ஆட்டுக்குத் தாடியும் ஆளுநர் பதவியும்!

பிரிட்டனில் ராணிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அந்த அளவுக்குத்தான் இந்தியாவில் ஜனாதிபதிக்கு அதிகாரம். ஆனால், பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பிரிட்டன் மக்கள் நம்பிகையோடு சொல்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஜனாதிபதி பதவியும் அப்படித்தான். ஆனால், பெரும்பாலான ஜனாதிபதிகள் மத்திய அரசு காட்டுகிற பேப்பரில் கையெழுத்துப் போடுகிறவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது கண்கூடான உண்மை.
இப்படி இருக்கும்போது, அவரால் நியமிக்கப்படுகிற ஆளுநர்களுக்கு என்ன பொறுப்பு இருந்துவிடப் போகிறது? அதனால்தான், ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணா நன்றாகவே சொன்னார்.
அரசியல் சட்டத்தை பாதுகாப்பவர்கள் என்று குடியரசுத் தலைவரையும், ஆளுநரையும் சொல்வதுண்டு. ஆனால், சட்டத்தை உருவாக்கும் உரிமையை அரசியல் சட்டம் அவர்களுக்கு கொடுக்கவில்லை. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் மட்டுமே அந்த உரிமை இருக்கிறது.
அரசியல் சட்டத்தையே திருத்தும் உரிமையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது.
ஆனால், மாமியாருக்கு வேண்டாத மருமகளாக மத்திய அரசுக்கு பிடிக்காத மாநில அரசுகளாக இருப்பவற்றுக்கு தொல்லை கொடுக்கவே ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவதும் உண்டு.
அந்த வகையில் ஒரு மாநில அரசை கலைப்பதற்கு ஆளுநரின் அறிக்கை ஒன்றே போதுமானது. அதாவது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எனவே குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்கலாம் என்று மாநில ஆளுநர் ஒரு அறிக்கை அனுப்பினால் போதும். ஆட்சியை கலைத்துவிட அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு இடமளிக்கிறது.
அது இல்லாமல், மாநிலத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக தெரிந்தால், அந்த அரசாங்கத்தை கலைக்கவும் அரசியல் சட்டம் அனுமதி அளிக்கிறது.
அமைதியாக இருக்கிற மாநிலத்தை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும், பெரும்பான்மையோடு இருக்கிற அரசாங்கத்தை சில தில்லுமுல்லுகள் மூலமாக பெரும்பான்மை இழந்துவிட்டதாகக் கூறியும் கலைக்கச் சிபாரிசு செய்த சம்பவங்கள் இந்தியாவில் ஏராளமாக இருக்கிறது.
மாநில அரசோடு இணக்கமாக இருந்த பல ஆளுநர்களும், மாநில அரசோடு முரண்டுபிடித்து மோதல் போக்கை கடைப்பிடித்த ஆளுநர்களும் தமிழகத்தில் பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.
நெருக்கடி நிலைக் காலத்தில் திமுக ஆட்சியை கலைத்துவிட்டு சுமார் ஒரு ஆண்டும், 1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு ஆண்டும் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றிருக்கிறது.
இந்த இரண்டு முறையும் ஆளுநர்களின் சுய விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு. நெருக்கடி நிலையை எதிர்த்ததால் அன்றைய ஆளுநர் கே.கே.ஷா வை வற்புறுத்தி கையெழுத்து பெற்று திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர், தனது பெயருக்கு முன்னால் உள்ள கே.கே. என்பதற்கு கலைஞர் கருணாநிதி என்று விளக்கம் கொடுக்கும் அளவுக்கு கலைஞரிடம் பாசம் கொண்டிருந்தார்.
1991 ஆம் ஆண்டு திமுக அரசை கலைக்க அறிக்கை கேட்டபோது உறுதியாக மறுத்தவர் அன்றைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா. ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே, அதர்வைஸ் என்ற ஆங்கில வார்த்தையை சாதகமாக்கி திமுக ஆட்சியைக் கலைத்து கையெழுத்துப் போட்டவர் ஆர்.வெங்கட்ராமன். இவர், தமிழ்நாட்டை சேர்ந்த பார்ப்பனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற சமயத்தில் எல்லாம், மத்திய அரசின் விருப்பங்கள் தமிழகத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசுப் பட்டியலில் இருந்த பல உரிமைகள் பறிபோயிருக்கின்றன.
முதல்வர் இருக்கும்போதே மாநில அரசின் உரிமையில் ஆளுநர் மூக்கை நுழைக்கும் காரியம் இப்போதுதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. இத்தனைக்கும், இந்த மாநிலத்தில் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. ஆளும் அதிமுக அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
மாநில அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டு நீதிமன்றங்களில் வாய்தா வாங்கி நீடிக்கும் நிலையில் இருக்கிறது. இதுகுறித்தெல்லாம் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் முந்தைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பல மனுக்களை கொடுத்திருக்கின்றனர்.
அந்த மனுக்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் மாநில நிர்வாகம் சீர்கெட காரணமாக மத்திய அரசும், அதன் ஏவலாளாக ஆளுநரும் செயல்பட்டனர். பாஜக தனது மதவெறி செயல்திட்டங்களை தமிழகத்தில் அரங்கேற்ற அதிமுக குழப்பங்களை பயன்படுத்திக் கொள்கிறது.
இப்போது, நேரடியாகவே, ஆளுநரை முதல்வரைப் போல செயல்படச் செய்து மாநில உரிமையை கபளீகரம் செய்கிறது.
பிரதமர் மட்டுமே முதல்வர்கள் கூட்டத்தையும், தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்ட அதிகாரம் படைத்தவர். அவருக்கு பதிலாக ஜனாதிபதி மாநில முதல்வர்கள் கூட்டத்தையும், தலைமைச் செயலாளர்களையும் கூட்டினால் எப்படி தவறோ, அதேபோல்தான் இப்போது ஆளுநர் செய்யும் ஆய்வு நடவடிக்கைகள்.
இத்தகைய அதிகார அத்துமீறல்களை மாநில அரசு கண்டுகொள்ளாமல் அனுமதிப்பது தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுக்கும் செயல் ஆகும்.
-ஆதனூர் சோழன்