சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள்., தேவைப்பட்டால் சந்திப்போம்; வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "எடப்பாடி பழனிசாமி பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எடப்பாடி என்னவோ பாஜகவை எதிர்த்துவிட்டது போல அதைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் அவர் வீட்டில் ரெய்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இன்னும் இரண்டு வார்த்தை அதிகம் பேசியிருந்தால் அடுத்த நாள் காலை அவர் வீட்டில் ரெய்டு வந்திருக்கும்.
அவர் சும்மா பம்மாத்து காட்டுகிறார். அவர் யாரையும் எதிர்க்கத் தயாரில்லை. பத்திரிகையாளர் கேட்டதற்கு ஏதோ வாயில் வந்ததைச் சொல்கிறார். அதை எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டு மோடியை எதிர்க்கத் துணிந்துவிட்டார். அமித்ஷாவை எதிர்க்கத் துணிந்துவிட்டார் என்று எடப்பாடியை காலி செய்யும் வேலையைச் சிலர் பார்க்கிறார்கள். அவரின் பேச்சு இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்படும் என்று எடப்பாடிக்குத் தெரிந்திருந்தால் அதைப் பற்றி அவர் வாய் திறந்திருக்கவே மாட்டார். அவர் போதாத நேரம் மாட்டிக்கொண்டுள்ளார். நீங்கள் அதைப் பற்றியே பேசிக்கொண்டுள்ளீர்கள்.
நாளைக்கே அமித்ஷா டெல்லிக்குக் கூப்பிட்டால் எடப்பாடி போகமாட்டாரா? இல்லை நான் வர மாட்டேன் என்று சொல்லப் போகிறாரா., கூப்பிட்ட அடுத்த சிலமணி நேரத்திலேயே அவர் டெல்லிக்குச் சென்றுகொண்டிருப்பார். அம்மா சொன்னார்களே என் வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன், ஏற்கனவே ஒருமுறை தவறு செய்துவிட்டேன், இனிமேல் செய்யமாட்டேன் என்றாரே; அதைப்போல் இவர் ஏதாவது சொன்னாரா? பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி வாய் திறந்து சொல்லவேண்டியது தானே? அவரால் ஒருமுறையாவது இந்த வார்த்தையை உச்சரிக்க முடியுமா? அவர் நினைத்தாலும் முடியாது.
கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துள்ளார்கள். நிலைமை அப்படி இருக்கையில் இவர்கள் ஏதோ அவசரத்தில் பேசியதை எல்லாம் பாஜகவை எதிர்க்கிறார் என்று அவரை பெரிய அரசியல் தலைமை போல் பேசவேண்டிய தேவை இல்லை. அவர் அவ்வாறு எதிர்க்கக் கூடிய தலைவரும் இல்லை, அதற்கான வலிமையும் இல்லை. கட்சி செல்வாக்கு மக்கள் செல்வாக்கு என்ற எதுவுமே அவருக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆகையால் இதை வாய் தவறி என்ற பதத்திலேயே கொண்டு செல்வது எடப்பாடிக்கு நல்லது. எதிர்காலத்தில் பாஜக எல்லா பிரச்சனைகளையும் அதிமுகவில் சரி செய்திருந்தால் அப்போது இவரின் அமித்ஷா பற்றிய இன்றைய கேள்வியைக் கேட்டால் நான் எப்போது அப்படிச் சொன்னேன் என்று கூட கேட்பார். ஆகையால் இதைப் பெரிதாகப் பேசத் தேவையில்லை.
கூட்டணிக்கு ஆள் வந்தால் போதும் என்ற மனநிலையில்தான் எடப்பாடி இருக்கிறார். தினகரனை மட்டும்தான் அவர் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார். நீங்கள் கேட்பதுபோல நான் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்கிறேன் என்றால் கூட அவர் கட்சியில் சேர்ப்பார். இதுதான் அவர் அன்றைக்குக் கூறியது. அவர் பெரிய கொள்கை வாதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்வார். அவருக்கு ஜால்ரா போட வேண்டும்; அப்படிச் செய்தால் பதவி கொடுத்துக் கூடவே வைத்துக்கொள்வார். ஆனால் இது எத்தனை நாட்களுக்கு நடக்கும் என்பதுதான் அவருக்குள்ள வருத்தம். நீண்ட நாட்கள் இது போவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அந்த வருத்தம் அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால் இந்த மாதிரி எதையாவது கூறிக்கொண்டே நாட்களை ஓட்டுவார்" என்றார்.