பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி இதே நாள் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா உட்பட 14 நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சுனாமி விபத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரையோர பகுதிகளில் இன்று சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் தண்ணீரில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வானது கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர் கலைமணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியமூர்த்தி, சின்ன வாய்க்கால் கிராமத் தலைவர் குழந்தைவேலு, புல்மேடு கிராமத் தலைவர் முருகன், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஜவஹர், அரங்கநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.