வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. அந்த அங்கன்வாடி மையத்திற்கு, 1997 – 98 ஆம் ஆண்டில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சத்துணவு கூடம் கட்டி தரப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய வளாகத்தில் சுமார் 60 அடி ஆழ பொதுக்கிணறு ஒன்று இருந்து வருகிறது. ஆரம்பகாலக்கட்டத்தில் அங்கு ராட்டினம் போட்டு தண்ணீர் சேந்தி பெண்கள் குடங்களில் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் வறண்டு போனது.
அதோடு, பின்னர் மழை பெய்து செடிகள், மரங்கள் என அந்த கிணற்றை சுற்றியும், கிணற்றுக்குள்ளும் வளர்ந்துவிட்டது. கிணற்றுக்குள் மண்கள் குவிந்துள்ளது. தற்போது அங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். குழந்தைகள் அங்கன்வாடிக்குள்ளும், வெளியேவும் விளையாடுகின்றனர். அவர்கள் அந்த பாழடைந்த கிணற்று பக்கமும் சென்று விளையாடுகின்றனர்.
இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் பாதுகாப்பாக கண்காணித்தாலும், அதனையும் மீறி குழந்தைகள் அந்தப்பக்கம் சென்றுவிடுகின்றனர். இதனால் ஊழியர்கள் பயத்திலேயே உள்ளனர். இதனை அறிந்த அக்கிராம பொதுமக்களும் அங்கன்வாடி பின்புறம் உள்ள இந்த கிணற்றை உடனடியாக மூடவோ அல்லது அதனை சீர் செய்து சுற்றிலும் கருங்கல் சுவற்றை கட்டி குழந்தைகள் எட்டி பார்க்காத வண்ணம் செய்ய, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.