Skip to main content

டாஸ்மாக் கடையால் பரவாத கரோனா, ஜிம்மில் பரவப் போகிறதா..? - ஜிம் பயிற்சியாளர் கேள்வி!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

ghj


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.


இந்தியாவில் இரண்டு கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அமலில் இருக்கும் மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் இதுவரை செயல்படாத இருந்த பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில கடைகள் திறக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தடை விதித்ததுள்ளன. அந்த வகையில் சலூன் கடைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக உடற்பயிற்சி பயிற்சியாளர் மணிகண்டன் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

கரோனா பாதிப்பு காரணமாகத் திறக்கப்படாமல் இருந்த பல்வேறு நிறுவனங்கள் தற்போது படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் தற்போது திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையங்கள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் எப்படி இருக்கின்றது. இது பற்றி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளீர்களா?

 

 


இந்தியா முழுவதும் ஜிம் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் அரசுக்கு முறையாகத் தெரிவித்துள்ளோம். எங்கள் அசோசியேஷன் மூலம் இதற்கான கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளோம். விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன் கொடுங்கள், நாங்கள் அதனை அடிப்படையாக வைத்து ஜிம் திறந்து கொள்கிறோம் என்று கேட்டுள்ளோம். விரைவில் அதற்கு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து வருகின்றோம். 

தற்போது இருக்கும் நிலைகளில் ஜிம் திறக்கப்பட்டால் வியர்வை வழியாகக் கூட இந்தக் கரோனா தொற்று பரவக்கூடும் என்று சொல்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதில் உண்மை இருப்பதாக நம்புகிறீர்களா?

பரவ வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் காய்கறி கடைக்குச் செல்கிறார்கள். கரோனா பாதித்த ஒருவர் அனைத்து காய்கறிகளையம் தொடுகிறார். பைக் பழுது பார்க்கும் கடைகளைத் திறந்துள்ளீர்கள். அங்கே பலரும் செல்ல வாய்ப்பு இருக்கின்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவது நல்ல வழிமுறைதான். ஆனால் முழுவதுமாகத் திறக்கக் கூடாது என்று சொல்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அனைத்திலும் ரிஸ்க் இருக்கின்றது. கூட்டமாக வருவதும், வியர்வை வழியாகப் பரவுகின்றது என்றால் டாஸ்மாக் கடைகளில் அடித்து கொண்டு நிற்கும்போது கரோனா பரவாதா? அதைவிடவா ஜிம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. வழிமுறைகளை உருவாக்க வேண்டுமே தவிர முற்றிலுமாகத் தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.