மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக, தேர்தலில் கூட்டணியில் இருந்த சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சிவசேனா முதலில் இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவி கேட்டது. அதற்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அந்தக் கூட்டணி முறிந்தது. பாஜக ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று சொன்னதால், சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர். சிவசேனா காலஅவகாசம் கேட்டது. அதற்குள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவாருடன் ஆட்சி அமைத்தது. இதில் பாஜகவின் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனை எதிர்த்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றன. நீதிமன்றம் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு தாங்கள் தயாராக உள்ளோம் என்று சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்ததுடன், நேற்று தங்கள் கட்சி எம்எல்ஏக்களையும் ஒரே இடத்தில் வைத்து பலத்தை காட்டியதுடன், நாங்கள் 162 பேர் உள்ளோம் என ஒரு போர்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் துணை முதலமைச்சர் பதவியை அஜித்பவார் இன்று (26.11.2019) ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று ஆளுநரிடம் தெரிவித்த பாஜக, ஆட்சி அமைப்பதாக பதவியேற்று பின்னர் ராஜினாமா செய்கிறது... அடுத்தடுத்த மாற்றங்கள் மகாராஷ்டிரா அரசியலில் நிகழுகிறதே? என்று பாஜகவின் மாநில (தமிழகம்) செயலாளர் கரு.நாகராஜனிடம் கேள்வி எழுப்பினோம்.
இதற்கு பதிலளித்த அவர், ''பதவிதான் முக்கியம் என்று முற்றிலும் மாறான கொள்கை, சித்தாந்தம் உடைய கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைக்கிறது. அது நாளை எப்படி வேண்டுமானாலும் மாறும். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிவசேனாவுக்கு பாஜகவினரும், மக்களும் ஆதரவு அளித்தார்கள். சிவசேனாவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜகவுக்கு சிவசேனா கட்சியினரும், மக்களும் ஆதரவு அளித்தார்கள். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் ஓட்டு போட்டார்களோ, அவர்கள் ஆட்சி அமைக்காமல் மற்றவர்கள் ஆட்சி அமைப்பதை மக்கள் எப்படி ஏற்பார்கள். மக்கள் விரும்பாத ஆட்சி அமைகிறது.
தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்று யாரோ ஒருவர் சொல்லவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர், அக்கட்சியின் மூத்த தலைவர், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினர் அஜித்பவார். அவர் சொல்லும்போது நிராகரிக்க முடியுமா? நம்பித்தானே ஆக வேண்டும்.
கடந்த தேர்தலில் 260 இடங்களில் போட்டியிட்டு 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை 164 இடங்களில் போட்டியிட்டு 105 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை மக்கள் ஆதரித்துள்ளனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி அமைப்பதாக சொல்கிறது. இந்த ஆட்சி மக்களுக்கு வேதனையைத்தான் தரும்'' என்றார்.