குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் இன்று.... சக குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வேளையில் தன்னால் ஆரம்ப கல்வியை கூட எட்ட வாய்ப்பில்லையே என ஏக்கத்துடன் வேலைக்கு செல்லும் குழந்தைகள் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் உலகத்தின் எல்லா மூலையிலும் இருக்கதான் செய்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பாக பின் வரும் நாளில் இந்த உலகையே ஆளும் அடுத்த தலைமுறை என்ற கோணத்தில் சிந்திக்கபட்டாலும் குழந்தை தொழிலாளர்கள் நிலை ஒழிந்த பாடில்லை....
2002-ஆம் ஆண்டுதான் உலக நாடுகள் மத்தியில் குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு சற்று அதிகரித்தது. ஒரு குழந்தை தனது உடமை, இருப்பிடம், உணவு என்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தானே உழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு குழந்தை தொழிலாளி என்ற அநியாயத்திற்கு உட்படுத்தப்படும் சூழல் இந்திய போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும் காணப்பட்டது. தனியாக தன்னிச்சையாக ஒரு உயர் வர்க்கதித்திடம் பண்ணை பொறுப்பாளராக்கூட குழந்தைகள் பணியில் கொத்தடிமைகளாக அமர்த்தப்பட்ட சம்பவங்கள் அடிமை இந்தியா காலத்திலிருந்தே இருந்துவந்தது. ஆனால் தற்போதைய சமகால இந்தியாவிலும் எண்ணற்ற குழந்தைகள் இன்னும் கடினமான பணிகளில் அமர்த்தப்படும் குற்றங்கள் சமூகத்திலுருந்து மறைக்கபட்ட வண்ணம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. சர்வதேச அளவில் குழந்தை தொழிலாளர் உரிமைகளை பெற்றுத்தரும் வகையில் யுனிசெப் அமைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மூன்று வகையாக பிரிகின்றது. அதில் கொடிய பசி, வறுமை, ஊட்டச்சத்து குறைவு, ஆரம்ப கல்வியை கூட எட்ட முடியாத நிலமை என இந்த நான்கு காரணிகளுமே நாட்டின் எதிர்கால மன்னர்கள் என குறிப்பிடப்படும் குழந்தைகளை தொழிலாளிகளாக மாற்றவைப்பவை என கோடிட்டுகாட்டுகிறது.
குழந்தை தொழிலாளர்கள் முறை உலகின் பல நாடுகளில் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிளும் இருந்துவருகிறது. பாலியல் தொழில், குவாரி, விவசாயம், பெற்றோரின் தொழில்களில் உதவுதல், செங்கல் சூளைகள், சில்லறை வணிகங்கள், ஹோட்டல்கள், குடோன்களில் பொருட்களை அடுக்கி வைத்தல், சுத்தம் செய்தல் என எல்லா பணிகளிலும் குழந்தைகள் வலுக்கட்டயமாகவும் அமர்த்தப்படுகின்றனர். இப்படி சிறார்கள் சிறுவயதிலேயே கல்வியின் அவசியம் அவர்களிடம் இருந்து மழுங்கடிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு பின்பகுதியில் அறிவில் சிறந்த புதிய சமுதாயத்தை இழந்து விடுவோமோ? என்ற அச்சம் ஒவ்வொரு மானுடத்திற்கும் தோன்ற வேண்டிய ஒன்றே . ஆனால் இங்கே எல்லா குழந்தைகளுக்கு அந்த நிலை இல்லையே என்று சிலர் கூறும் பதிலால் குழந்தை தொழிலாளர்கள் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதா ? என்ற கேள்வியை என்றும் சரிக்கட்ட முடியாது என்பதும் உண்மையே.
யுனிசெப் அறிக்கையின் படி பார்த்தால் உலகில் 5 முதல் 14 வயதிற்குட்பட்ட 158 மில்லியன் குழந்தைகள் சமூகத்திலுருந்தும் ஊடகங்களிருந்து மறைக்கப்பட்டும் வீட்டு வேலை அல்லாத கடுமையான பணிச்சுமை கொண்ட பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1990-ல் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் மற்றும் குழந்தைகளை பணியில் அமர்த்தி அவர்களின் உழைப்பை சுரண்டி பிழைக்கும் அதிகாரத்தை தகர்த்தெறியும் நோக்கில் சோமாலிய மற்றும் ஐக்கிய நாடுகளை தவிர மற்ற அனைத்து பெரு நாடுகளும் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புக்கான உடன் படிக்கையில் கையெழுத்திட்டன. சோமாலிய போன்ற பஞ்சம் தொற்றிய நாடுகளில் அரச தலைமை சரியாக இல்லாததால் 2002-ஆம் ஆண்டு தாமதமாகவே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது இப்படி பல நாடுகள் ஒன்று சேர்ந்து உலகளவில் ஒரு கொடி ஏற்றி பிடிக்கவே கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
இத்தகைய நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எந்த வயதில் வேலை செய்ய வேண்டும் என்று வரையறுத்துள்ளது. அதன்படி கடினமான வேலைகளில்
பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களையே உட்படுத்தவேண்டும். பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி கொடுக்கப்பட வேண்டும். அதேபோல் 13 லிருந்து 15 வயதுக்கு உட்பட்ட வயதில் உள்ள குழந்தைகள் வேண்டுமானால் தங்கள் உடலுக்கும், மனதிற்கும், கல்விக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வேலைகளில் ஈடுபடலாம் என வரையறுத்துள்ளது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சமூகத்தை குற்றம்சாட்டி தப்பிப்பதற்கு முன் குழந்தைகளை பெற்ற பெற்றோரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் ''அவர்கள் உங்களுக்கு பிறந்தவர்கள்தான் ஆனால் உங்களுக்காவே பிறந்தவர்கள் அல்ல'' ஒரு பிஞ்சின் ஆசைகளை கற்பனைகளை ஒழித்து நிகழ்த்தப்படும் இந்த குற்றச்செயலில் ஈடுபட பெற்றோர்களுமே ஒருவகையில் பொறுப்பேற்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினமான இன்று அதற்கான எண்ணங்களை வெறும் மனதளவில் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் செயலளவிலும் நடைமுறைப்படுத்த முன்வர உறுதியேற்போம் நண்பர்களே!!