அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக இரு மாவட்டமாக இருந்த கடலூரை தலா 3 சட்ட மன்றத் தொகுதிகள் கொண்ட மூன்று மாவட்டங்களாக இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் அண்மையில் உடைத்தனர். இதில் கிழக்கு மா.செ.வாக சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியனும், மத்திய மா.செ.வாக அமைச்சர் சம்பத்தும், மேற்கு மா.செ.வாக முன்னாள் எம்.பி. அருண் மொழித்தேவனும் நியமிக்கப்பட்டனர். இது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில்,மாவட்டத்தைப் பிரித்து தனது அதிகார எல்லையை சுருக்கிவிட்டதாக பொருமிக் கொண்டிருக்கும் அமைச்சர் சம்பத், அமைச்சர் சண்முகம் கோலோச்சும் விழுப்புரம் மாவட்டத்தின் மீது கண் வைத்திருப்பது புதிய வில்லங்கத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக் கழகத்தினர், விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வடக்கு மா.செ.வாக அமைச்சர் சி.வி.சண்முகமும், தெற்கு மா.செ.வாக எம். எல்.ஏ. குமரகுருவும் இருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை புதிய மாவட் டமாக உருவாக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச் சாமி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளும், விழுப்புரத்தில் விழுப்புரம், திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கியுள்ளன.
"தலா 3 சட்டமன்றத் தொகுதிகள் எனக் கடலூரை கட்சி நிர்வாகத்திற்காக 3 மாவட்டங்களாகப் பிரித்தது போல, 6 சட்டமன்றங்களைக் கொண்டுள்ள விழுப்புரம் வருவாய் மாவட்டத்தை கட்சி நிர்வாகத்திற்காக பிரிக்க வேண்டாமா? கள்ளக்குறிச்சிக்கும் இதே அளவுகோல் வேண்டாமா?' என்பதே சம்பத்தின் கேள்வி. சம்பத்தும் சண்முகமும் ஒரே சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள். அதனால் ஈகோவும் இருக்கிறது.
கட்சியின் சீனியர்களும் சமீபகாலமாக சீனில் இல்லாதவர்களுமான விழுப்புரம் மாவட்ட முன்னாள் எம்.பி. லட்சுமணனையும், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் அமைச்சர் மோகனையும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார் சம்பத். "விழுப்புரத்தையும் கள்ளக்குறிச்சியையும் உடைக்க முதல்வரிடம் கோரிக்கை வையுங்கள். விழுப்புரத்தை உடைப்பதன் மூலம் நீங்களும் (லட்சுமணன்), கள்ளக்குறிச்சியை உடைப்பதன் மூலம் நீங்களும் (மோகன்) மா.செ.வாக முடியும்' என அவர்களை தூண்டிவிட்ட சம்பத், "முதல்வருக்கு நெருக்கமான சேலம் பிரமுகரை சந்தித்து பேசுங்கள்' என வலியுறுத்தியதோடு, "உங்களுக்காக நானும் அவரிடம் பேசுகிறேன்' எனவும் சொல்லியுள்ளார்.
சம்பத்தின் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த, லஷ்மணனும் மோகனும் ஏக ரகசியமாக களத்தில் குதித்துள்ளனர். தங்கள் மாவட்ட விவகாரத்தில் அடுத்த மாவட்ட அமைச்சர் செய்யும் உள்ளடி வேலையால் சி.வி.சண்முகமும் அவரது ஆதரவாளர்களும் ஏக கடுப்பில் இருக்கிறார்கள். விரைவில் விழுப்புரமும் கள்ளக்குறிச்சியும் உடைக்கப்படலாம். அப்படி உடைந்தால் சண்முகத்தின் அதிகார எல்லை சுருங்குவதோடு, எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் மோதல் வெடிக்கும்''’என விவரிக்கிறார்கள்.
கட்சியில் லஷ்மணனுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் அவரது ஆதரவாளர் களெல்லாம் சண்முகத்திடம் ஐக்கியமானார்கள். தற்போது, உடைக்கப்படும் விழுப்புரம் மாவட்டத்துக்கு லஷ்மணன்தான் மா.செ. என்கிற பேச்சு விழுப்புரத்தில் எதிரொலிப்பதால், "மீண்டும் உங்களோடு வந்துவிடுகிறோம்' என லஷ்மணனிடம் பேசி வருகின்றனர் அவரது முன்னாள் ஆதரவாளர்கள். இராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்தை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூருக்கு வந்தபோது, கடலூர் எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் சம்பத்தோடு இணைந்து எடப்பாடிக்கு வரவேற்பு தந்துள்ளார் லஷ்மணன். இதனையும் உன்னிப்பாக கவனித்துள்ளது சண்முகம் தரப்பு.
சண்முகத்திற்கு எதிராக சம்பத்தின் இந்த ரகசிய மூவ் குறித்து கிசுகிசுக்கும் ஓ.பி.எஸ். வட்டாரத்தில் விசாரித்தபோது, "விழுப்புரம் வடக்கு மா.செ.வாக ஏற்கனவே இருந்தவர் லஷ்மணன். சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது அவரோடு லஷ்மணனும் மோகனும் ஐக்கியமானார்கள். இதனால் லஷ்மணனின் மா.செ. பதவி பறிபோனது. இந்த நிலையில் மா.செ. பதவிக்காக இருவரும் ஓ.பி.எஸ்.சிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்'' என்கின்றனர்.
சண்முகத்தின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெரும் வெற்றியைக் காட்டி, அ.தி.மு.க.வின் இமேஜை பலப்படுத்தியவர் எங்க அமைச்சர். அவரது மாவட்டத்தை பிரிப்பது அவ்வளவு ஈசியா? சண்முகம்தான் சும்மா இருப்பாரா? கடலூரில் உள்கட்சி பிரச்சனைகள் ஏகப்பட்டது இருந்ததால் அதை சமாளிக்க பிரித்தார்கள். விழுப்புரம் அப்படியல்ல. அடுத்த மாவட்டத்தில் உள்கட்சி கலாட்டாவை சம்பத் தூண்டிவிடுவதற்கு சண்முகம் பதிலடி தருவார்'' என்கிறார்கள் அழுத்தமாக.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியின் மா.செ.வாக இருக்கும் குமரகுரு, எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவர். அதனால்தான், மாவட்ட தொடக்க விழாவில் குமரகுருவின் மகன் நமச்சிவாயத்தை மேடையில் தனக்குப் பின்னால் அமர வைத்திருந்தார் எடப்பாடி. அதனால் கள்ளக்குறிச்சியை அமைப்பு ரீதியாக பிரிக்க மாட்டார். ஒருவேளை பிரித்தால் மா.செ. போட்டியில் எம்.எல்.ஏ. பிரபுவும், கள்ளக்குறிச்சி ஒ.செ. ராஜசேகரனும் மல்லுக்கட்டுவார்கள். இதையும் மீறி சம்பத்தின் சிபாரிசில் மோகனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் சம்பத்துக்கு எதிராக கள்ளக்குறிச்சி ர.ர.க்கள் கச்சைகட்டுவார்கள். இது எடப்பாடிக்கு தலைவலியை கொடுக்கும்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள்.