கேரளாவின் கொச்சி பக்கமுள்ள களமசேரி நகரின் ஜாம்ரா சர்வதேச அரங்கில் மூன்று நாட்களாக நடந்த யெகோவா சபை பிரார்த்தனைக் கூட்டத்தில் மூன்றாம் நாளான அக் 29 அன்று சுமார் 2500 பேர்கள் பங்கேற்றிருந்தனர். மிகச்சரியாக 9.30 மணியளவில் பிரார்த்தனைக் கூடத்தில் திடீரென மூன்று இடங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் கடுமையான தீப்பிழம்புகள் பற்றிக் கொண்டன. கால்மிதி பட்ட எறும்புக் கூட்டங்கள் சிதறி ஓடுவதைப் போன்று கடும் கூச்சலெடுத்த மக்கள் உயிர் தப்பிக்க முட்டி மோதியபடி ஓடினர். அரங்கம் பிரளயக் காடானது.
சம்பவ இடத்தில் ஒரு பெண் மரணமடைய பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒரு சிறுமி உட்பட 2 பேர் பலியானார்கள். குமாரி, லியோனா பவுலோஸ், சிறுமி லிபினா என மூன்று பேர் இது வரையிலும் பலியானவர்கள். 52 பேர் படு தீக்காயங்கள் ஏற்பட்டதில் 90 சதம் தீக்காயங்களுடன் 12 வயது சிறுவன் உட்பட 18 பேர் கொச்சி எர்ணாகுளம் மருத்துவமனைகளின் ஐ.சி.யு.வில் அட்மிட். 6 பேர் சீரியஸ் கண்டிஷனில். எனவே பலி எண்ணிக்கை உயரும் என்ற பதற்றத்திலிருக்கிறது கேரளா. கேரளாவை மட்டுமல்ல, குண்டு வெடிப்பு தென் மாநிலங்களையும் அதிர வைத்துள்ளது. தீவிரவாதச் செயலாகவும் இருக்கக் கூடும் என்பதால், அண்டை மாநிலங்கள் தங்களின் எல்லைப் புறங்களை சீல் வைக்காத குறையாக கடுமையான சோதனையை மேற்கொண்டிருக்கிறது. சம்பவம் நடந்த யெகோவா சபைக் கூடத்திற்கு கேரள டி.ஜி.பி. உள்ளிட்ட மொத்த போலீஸ் அதிகாரிகளின் முற்றுகையிலிருந்தாலும், விசாரணை நடைமுறை பரபரக்கின்றன. ஏ.டி.ஜி.பி. எம்.ஆர். அஜித்குமார் தலைமையில் 20 பேரைக் கொண்ட ஷார்ப்பான ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணைகள் பல்வேறு கோணங்களில் பயணிக்கின்றன.
அன்றைய தினம் சந்தேகப்பட்ட ஒருவரை போலீஸ் தூக்கிச் சென்று விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் பக்கமுள்ள கொடகரை காவல் நிலையத்தில் சரணடைந்து, தன் பெயர் டொமினிக் மார்ட்டின் என்றும் யெகோவா சபை கூடத்தில் குண்டு வைத்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில இதை நம்பாத காவல் சரக அதிகாரிகளிடம் சிறிதும் பதட்டமின்றி குண்டு வெடிப்பு சம்பவம் நடத்திய பின்பு அதை தனது செல்லில் வீடியோவாக எடுத்ததை போலீசாரிடம் ஒப்படைத்த டொமினிக் மார்ட்டின், அதற்கான காரணத்தை விளக்கி முகநூலில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டதையும் சொல்லியிருக்கிறார். அதையடுத்தே அவரைத் தன் கஷ்டடிக்குள் கொண்டு வந்த விசாரணை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. அஜித்குமார், அவரை ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு கொண்டு சென்று தன் டீமுடன் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.
இதனிடையே பரபரப்பான மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான ஐ.பி. மற்றும் என்.ஐ.ஏ.வும் தனித்தனியே தங்களின் ரூட்டுகளில் போய்க் கொண்டிருக்கின்றன. ஏ.டி.ஜி.பி, டொமினிக் மார்ட்டினிடம் நடத்திய விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தாலும் பல சந்தேகங்கள் தெளிவாகவில்லை. அவர் ஒண்டியாகச் செய்ததாகச் சொன்னாலும் அதன் பின்னே ஒன் பிளஸ் என மற்றவர்களும் உண்டு, நெட்ஒர்க்கே இருக்கலாம் என்பது எங்களின் டவுட் என்கிறார்கள். விசாரணை அதிகாரிகள், மற்றும் பலரிடம் பேசியதில் சந்தேகங்கள் நீடிப்பதாகவே நடந்தவைகள் உணர்த்துகின்றன.
1872ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யெகோவாவின் அமைப்பு யெகோவாவையே கடவுளாக வழிபடுபவர்கள். ஏசுவை கடவுளின் மகனாகவே பார்க்கின்ற கிறிஸ்தவ அமைப்பினர், மத தலைவர்கள் யாருமில்லாமல் அந்தந்தப் பகுதிகளில் சிறு சிறு குழுக்களாகவே செயல்படுகின்றனர். மாவட்ட அளவில் கூட மதத் தலைவர்கள் இருப்பதில்லை. கடுமையான சமூகவிதிகளைப் பின்பற்றும் இந்த அமைப்பில் 16 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டேன். அண்மைக்காலமாக தங்களின் நோக்கத்திலிருந்து தவறான பாதையில் சொல்கிறார்கள் இதன் முக்கிய நிர்வாகிகள். அது பிடிக்காததால் தான் இதை செய்துள்ளேன். நானே குண்டு வைத்தேன் என்றவர் தன்னையும் மீறி பேச்சோடு பேச்சாக அவரை அறியாமலேயே, அவர்கள் பிற மதத்தை துவேசிக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே விசாரணை அதிகாரியான அஜித்குமார் டொமினிக்கின் ஃபேஸ் புக்கை ஆராய்ந்திருக்கிறார். அதில் அவர் 2018, 2019 ஆண்டுகளில் மாவோயிஸ்ட்களின் தொடர்பில் இருந்ததும் பல தகவல்களை ஷேர் செய்ததும், பின்னர் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டதாகவும் கண்டு பிடித்திருக்கிறார். அதன் பின் யெகோவா அமைப்பில் இணைந்திருப்பதும் தெரிந்திருக்கிறது. ஆனால், டொமினிக் மார்ட்டினோ தான் 16 வருடமாக இணைந்து செயல்படுவதாகச் சொல்லியிருக்கிறார். ஏன் இந்த முரண்பாடு. மேலும் பிறமதத்தை விமர்சிக்கிறார்கள், தனக்கு பிடிக்கவில்லை என்று அவர் சொன்னதிலும் சந்தேகம். அவர் தெரிவித்தபடி அப்படி இரண்டு மதத்திற்குள்ளும் விரோதம் என்றால், அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.
யூடியூப்பில் பார்த்து வெடிகுண்டு தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன். அது படி செய்துள்ளேன் என்றும், துபாயில் நான் வேலை பார்த்த போது அங்கு சிலரிடம் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்ன முறை என்று கற்றுக் கொண்டேன் என்றிருக்கிறார் டொமினிக். இதில் எது உண்மை?. வெடிகுண்டு தயார் செய்ய தேவையான பொருட்களை சரிவிகிதத்தில் கையாள வேண்டும். அதனை அடைக்கும் போது கவனமாக அடைக்க வேண்டும் தேர்ந்தவர்களால் தான் இதை சரியாக செய்யமுடியும். கவனம் பிசகினால் வெடித்து மோசமான விளைவை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் பாம் ஸ்குவாடு நிபுணர்கள். அப்படியிருக்க, ஒற்றை நபரான டொமினிக்கால் எப்படி முடியும் என்ற கேள்வியும் கிளம்புகிறது. குண்டு வெடிப்பிற்கு சற்று நேரம் முன்பு அரங்கிலிருந்து ஒரு நீல நிறக் கார் வெளியேறிப் போயிருப்பது அந்தப் பகுதியின் சி.சி.டி.வி.யில் பதிவாகியிருக்கிறது. அதன் நம்பரைக் கொண்டு விசாரித்த விசாரணை அதிகாரிகளுக்கு அந்த நம்பர் போலி என்பது தெரிய வந்திருக்கிறது. அதனுள்ளே இருந்தவர்கள் யார்? என்கிற விசாரணையும் போய்க் கொண்டிருக்கிறது.
யெகோவா சபை கூட்டரங்கில் ஆறு இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்ததாகச் சொல்லப்படுகிறது. அவைகளில் மூன்று மட்டும் வெடித்து நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ளவைகள் வெடிக்கவில்லை. வெடிகுண்டு பாக்சுடன் பேட்டரி வயர் இணைக்கப்பட்டு, ரிமோட் இயக்கத்திற்குள் கொண்டு வரப்பட்டும், அதன் பாக்ஸ் அருகில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ததும், தொடர்ந்து அருகிலுள்ள பாட்டலின் பெட்ரோலும் சேர, விளைவு தீப்பிழம்பு கிளம்பி, அரங்கில் பற்றியுள்ளது தெரிய வந்திருக்கிறது. அது போக இந்த செட்டப்களுடன் 6 பாக்ஸ் வெடிகுண்டுகளும் டொமினிக் என்ற ஒரே நபரால் எப்படி அரங்கிற்கிற்குள் கொண்டு வர இயலும். சந்தேகத்திற்குரிய நீல நிறக்காரில் வந்தவர்களோ, அல்லது வேறு நபர்களின் உதவியின்றி நிச்சயம் இதனைச் செய்திருக்க முடியாதே என்ற கேள்வியுடன் அவர்கள் யார், என்ன பின்னணி, பின்னால் ஒரு பெரிய நெட் ஒர்க் இருக்க வேண்டும் என்ற பலமான கேள்வியுமிருக்கு.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளாவின் கொச்சி, கொல்லம், தமிழகத்தின் வேலூர், ஆந்திராவின் சித்தூர் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட 5 நகரங்களின் ஆட்சியர் அலுவலகத்துடன் கூடிய நீதிமன்றப்பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடித்து பீதியை ஏற்படுத்தினர். ஆனால் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் நிகழவில்லை. தேசமே பதற்றமானது. அது சமயம் அந்த குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்பேற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷி-இ-முகம்மது, எங்களுக்கு உரிய நீதிய கிடைக்கவில்லை. எங்களுக்கு நீதிமன்றங்களில் நம்பிக்கை கிடையாது. எங்களின் அதிருப்தியைக் காட்டவே இந்த எச்சரிக்கை குண்டு வெடிப்பு என்று விளக்கத்தையும் கொடுத்ததுண்டு.
ஆனால் தற்போது கேரளாவின் யெகோவா சபை கூட்டக் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்று ஒரு சாதாரண நபர் வந்திருக்கிறார். சாதாரண நபர் நடத்தியிருந்தால் பதற்றத்தில், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தப்பிக்கத்தான் மனம் ஒடுவது இயல்பு. தவிர, தைரியமாக முன்வந்து பதட்டமே இல்லாமல் பொறுப்பேற்க மனம் வருமா என்பது ஆச்சர்யம். அவரை அனுப்பி வைத்தது யார்?. எந்த அமைப்பு, நிச்சயம் பின்னணி, நெட்ஒர்க் கொண்டது என்பது மறுப்பதற்கில்லை. என்றும் சொல்லப்படுகிறது. மிகச் சரியான ரூட்டில் விசாரணை போனால், மறைந்திருக்கும் பூதங்கள் வெளிப்படலாம்.