தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதி காணொளி காட்சி மூலம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில பாரத தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது, ''தேசிய மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக இருக்கிறது. நாட்டின் நலனுக்காக உழைக்காதவர்களுக்கு, புகலிடமாக தி.மு.க உள்ளது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார் ஜெ.பி.நட்டா.
நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளது பற்றி நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்ட அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்,
தி.மு.க, பா.ஜ.க தலைவர் நட்டாவிடம் நன்னடத்தை சான்றிதழ் கோரவில்லை, அது தேவையுமில்லை. நட்டாவுக்கு, தி.மு.கவுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் தகுதியும் கிடையாது.
தி.மு.க அண்ணாவின் தலைமையில் திராவிட நாடு கேட்டு போராடிய நேரத்தில் தான், சீனப் போர் வந்தது. தனி நாடு கேட்கிறோம் என தி.மு.க ஒதுங்கி நின்றுவிடவில்லை. தனது லட்சியத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு, சீனப் போருக்கு நிதி திரட்டி வழங்கியது தி.மு.க. எனவே தி.மு.கவின் தேசிய பங்களிப்பு குறித்து முதலில் தெரிந்து கொண்டு வந்து நட்டாக்கள் பேசட்டும்.
இந்தியாவின் பிரதமர்களையும், ஜனாதிபதிகளையும் சென்னை கோபாலபுரத்தில் அமர்ந்து கொண்டே நிர்ணயம் செய்தவர் எங்கள் தலைவர் கலைஞர். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மண்டல் கமிஷனை அமலாக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா முழுமைக்குமான பிற்பட்டோர் நலன் காத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். இந்தியாவின் தேசியத்தை அவ்வாறு பல நேரங்களில் காத்தவர்.
மறைந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது, ஜனநாயத்தின் காவலராக நின்று இந்தியா முழுமைக்குமான எதிர்கட்சி தலைவராக, மிசாவை எதிர்த்து போராடியவர் எங்கள் தலைவர் கலைஞர் தான். இதை மறைந்த உங்கள் தலைவர் வாஜ்பாய் போன்றோர் அறிவார்கள். நட்டா நேற்று பெய்த 'மோடி' மழையில் முளைத்த காளான். அவருக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாது.
நட்டாவின் கோபத்திற்கு காரணம், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் அரசியல் நடவடிக்கைகள் தான். அதை நாங்கள் அறிவோம், தமிழக மக்களும் அறிவார்கள்.
மோடி பா.ஜ.க ஆட்சி மாநில உரிமைகளை பறிக்கும் நோக்கில் எடுக்கும் நடவடிக்கைகளை, இந்திய அளவில் தட்டிக் கேட்கும் முதல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பது தான் நட்டாவின் கோபத்தின் வெளிப்பாடு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு, ஜி.எஸ்.டி குளறுபடிக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு சட்ட வரைவு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, காஷ்மீர் ஜனநாயக கொலைக்கு எதிர்ப்பு, இதர பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு, ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு என தொடர்ந்து பா.ஜ.கவின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பது தான் நட்டாவுக்கு நெருடுகிறது.
முதல்வராக இல்லாவிட்டாலும், இந்தியா முழுதிலும் முதல்வராக பதவியேற்கும் எதிர்கட்சி தலைவர்கள், மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைப்பது நட்டாவுக்கு கண்ணை உறுத்துகிறது. அதனால் தான் கோபக் கண்ணை காட்டுகிறார்.
பா.ஜ.க கட்சியின் "ஒரே நாடு" கொள்கை தான் தேசிய உணர்வுகளுக்கு எதிரானது.
இந்தியா என்பது பல மொழிகளை, பல இனங்களை, பல மதங்களை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் தேசிய உணர்வு.
பா.ஜ.க மாநில உணர்வை மழுங்கடிக்க நினைத்தால், அதுதான் இந்திய தேசியத்திற்கு எதிராக வெடிக்கும். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என பா.ஜ.க திணிக்க நினைப்பது தான் தேசியத்திற்கு வேட்டாக அமையும். தயவு செய்து, நட்டா இதை புரிந்துக் கொள்ளட்டும்.
நட்டா குற்றஞ்சாட்டுவது தமிழக மக்களை தான் எனத் தோன்றுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தமிழகத்தின் 4.18 கோடி வாக்குகளில் 52%-ஐ கைப்பற்றியது. நட்டா, தி.மு.கவிற்கு ஆதரவளித்த இந்த மக்களை தான் நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்கள் என்று சொல்கிறாரா?
ஏதோ பா.ஜ.க தான் இந்திய தேசத்திற்கு ஒட்டு மொத்த குத்தகை போலவும், தி.மு.கவை எதிரான கட்சியாக சித்தரிக்க முயல்கிறார் பா.ஜ.க தலைவர் நட்டா.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பா.ஜ.க கூட்டணி வாங்கிய வாக்குகள் 45%. அப்படியென்றால் பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக வாக்களித்த 55% வாக்காளர்கள் ஆண்டி இந்தியன் தான், நட்டா பாஷையில்.
நன்னடத்தை சான்றிதழ் தர வேண்டியவர்கள் மக்கள், அவர்கள் தான் எஜமானர்கள். இதனை நட்டா போன்றவர்கள் உணர வேண்டும் என திமுக சார்பில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் அழுத்தமாக.