சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபென்சிங் (வாள் வீச்சில்) விளையாட்டில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து தங்கம் வென்ற ஜிஷோ நிதி முதல் முறையாக நக்கீரனுக்கு அளித்த பேட்டி. "மார்த்தாண்டம், ஆத்தூர் அருகே இருக்கும் ஒரு சிறியக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். பள்ளிப்படிப்பு முழுக்க எங்கள் ஊரிலேதான் முடித்தேன். ஆஸ்திரேலியாவில் கேனப்ரா சீனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. என் முதல் அண்ணன் ஜிஜோ நிதி, சென்னையில் நடந்த ஜூனியர் காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்றார் அதன் மூலமாகத்தான் எனக்கு ஃபென்சிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. எட்டாம் வகுப்பு முதலே நான் ஃபென்சிங் பயிற்சி பெற்றுவருகிறேன். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அசாம், குவாஹாத்தியில் நடந்த தேசிய அளவில் நடந்த 'அண்டர் 17' போட்டியில் முதல்முறையாக கலந்துகொண்டேன். எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியரும், கன்னியகுமாரி ஃபென்சிங் பயிற்சி மையத்தின் பயிற்சியாளருமான அமிர்தராஜ் என்பவர்தான் எனது பள்ளிப்பருவ ஃபென்சிங் ஆசிரியராக இருந்தார். இதுவரை மொத்தம் 27 சர்வதேச விளையாட்டுகளில் பங்குபெற்றுள்ளேன், அதில் எட்டு போட்டிகளுக்கு என் அப்பாவும், அம்மாவும்தான் செலவு செய்து அனுப்பினார்கள். நான் எப்போதெல்லாம் சர்வதேசப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்கிறேனோ, அப்போதெல்லாம் என் அப்பா எப்படியாவது பணத்தைப் புரட்டி என்னை அனுப்பிவைப்பார்.
அவர்கள்தான் எனக்கு உறுதுணை.
சத்தீஷ்கரில் 2007-ல் நடந்தப் போட்டியில் முதல்முறையாக எங்கள் அணியில் பதக்கத்தை பெற்றேன். ஆனால், அந்தப் போட்டியில் தனிப்பட்ட முறையில் ஐந்தாவது இடத்தில் இருந்தேன். இந்தியாவில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிட்டியூட்-ல் மிக சிறந்த இன்ஸ்டிட்டியூட்டான ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிட்டியூட்-ல் இருந்து பயற்சியாளர்கள் சத்தீஷ்கர் போட்டிக்கு வந்திருந்தனர். அங்கு எனது பர்ஃபார்மன்ஸை பார்த்துவிட்டு அவர்களாக என்னை, அவர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தனர். அதன் பின் 2009 ஏப்ரல் மாதம் நான் அந்தப் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்த சில மாதங்களில் அண்டர் 17 மற்றும் ஜூனியர் போட்டிகள் நடைபெற்றது அதில் எதிலும் என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை. அதனால் இன்னும் கடின உழைப்பை மேற்கொண்டேன். பிறகு அதே வருடம் சேலத்தில் தேசிய அளவில் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது அதில் வெண்கலம் வென்றேன். 2009 டிசம்பர் மாதம் இந்தியன் கேம்ப் ஆரம்பமானது அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஆசிய ஜூனியர் கேடட் போட்டி நடைபெற்றது அதில் கால் இறுதி சுற்றுவரை சென்றேன். இதுவெல்லாம் நடக்கும்போது எனக்கு 16 வயது. அதன் பின் தாய்லாந்தில் நடந்த தாய்லாந்து ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பட்டமுறையில் வெள்ளியும் அணியில் வெண்கலமும் வென்றேன். 2010-ல் ஆஸ்திரேலியா, மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் எங்கள் அணி, அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றுது. அதன் பின் அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் நடந்தப் போட்டியில் 43 : 45 எனும் கணக்கில் தோல்வியுற்றோம் அதனால் அதில் வெண்கலமும் கிடைக்காமல் திரும்பினோம்.
2010-ல் சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில் பங்குபெற்றேன். அப்போது எனக்கு 17 வயது மட்டுமே. அந்த வருடம் மட்டும் நான் மொத்தம் 6 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தேன். அதன்பின் 2011-ல் இந்திய இராணுவத்தில் சேர்ந்தேன். அதன்மூலமாக உலக இராணுவ போட்டியில் பங்குபெற்றேன். அதில் பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அதில் பங்குபெற்றதே பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் போட்டிக்கு சென்று திரும்பியதும் அலக்ஸி எனும் உக்ரைன் நாட்டு பயிற்சியாளர் பூனேவில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றேன். 2012, பிப்ரவரியில் இங்கிலாந்தில் நடந்த ஜூனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பட்ட முறையிலும் அணியாகவும் வெண்கலம் வென்றேன். அதன்பிறகு அலக்ஸி அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அவர் இல்லாமல் எனது பர்ஃபார்மன்ஸ் கொஞ்சம் சரியத் தொடங்கியது. ஆனால், 2015-ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டிற்காக தனிப்பட்ட முறையிலும் அணியிலும் தங்கம் வென்று கொடுத்தேன். அதன் பின் தற்போது கேனப்ரா, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளேன். இதுவரை ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளேன். அதில் இப்போது வாங்கியிருக்கும் இந்தப் பதக்கம்தான் வெளிநாட்டில் முதல்முறையாக தேசியகீதம் இசைக்க இந்தியாவிற்காக வாங்கியது.
ஆஸ்திரேலியா, கேனப்ரா காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பட்ட முறையிலான போட்டி காலை 9.30 மணிக்கு கேனப்ராவில் நடைபெற்றது. அதில் பதக்கம் ஏதும் என்னால் வெல்லமுடியவில்லை. கேனப்ரா காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிக்கு சரியான நேரத்தில் விசா கிடைக்காததனால் அங்குப்போய் சேருவதற்கே அதிகாலை 3.30 மணியானது அதனால் சரியான தூக்கம் இல்லாமல், வார்ம்-அப் இல்லாமல் விளையாட நேர்ந்தது. அதனால்கூட பதக்கம் வெல்லாமல் போயிருக்கலாம் என கருதுகிறேன். ஆனால், அந்தப் போட்டியில் 39 பேர்களில் 6-வது ரேங்க் எடுத்தேன். அதேசமயம் அணிக்கானப் போட்டியில் இங்கிலாந்து எதிராக தங்கம் வென்றோம். இதில் சிறப்பு என்னவென்றால் தொடர்ச்சியாக இங்கிலாந்துதான் தங்கம் வென்றுவருகிறது. ஆனால், இந்தமுறை நாங்கள் அவர்கள் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளோம்.
ஃபென்சிங் பொறுத்தவரையில் பலத்தை உபயோகப்படுத்தி வெற்றி பெறமுடியாது. இதில் நுட்பமான தந்திரங்கள்தான் வெற்றியைத்தரும். அதற்கு ஃபென்சிங் வீரர்கள் அதிகமான போட்டிகளில் பங்குபெற்று அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு பத்து முதல் பதினைந்துப் போட்டிகள் நடைப்பெறுகிறது. அதில் குறைந்தது சில முக்கியப் போட்டிகளுக்காவது இந்திய அணியை அனுப்ப வேண்டும். உலகில் விலை உயர்ந்த விளையாட்டில் ஃபென்சிங் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் உபகரணங்கள் எல்லாம் மின்சாராத்தால் ஆனது. அதுவும்கூட அதிகமான போட்டியில் இந்தியா பங்கு பெறாததிற்கு காரணமாக இருக்கலாம். மாநில அரசும்கூட ஃபென்சிங் விளையாட்டு வீரர்களுக்கு உதவிகளை செய்துவருகிறது, இருந்தாலும் வெளிநாட்டு போட்டிகளுக்கு அழைத்துப்போவதும், வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறுவதிலும் இந்திய வீரர்களுக்கு தேவைகள் அதிகமாக இருக்கிறது. நானுமேகூட பயிற்சி பெறுவதற்காக என் சொந்த செலவில், நான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்று, இருபத்திஐந்து நாட்கள் இருந்தேன். ஆனால் என்னால் பண நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திரும்பிட்டேன். நமக்கும், வெளிநாட்டினருக்குமிடையே இருக்கும் வித்தியாசம் என்றால், வெளிநாட்டினருகளிடம் அதிகமான அனுபவும் உள்ளது. ஆனால், நம்மிடம் பயிற்சிகள்தான் அதிக அளவில் உள்ளது. அந்த அனுபவம் இல்லாததனால்தான் நாம் அவர்களிடம் தோற்று போவதற்கு காரணம். நாமும் அவர்களைப்போல் ஃபென்சிங்கில் அதிக அனுபவம் கொண்டால் நம்மிடம் இருக்கும் கடின உழைப்பால் அவர்களை எளிதில் வெல்ல முடியும்."