சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த ஜனநாயகம் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி நடந்து வந்த போராட்டம் நூறாவது நாளை எட்டியைதையொட்டி, நேற்று 50 ஆயிரத்திறத்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனை போலீசார் தடியடி நடத்தி தடுத்து நிறுத்த முயற்சி செய்ததால் இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டகாரர்களை போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சி செய்தனர். அதுவும் முடியாததால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகர் ஜி.வி.பிரகாஷும் அவரது டிவிட்டர் பக்கத்தில் தனது கண்டத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவரது டவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.
சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்று பிழை செய்து விட்டீர்கள். சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த ஜனநாயகம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.