உலகத்தை நாசமாக்கி வரும் கரோனா தொற்று இந்தியாவில் தென்படத் தொடங்கிய நிலையிலேயே, 5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கியது. அதேபோல், பங்குச் சந்தையும் கடுமையான சரிவைச் சந்தித்தது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால், அரசுக்குக் கிடைக்கும் வருவாயிலும் கணிசமான இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்தான், 21 நாள் முடக்கத்தை ஏழை-எளிய மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வியுடன், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம், பத்து அம்சத் திட்டத்தை மத்திய அரசுக்கு ஆலோசனையாக வழங்கி இருந்தார். அதில், கிஷான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியை ரூ.12 ஆயிரமாக உயர்த்தவேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். ஜன் தன் வங்கிக் கணக்குகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும்.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கவேண்டும். அனைத்து வார்டுகளிலும் பிரத்யேக பதிவு அலுவலகங்கள் திறந்து, உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். எல்லா வகையான வரிகளையும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான காலத்தை ஜூன் 30ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கியிருந்தன.
ஏற்கனவே, எந்த வங்கிக்கிளையின் ஏ.டி. எம்.மில் பணம் எடுத்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் மார்ச் 31ந்தேதியில் இருந்து ஜூன் 30ந்தேதியாக மாற்றம் என நிதியமைச்சர் நிர்மலா கீதாராமன் அறிவித்திருந்த நிலையில், ப.சிதம்பரத்தின் இந்த ஆலோசனைப் பட்டியல் சாமான்ய மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தியது.
மார்ச் 26ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கரோனா தொற்று ஏற்பட்டு நாடே முடங்கியிருக்கும் நிலையில், ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1லட்சத்து 70 ஆயிரம் கோடியை நிதியாக ஒதுக்குவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம். மூத்தக் குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய். மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தில் இருந்து, ரூ. 2 ஆயிரம் உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வழங்கப்படும் எனத் தொடங்கி பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பெண்கள், முதியோர், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் சார்ந்த குறைந்தபட்ச உதவியாக இது அமைந்தது. பி.எஃப் திட்டத்திலும் ஒரு சில உதவிகளை செய்ய முன்வந்துள்ளது மத்திய அரசு.
நாடு முழுவதும் ஊரடங்கு என்பதால் உணவு அடிப்படைத் தேவையாக உள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும். கரோனா தொற்று சமயத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட திட்டங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருந்தன.
அதேசமயம், இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை, வங்கிக் கடன் தவணை உள்ளிட்டவற்றைப் பற்றி நிர்மலா கீதாராமன் தனது அறிவிப்பில் வாய்திறக்கவில்லை. மாதாந்திர வருமானம் ஈட்டுவோருக்கு இதனால் சிக்கல் இல்லையென்றாலும், அன்றாட வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள் இன்னலுக்கு ஆவார்கள் என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். மேலும், வங்கிகள் வட்டி வசூலிக்கத் தடை என்ற மத்திய அரசின் உத்தரவை, தன்னாட்சி அமைப்பான ஆர்.பி.ஐ. உறுதி செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ரெப்போ விகிதத்தை 0.7 சதவீதம் குறைத்து அறிவித்திருப்பதன் மூலம் கடன்களுக்கான வட்டி ரத்தாகாமல் குறைய மட்டுமே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல், வங்கித் தவணைகளை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவை பலரும் வரவேற்கின்றனர்.
இந்நிலையில், மோடி அரசின் முதற்கட்ட செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் பாராட்டியுள்ளபோது, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான மத்திய அரசின் திட்டத்தை கவனத்துடன் வரவேற்பதாக ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் அறிவிப்புகளில் சில நான் அறிவித்த 10 அம்சத் திட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், வரி செலுத்துவதற்கான கெடு, ஜி.எஸ்.டி. வரியைக் குறைப்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இதுவொரு அடக்கமான திட்டம். நிச்சயம் இது போதவே போதாது என்பதை அரசு கூடிய விரைவில் உணரும் என்று அவர் நிதியமைச்சரின் அறிவிப்பை விமர்சித்துள்ளார்.
இன்னொருபுறம், மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மதிப்பீட்டளவில் ரூ.1.7 லட்சம் கோடி என்று இருந்தாலும், மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்யாமல் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக பல லட்சம் மக்களுக்கு பலன்தராமல் போகக்கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
-ச.ப.மதிவாணன்