தடித்த நாக்கோடு எச்.ராஜா பேசி வருவதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடசர் மூலம் நேற்று அகற்றப்பட்டது.
லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில், ''இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை'' என குறிப்பிட்டிருந்தார். பின்னர் கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தற்கு கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,
உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத நாலாந்தரப்பு அரசியல் தலைவர் அல்ல எச்.ராஜா. பாஜகவின் தேசிய செயலாளர். கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற வகையில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையும் அகற்றப்படும் என்று தெரிவிக்கிறார். கம்யூனிஸம் உலகம் தழுவிய கொள்கை உடையது. பெரியார் சிலையை அகற்றுவோம் என்றும், அகற்ற முயற்சிப்போம் என்றும் சொல்பவர்கள் அகற்றப்படுவார்கள் என்று எச்.ராஜாவுக்கு தெரியுமா?
இதுபோன்று தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில் தடித்த நாக்கோடு எச்.ராஜா பேசி வருவதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பாகும். இவ்வாறு கூறியுள்ளார்.