கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதை கவலையுடன் கவனிக்கிறது பிரதமர் அலுவலகம். பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத் துறையுடனும் மாநில அரசுகளுடனும் விவாதித்தபடி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடியிடம் அண்மையில் பேசிய மோடி,தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கிறது.
வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, தமிழகம் கந்தக பூமி என்பதாலும் கோடை காலம் துவங்கியிருப்பதாலும் கரோனா வைரஸ் தமிழகத்தைத் தாக்காது என்கிற ஒரு நம்பிக்கையை முதல்வரிடம் ஏற்படுத்தியிருந்தனர்.அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் அசால்ட்டாகவே இருந்தது எடப்பாடி அரசு.முழுமையான ஊரடங்கு சூழலிலும்,ஓரிரு துறைகள் தவிர பெரும்பான்மையான துறைகளை அத்யாவசியத் துறைகளின் பட்டியலில் இணைத்து அதன் அதிகாரிகளை அலுவலகத்துக்கு வந்து வேலையைப் பாருங்கள் என உத்தரவு போடப்பட்டதையும், அமைச்சர்கள் பலரும் தங்களது இஷ்டம் போல பேட்டி தருவதையும்,மக்கள் ஒன்று கூடலைக் கட்டுப்படுத்தத் தவறியதையும், எதற்காக முழு ஊரடங்கை மோடி அறிவித்தாரோ அது நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாததையும் நோட் போட்டு டெல்லிக்கு அனுப்பியது மத்திய உளவுத்துறை.
தினமும் டெல்லிக்கு அறிக்கை அனுப்பும் உளவுத்துறையினர், அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்குத் தேவையான கையுறை கூட போதிய அளவுக்கு இல்லை என்பதையும்; வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடு, கரோனாவுக்கான தனி படுக்கைகள் தட்டுப்பாடு,தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்படுத்துதலில் சுணக்கம் எனப் பல விசயங்களையும் எடப்பாடி அரக்கு எதிராக டெல்லிக்கு அனுப்பியபடி இருந்தனர்.
கோபமடைந்த பிரதமர் மோடி தமிழக அரசிடம் பேசும் முறை வந்தபோது, எடப் பாடியைத் தொடர்புகொண்டு கோபத்தை வெளிப்படுத்தினாராம். அமைச்சர்கள் எதற்கு அடிக்கடி பேட்டி கொடுக்கிறார்கள்? அவர்கள் ஊர்வலம் போவதும் அவர்களுக்குப் பின்னால் ஒரு படை செல்வதும் எதற்கு? உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஒரு அரசின் கடமை.அதில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் போதும்.நாட்டில் என்ன சூழல் இருக்கிறது என்பதையும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பற்றியும் மக்களுக்குச் சொல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். தமிழக அரசிடம் நிறைய எதிர் பார்த்தேன்.ஆனா, கரோனாவை கட்டுப்படுத்துவதில் எனக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளீர்கள் என முதல்வரை கண்டித்துள்ளார் பிரதமர்.
அதனையடுத்தே ஒவ்வொரு பிரச்சனைகளையும் கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அடங்கிய 9 குழுக்களை அமைத்த எடப்பாடி,அமைச்சர் விஜயபாஸ்கரிடம், இனி தினமும் பேட்டி தர வேண்டாம்;ஹெல்த் செக்ரட்டரியே பேட்டி தரட்டும் எனச் சொன்னதோடு,இதே உத்தரவை மற்ற அமைச்சர்களுக்கும் தெரியப்படுத்தினார்.அதேபோல, கலெக்டர்கள்தான் பேட்டி தர வேண்டுமென்கிற உத்தரவும் மாவட்ட ஆட்சியர்களுக்குப் போனது.இதனால்தான் கடந்த சில நாட்களாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி தருகிறார் என்கிறார்கள் வருவாய்த்துறையினர்.
மோடியின் கண்டிப்பைத் தொடர்ந்து, மக்கள் ஒன்று கூடுதலைக் கட்டுப்படுத்துவதிலும், காய்கறி சந்தைகளில் கூடும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவதிலும் சீரியஸ் காட்டியது எடப்பாடி அரசு.அது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க,சந்தைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் ; தேசிய நெடுஞ் சாலைகளில் 1 மீட்டர் இடை வெளியில் மக்களை வரிசையில் நிற்க வைத்து சந்தை பொருட்களை வாங்கிச் செல்வதற்கேற்ப நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் ; மக்கள் ஒரு முறை வெளியே வந்தால் தேவையான மளிகை சாமான்கள்,காய்கறிகள், மருந்துகள் வாங்கிச் சென்று விட வேண்டும் என்கிற யோசனைகளை அதிகாரிகள் தெரிவித்தனர்.அதனை உடனடியாகச் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டார் எடப்பாடி.
இந்த நிலையில், ஒவ்வொரு பணிகளையும் கவனிக்க அமைக்கப்பட்ட 9 குழுக்களின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனும் 29-ந்தேதி ஆலோசனை நடத்தினார் எடப்பாடி.அந்த ஆலோசனையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், அத்யாவசியப் பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்கள் வராததால் புதிய உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. வைரஸ் தாக்கம் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. ஆனால், இதனைச் சமாளிக்க அரசு மருத்துமனைகள் மட்டுமே போதாது. இனி வரும் நாட்களில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது ஏற்படும் ஆபத்துகளும் பொருளாதார நெருக்கடியும் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கும்.
வைரஸ் பரவுதலைத் தடுக்க மைக்ரோ லெவல் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறோம். தனியார் மருத்துவக் கல்லூரிகள் அடங்கிய மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தையும் கரோனா சிகிச்சைக்காக அரசு கையகப் படுத்த வேண்டும்.குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் சில ப்ளாக்குகள் மட்டும் எடுத்திருப்பது போதுமானதாக இல்லை.2 லட்சம் நபர்களைக் கண்காணிக்கிறோம் என்கிற தகவலும்,தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பதும் மக்களிடம் ஒருவித அச்சத்தை உருவாக்கியிருக்கிறது என்றெல்லாம் தெரிவிக்க ஏகத்துக்கும் அப்-செட்டாகியிருக்கிறார் எடப்பாடி.
"எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். வைரஸ் பரவுதலைத் தடுத்த மாநிலம் என தமிழகத்தைத்தான் சொல்ல வேண்டும்.இனி ஒரு முறை நம் மீது பிரதமருக்கு அதிருப்தி வரக்கூடாது என எடப்பாடி கேட்டுக் கொண்டார்'' என்கிறார் ஆலோசனையில் கலந்து கொண்ட ஒரு அதிகாரி.இதற்கிடையே சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு வருகை தந்த 2,09,284 நபர்களைக் கண்காணித்து வருவதாகவும், 74 ஆயிரத்து 533 பயனிகளைத் தனிமைப்படுத்தியிருப்பதாகவும்,2040 ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைகளுக்கு உட்படுத்தியிருப்பதாகவும், 364 நபர்கள் மருத்துவமனை ஐசோலேஷன் வார்டுகளில் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதாகவும் கடந்த 30-ந்தேதி சில புள்ளி விபரங்களைத் தெரிவித்திருக்கிறது தமிழக சுகாதாரத் துறை.
இந்தப் புள்ளி விபரங்கள் குறைத்து காட்டப் பட்டிருப்பதாகக் கூறும் சுகாதாரத்துறைக்கு நெருக்கமானவர்கள்,தமிழகம் ஆபத்தான வளையத்தில் சிக்கியிருக்கிறது.அதிலிருந்து மக்களை மீட்க இன்னும் அதிக கவனம் வேண்டும். மைக்ரோ லெவல் ஆபரேசனிலுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத் துவதும்,கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை 2 மணி நேரத்தில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு சோதனைகளை மேம்படுத்துவதும் அவசியம் என அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.
இந்தச் சூழலில், இந்தியா எதிர் கொள்ளவிருக்கும் பொருளாதார நெருக்கடியில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும் அதனூடான பல்வேறு பிரச்சனைகளைச் சமாளிக்கவும் நிதி வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் மோடி. இதற்காக,புதிதாக ஒரு அக்கவுண்ட் நெம்பரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.பாலிவுட் நடிகர்களும் பிரபல தொழிலதிபர்களும் நிதி உதவியளித்து வருகின்றனர். மோடியின் நிதி கோரலிலும் சில சர்ச்சைகளைக் கிளப்புகிறது ஆடிட்டர் உலகம்.
இயற்கை பேரிடர் காலங்களில் மக்களிடம் அரசாங்கம் நிதி உதவி கேட்பது இயல்பானது தான்.இதற்காக, ப்ரைம் மினிஸ்டர் தேசிய நிவாரண நிதி (பி எம் என் ஆர்.எஃப் ) என்கிற அக்கவுண்டை உருவாக்கி வைத்திருக்கிறது மத்திய அரசு.இந்தக் கணக்கிற்காக ஏஏசிடிபி 4637கியூ என்கிற பான் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அக்கவுண்டில் அளிக்கப்படும் நிதிக்கு வரிவிலக்கு, ரகீதும் உண்டு. இந்த அக்கவுண்டைத்தான் முந்தைய பிரதமர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், நடைமுறையிலுள்ள அந்த அக்கவுண்டைப் பயன்படுத்தாமல் பிஎம் கேர்ஸ் (பிஎம் சிஏஆர்இஎஸ்) என்கிற பாரத ஸ்டேட் வங்கியின் புதிய அக்கவுண்டை (எண்: 2121பிஎம் 20202, ஐஎஃப்எஸ்சி கோட்: எஸ்பிஐஎன்0000691) கொடுத்திருக்கிறார்கள்.பிரதமரின் தேசிய நிவாரண நிதி என ஒன்று இருக்கும் போது,புதிதாக எதற்கு ஒரு அக்கவுண்டைத் தர வேண்டும்? தவிர, இந்த அக்கவுண்டில் பான் எண், அதுவும் இணைக்கப்படவில்லை.அதனால், இந்த அக்கவுண்டுக்கு கொடுக்கப்படும் நிதி உதவிக்கு வருமானவரி விலக்கு பெற முடியாது.மேலும் ரசீதும் கிடைக்காதாம்.ஆன்லைன் தனியார் நிறுவனமான "ஃபோன்பே' விற்கும் தற்போதைய புதிய அக்கவுண்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் உண்டு.இது தொடர்பாக சில விவகாரங்கள் விரைவில் பூதாகரமாகும் என்கிறது ஆடிட்டர் உலகம்.