புதுக்கோட்டையின் அடையாளங்களில் ஒன்று பிரகதம்பாள் கோயில். இந்த கோயிலின் ஆடித்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (31/07/2022) 9- வது நாள் திருவிழாவை முன்னிட்டு பிரமாண்டமாக 4 தேர்களின் தேரோட்டம் காலை 08.45 AM மணிக்கு தொடங்கியது முதலில் விநாயகர் தேரும் அடுத்து, முருகன் தேரும், மூன்றாவதாக பிரகதாம்பாள் வீற்றிருக்கும் தேரும், கடைசியில் சண்டிகேஸ்வரர் தேரும் நகரத் தொடங்கியது.
இதில் மூன்றாவதாகப் புறப்பட்ட பிரகதாம்பாள் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கத் தொடங்கி சில மீட்டர் கூட நகராத நிலையில் தேர் சாய்ந்தது. இதனால் பக்தர்கள் பதறிக் கொண்டு ஓடியதால் பெரும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்பு வீர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
தேர் சாய்ந்தது என்பது குறித்து பக்தர்கள் கூறுகையில், "இந்த தேர் 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்யப்பட்டது. கரோனா தடையால் சில ஆண்டுகளாக தேர் இழுக்கப்படவில்லை. இந்த வருடம் ஆடிப்பூரம் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. தேரின் அச்சுப் பகுதியில் போடப்பட வேண்டிய இரும்பு பட்டைகள் சரியாக இணைக்கப்படாததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. திருவிழா தொடங்கும் போது அறநிலையத்துறை அதிகாரிகள் தேரை ஆய்வு செய்வார்கள். ஆனால் இந்த புதிய தேரை ஆய்வு செய்திருந்தால், இந்த விபத்து நடந்திருக்காது" என்றனர்.