இதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி...
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மடிக்கக்கூடிய மின்கலன்(foldable battery) என்பது ஒரு புரட்சியே. அடிப்படையில் இது மருத்துவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது என்றாலும் இது அனைத்து துறைகளிலும் புரட்சி செய்தே தீரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வட அயர்லாந்திலுள்ள குயின் பல்கலைக்கழகம், பெல்பாஸ்ட் விஞ்ஞானிகள் (Queen university, Belfast scientists) கரிமத்தை கொண்டு மடிக்கக்கூடிய மின்கலன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதை எப்படி வேண்டுமானாலும் தகவமைத்து கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு.
இதுகுறித்து, ஆராய்ச்சிக் குழுவில் உள்ள டாக்டர். கீதா ஸ்ரீநிவாசன் கூறியதாவது, "இந்த மின்கலன் இப்போது பயன்பாட்டில் உள்ளது, இது தீ பிடிக்காது மற்றும் கசியாது(non flammable, do not leak) , இதயத்துடிப்பை சரிசெய்யும் பேஸ் மேக்கர் (pace maker) என்ற கருவியின் அடுத்த கட்டம் இந்த மின்கலனின் அடிப்படையில் இருக்கும். பேஸ் மேக்கர் பயனாளிகளின் சதையை அழுத்தி அவர்களுக்கு சில கோளாறுகளை உருவாக்கியது. பொதுவாக மனிதஉடல் வளையும் தன்மை உள்ளது என்பதால் இந்த மின்கலத்தால் ஆன பேஸ் மேக்கரை உடலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து பொறுத்த முடியும். இது அவர்களுக்கு சௌகரியத்தை கொடுக்கும்".
தற்போது இது மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்பட்டாலும் எதிர்காலத்தில் மடிக்கக்கூடிய கைப்பேசி மற்றும் மடிக்கக்கூடிய கணினி ஆகியவற்றிற்கு உதவியாக இருக்குமென்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. ஏற்கனவே காகித மின்கலன் (battery) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமல் குமார்