"இரவு நேரத்தில் பெண் தனியே போகக்கூடாது என்றால், ஆண்கள் போகலாமா?" பாஜகவுக்கு சவுக்கடி கேள்வி
"ராத்திரி நேரத்தில் அந்த பொண்ணு ஏன் தனியே காரில் போச்சு?"
ஹரியானா மாநில பாஜக துணைத்தலைவர் இப்படிக் கேட்கிறார்.
"என்னைக் கேட்கிறாரே, அந்த ராத்திரியில் பாஜக தலைவரின் பையன் ஏன் காரில் போனார்? ஒருபக்கம் பெண்களுக்கு அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கனும்னு பேசுறது, மறுபக்கம் இப்படி பெண்களை கேவலப்படுத்துவது சரியா?"
என்று கேட்கிறார் வர்னிகா. ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகளான 29 வயது வர்னிகா தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நியாயம் கேட்டு பகிரங்கமாக களம் இறங்கியிருக்கிறார்.
ஹரியானா பாஜக மட்டும் அல்லாமல், அகில இந்திய அளவிலும் பாஜகவின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இந்த வழக்கு வேகம் பிடித்திருக்கிறது.
ஆகஸ்ட் 4ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 29 வயது வர்னிகா தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவருடைய காரை ஒட்டி ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பராலா என்பவரின் மகன் 23 வயது விகாஷும் அவருடைய நண்பர் ஆசிஷ்சும் தங்கள் காரில் வந்தனர்.
அவர்கள் இருவரும் தங்கள் காரை வர்னிகாவின் கார்மீது இடிப்பது போல பலமுறை அச்சுறுத்தி கடந்தனர்.
ஒருமுறை அவர்கள் வர்னிகாவின் காருக்குள் தாவப்போவது போலவும், அவரை இழுத்து வெளியே போடப்போவது போலவும் பயங்காட்டினார்கள்.
குறுகலான ரோடுகளில் நுழையும்படி வர்னிகாவின் காரை திசைதிருப்பினர்.
இந்த சேசிங் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம்வரை நீடித்தது. வர்னிகாவின் போனைத் தொடர்ந்து வந்த போலீஸ் அவர்களை இடை மறித்தது. அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் வெளியே விட்டனர்.
இதையடுத்து, தனக்கு நேர்ந்தது தொடர்பாக வர்னிகா தனது முகநூலில் ஒரு பதிவிட்டார்.
இவருடைய தந்தை ஐஏஎஸ் அதிகாரி என்பதால் அந்த பதிவு வைரலாக பரவியது. அரசியல் கட்சிகளின் கவனத்தையும், மகளிர் அமைப்புகளின் கவனத்தையும் கவர்ந்தது.
பாஜக தலைவரின் மகன் என்பதால் போலீஸ் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உடனே, தமிழகத்தில் சொல்வதைப் போல, சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று போலீ்ஸ் கூறியது.
ஆனால், சிசிடிவி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாக அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, வர்னிகா தனது மகளைப் போன்றவர் என்று பாஜக தலைவர் சுபாஷ் பாசத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், பாஜக துணைத்தலைவரோ, அந்த இரவு நேரத்தில் அந்தப் பெண் ஏன் வெளியில் காரில் தனியாகப் போனார் என்று கேட்டார்.
அவர் அப்படி கேட்டது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது, பெண்கள் மீதே தவறு சொல்வது பாஜக தலைவர்களுக்கு வழக்கமாகிவிட்டது என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், காங்கிரஸ் மகளிர் சங்கம் உள்ளிட்டவையும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
இதையடுத்து சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதாகவும், நேரில் பார்த்த போலீஸ் சாட்சிகள் இருப்பதாகவும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விகாஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மன்களை அவருடைய வீட்டில் யாரும் வாங்கவில்லை. இதையடுத்து சம்மன்களை வீட்டுச் சுவற்றில் ஓட்டி வந்தனர்.
இந்நிலையில், விகாஷின் நண்பர் விசாரணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கில் வெளிப்படையாக பங்கேற்பது ஏன் என்று வர்னிகாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது...
முதலில் இந்த தகவலை நான் எனது முகநூலில் போட்டேன். உடனே பாதிக்கப்பட்டது நான்தான் என்று எனது நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்குள் அந்தப் பதிவு வைரலாகிவிட்டது. இதற்கு பின்னரும் நான் என்னை ஒளித்துக் கொள்ள விரும்பவில்லை. நல்லவேளை நான் ஒரு அதிகாரியின் மகளாக இருந்தேன். இதுவே ஒரு சாமானிய பெண்ணாக இருந்தால் இந்த வழக்கு இப்படி சூடு பிடித்திருக்குமா என்பது சந்தேகம்தான். நல்லதொரு முடிவு கிடைக்கும்வரை நான் ஒளிய மாட்டேன் என்றார்.
துணிச்சலான பெண்தான்.
இந்தக் கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட சமயத்தில் விகாஷை அரியானா போலீஸ் கைது செய்தது.
-ஆதனூர் சோழன்