விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சென்னையில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டும், வாட்ஸாப் மூலமாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகரில் ஆங்காங்கே போலீசார் சார்பாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கொடுக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வடக்கு மண்டலம் (பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு காவல் மாவட்டங்கள்) - 8072864204, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மேற்கு மண்டலம் (அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்கள்) - 9042380581, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெற்கு மண்டலம் (அடையார், புனித தோமையார் மலை, தி.நகர் காவல் மாவட்டங்கள்) - 9042475097, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கிழக்கு மண்டலம் (திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்கள்) - 6382318480.