ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
- மறந்துபோன சினிமா முகங்கள்!
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. அதாவது, உப்பு இல்லாத பண்டமாக இருந்தாலும், உப்பு அதிகமாக இருந்தாலும், அந்த உணவு குப்பைக்குத்தான் போகும் என்பதே இந்தப் பழமொழியின் கருத்தாகும்.
கதையம்சம் கொண்ட ஒரு சினிமாவாக இருந்தாலும், ஹீரோ, ஹீரோயின் மட்டுமே சிறப்பாக நடித்து, அந்த சினிமாவை வெற்றிபெற வைத்துவிட முடியாது. வில்லனின் நடிப்பும் ரசிகர்களைக் கவர வேண்டும். அந்த வில்லன் கதாபாத்திரத்தின் மீது மக்களுக்கு வெறுப்பும், கோபமும் வர வேண்டும். வில்லன் பாத்திரம் சரியில்லையென்றால், அதில் நடித்தவர் சொதப்பியிருந்தால், அந்த சினிமா ஊற்றிக்கொள்ளும். அப்படியென்றால், ஹீரோ, ஹீரோயின், வில்லன் பாத்திரங்கள் மட்டும் சிறப்பாக அமைந்துவிட்டால் போதுமா? ம்ஹூம். துணை நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பானதாக இருக்க வேண்டும். துணை நடிகர்கள் உப்பைப் போன்றவர்கள். அவர்கள் பங்குபெறும் ஒவ்வொரு காட்சியும், அவர்களது தேர்ந்த நடிப்பால் மனதில் ஒட்ட வேண்டும். இவையனைத்தும் இருந்தால்தான், அந்த சினிமாவால் ரசிகர்களைக் கவர முடியும். ஒரு சினிமாவின் வெற்றிக்கு இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற தொழில்நுட்பங்களும் இன்றியமையாதவையே. அதைப் பிறகு பார்க்கலாம்.

திரையில் முகம் மட்டுமே தெரிந்து, ரசிகர்களால் பெயர் உச்சரிக்கப்படாத நடிகர்களாக நடித்து மறைந்தவர்கள் அனேகம்பேர். காலம் கடந்துவிட்டதால், பழைய துணை நடிகர்களின் முகங்களை, ரசிகர்கள் பலர் மறந்திருக்கக் கூடும். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து, நடிப்பில் வெளுத்துக்கட்டிய, பழைய துணை நடிகர்களை, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஓரிரு வரிகளிலோ, விரிவாகவோ, மீண்டும் அடையாளப்படுத்துகின்ற முயற்சி இது!
‘துணை நடிகர் வெங்கடாசலத்தை தெரியுமா?’ என்று கேட்டால் ‘அவர் யாருங்க? எந்தப் படத்துல நடிச்சிருக்காரு?’ என்று கேட்கத் தோன்றும். ‘சிவாஜி நடிச்சாருல்ல தூக்கு தூக்கி.. அதுல அத்தனை பாடல்களையும் சிவாஜிக்காக பாடும் வாய்ப்பைப் பெற்றாருல்ல டி.எம்.எஸ்.சவுந்தரராஜன். அந்தப் படம்தான். அதுல கூட நடிச்சிருக்காரு வெங்கடாசலம்.’ என்று கூறினால், ‘அட, போங்கப்பா.. முகமே தெரியாது.. அப்புறம் எப்படி பேரு விலாசம் தெரியும்.’ என்றே பதில் வரும். சரி, துணை நடிகர் வெங்கடாசலத்தை தெரிந்துகொள்வோம்.
தூக்கு தூக்கியில் மன்னராகவும், சிவாஜியின் தந்தையாகவும் நடித்த பி.எஸ்.வெங்கிடாசலம், “நிறுத்து உன் நியாய வாதத்தை. பொருள் கொண்டுவந்துவிட்டுப் பேசு. அதுவரை என் முன்னால் வராதே. நாட்டு எல்லைக்குள் நீ இருக்கக் கூடாது.” என்று கட்டளையிடும்போது, விழிகளில் கோபம் தெறிக்கும். தேர்ந்த நடிகரால் மட்டுமே, முகபாவத்தை இத்தனை கடுமையாகக் காட்ட முடியும்.

பி.எஸ்.வெங்கிடாசலம் பிள்ளை என்பதுதான் அவரது முழுப்பெயர். தந்தை வேடங்களில் அதிகம் நடித்ததால், அவரை ‘அப்பா வெங்கிடாசலம்’ என்று அழைப்பார்கள். எம்.ஜி.ஆரோ ‘ஆண்டவனே’ என்று கூப்பிடுவார். இவர் எம்.ஜி.ஆர். யூனிட் நடிகர் ஆவார். போதிய வாய்ப்புக்கள் இல்லாமல் தவிக்கும், முதுபெரும் துணை நடிகர்களுக்குத் தன் படங்களில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பார். அதனால், எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்களில், ஒரு காட்சியிலாவது வெங்கிடாசலத்தைப் பார்க்க முடியும்.
தூக்கு தூக்கி, துணைவன், கட்டிலா தொட்டிலா, நாடகமே உலகம், டவுன் பஸ், அமரதீபம், கற்புக்கரசி, நாடோடி, அருட்பெருஞ்ஜோதி, உலகம் சிரிக்கிறது, கண் திறந்தது, சவாலே சமாளி, என் அண்ணன், அக்கரைப்பச்சை, நல்லதுக்கு காலமில்லை, ஞானக்குழந்தை, சாரங்கதாரா, காலம் வெல்லும், அவள் ஒரு காவியம், காசி யாத்திரை, கஸ்தூரி விஜயம், மீனவ நண்பன் என 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் பி.எஸ்.வெங்கிடாசலம்.

கூட்டத்தில் ஒருவராக வந்தாலும், பாமரத் தோற்றம், இயல்பான நடிப்பு, கணீரென்ற வசன உச்சரிப்பு, இவரைத் தனித்துக் காட்டும். குறிப்பிட்ட காட்சியில், தன் சோக நடிப்பால் ரசிகர்களை உருக வைத்துவிடுவார். அப்போது, நம்மில் ஒருவராகவே அவர் தெரிவார். அதனாலேயே, ரசிகர்கள் பலருக்கும் அவர் பெயர் தெரியாவிட்டாலும், முகம் நிச்சயம் தெரிந்திருக்கும்.
பி.எஸ்.வெங்கிடாசலத்தைப் போலவே, எத்தனையோ துணை நடிகர்கள், அரை வயிற்றுக் கஞ்சி கிடைத்தாலே போதும் என்று, கலைத்துறையில் ஒரு ஓரமாக சேவையாற்றிவிட்டு, சுவடு தெரியாமல் மறைந்திருக்கின்றனர். அவர்கள் யார் யாரென்று தொடர்ந்து பார்ப்போம்…
-சி.என்.இராமகிருஷ்ணன்