கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் நமது கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உலகம் முழுவதும் மருத்துவர்களும், அரசாங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் வழியாகவும் கரோனா பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாம் அன்றாட வாழ்க்கையில் அதிகளவு பயன்படுத்தும் மின்னணு சாதனங்களான செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் மேற்பரப்பில் கரோனா வைரசால் இரண்டு நாட்கள் வரை உயிர்வாழ முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே நம் கைகளை எந்த அளவு சுத்தமாக வைத்துக்கொள்கிறோமோ, அதே அளவு நம் கைகளில் வைத்துப் பயன்படுத்தும் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும் எனவும் சில நிறுவனங்கள் அறிவுரை வழங்கியுள்ளன. அதன்படி,
மின்னணு பொருட்களைச் சுத்தம் செய்யும்போது செய்யக் கூடாதவை;
செல்போன் மற்றும் லேப்டாப்பில் நேரடியாகக் கிருமிநாசினிகளைத் தெளிப்பதோ, ஸ்ப்ரே கேன் (Spray Can) மூலம் தெளிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். மேலும், செல்போன் மற்றும் லேப்டாப் மேற்பரப்பைச் சேதப்படுத்தும் வகையிலான கடினமான பொருட்களால் அவற்றைத் துடைப்பதையும் தவிர்க்க வேண்டுமென மின்னணு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. வீட்டு உபயோகப்பொருட்களை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகளை செல்போன் மற்றும் லேப்டாப் மீது பயன்படுத்தக் கூடாது.
மின்னணு பொருட்களைச் சுத்தம் செய்யும்போது செய்ய வேண்டியவை;
சுத்தம் செய்யும் போது செல்போன் மற்றும் லேப்டாப்பை அணைத்துவிட்டு அதன் பிறகே அவற்றின் மீது கிருமிநாசினிகளை உபயோகிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் அடிப்படையிலான துடைக்கும் தாள்களை (Wet Wipes) பயன்படுத்தலாம்.
திசு பேப்பர் (Tissue Paper) மூலம் கிருமி நாசினியைத் தொட்டு, அதனை வைத்து சுத்தம் செய்யலாம்.
Micro fiber துணியில் கிருமி நாசினியைத் தொட்டு, அதன் மூலமாகவும் சுத்தம் செய்யலாம்.
Clorox Wipes -ஐக் கொண்டு தொலைப்பேசிகளைச் சுத்தம் செய்யலாம் என ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
அதேபோல தொலைப்பேசியின் மேற்பரப்பிலிருந்து முகத்திற்கு வைரஸ் பரவுவதைத் தடுக்க ஹெட்போன்களை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹெட்போன்களையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
வேறொருவரின் தொலைபேசி அல்லது மடிக்கணினியை நீங்கள் தொடாமல் இருப்பதும், அதேபோல், உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியை மற்றவர்களுக்கு வழங்குவதைத் தவிர்ப்பவதும் பாதுகாப்பானதாகும்.