வாகத்தான் சென்னையில் நடத்துகிறோம். வாய்ப்பிருக்குமானால் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும்.
நந்திவர்மனை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
இப்போது புராணக்கதைகளைத்தாண்டி எதை எடுப்பது என நினைத்தபோது, மொழிக்காக உயிர்தியாகம் செய்தவர்களை வைத்து எடுக்கலாம்னு முடிவுசெய்தோம். தமிழ் மொழிக்காக அன்றிலிருந்து, இன்றுவரை நிறையபேர் உயிர்தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களில் முதலாவதாக இருப்பது நந்திவர்மன்தான். அதனால்தான் அவரிலிருந்து துவங்குவோம் எனத் தொடங்கினோம். இந்த நிகழ்ச்சியை முதலில் கம்போடியாவில் நடத்தக்காரணம் நந்திவர்மனின் தாத்தா முதலாம் நந்திவர்மன் கம்போடியாவிலிருந்து இங்கு வந்தவராவார். அதனால்தான் அங்கிருந்து தொடங்கினோம்.
தெருக்கூத்து வடிவில் கொடுக்க என்ன காரணம்?
நான் திரைத்துறையில் இருந்தாலும், குடும்பம் தெருக்கூத்தில்தான் இருக்கிறது. அப்பா, தாத்தா உள்ளிட்டோர் தெருக்கூத்து கலைஞர்கள்தான். சின்னவயதிலிருந்தே தெருக்கூத்து கலையை கற்றிருக்கிறேன், ஆடியிருக்கிறேன். மற்ற பொழுதுபோக்குகள் அனைத்தும் காலத்திற்கேற்ப மாறிவிட்டன. திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் கறுப்பு, வெள்ளையிலிருந்து இன்று ஐ-மேக்ஸ் வரை காலத்திற்கேற்றாற்போல் மாறியிருக்கிறது, ஒலியிலும் அதுபோலத்தான். ஆனால் நமது பாரம்பர்ய கலைகள் ஒரே இடத்தில் தேங்கிவிட்டன. நாம் அதைக்கொஞ்சம் மாற்றி இப்போதிருக்கும் ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் செய்துள்ளோம்.
புராணங்களைவிட முக்கியமானது இங்கு நிறைய இருக்கிறது, அவற்றையெல்லாம் தெரியப்படுத்தவேண்டி இருக்கிறது. படிப்பறிவு இல்லாத மக்களுக்கு கூட ராமாயணம், மகாபாரதத்தின் முழுக்கதையும் தெரியும், அவையெல்லாம் இவ்வாறுதான் போய் மக்களை அடைந்தன. அதேபோல்தான் பல முக்கிய விஷயங்களை இதன்மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில்தான் தெருக்கூத்து கலையை கையிலெடுத்தோம்.
இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு ‘புக் மை ஷோ’வில் கிடைக்கிறது.