மனித சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது கரோனா வைரஸ் காய்ச்சல். இந்த நோய் யாரைத் தாக்கியிருக்கிறது.? யார் மூலம் யாருக்குப் பரவுகிறது.? நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் இவருக்கு நோய்த் தொற்று இருக்குமா? என்பதை எவராலும் கணிக்க முடியாது. நோய் அறிகுறி மூலமும், மருத்துவ பரிசோதனை மூலம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையின்போது, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரோடு தொடர்பிலிருந்த உறவினர்கள். நண்பர்கள் ஆகியோர் தேடிப்பிடித்து, சிகிச்சை அளிப்பது சுகாதாரத் துறையினருக்குச் சவாலான காரியமாக இருக்கிறது.
இதை எளிமைப்படுத்த சிவகங்கை மாவட்ட எஸ்.பி.ரோகித்நாதன்-அவரது மனைவி காவேரி சுப்பையா ஆகியோர் இணைந்து செல்போன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இதன்படி, செல்போன் சிக்னலை டிராக் செய்வதன் மூலம், நோய்த் தொற்று உடைய நபரோடு தொடர்பிலிருந்தவர்கள் யார்? அவர் எங்கெல்லாம் சென்று வந்தார் என்பதைக் கண்காணித்து. அவரோடு தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காண முடியும். இதன் மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தி நோய் பரவலைத் தடுக்க முடியும்.
எஸ்.பி.ரோகித்நாதன் இதுகுறித்து நம்மிடம்,"உதாரணத்திற்கு ஜெயக்குமார் என்பவர் வெளிநாட்டிலிருந்து சென்னை வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யும்போது, எந்த நோய் அறிகுறியும் இல்லை. உடனே மருத்துவர்கள் 15 நாட்களுக்கு வெளியே எங்கேயும் செல்லக் கூடாது, வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி விடுவர். ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியே நடமாடுவார். நண்பர்களுடன் பழகுவார். இதை நாம் கட்டுப்படுத்த முடியாது.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு வாரத்தில் அவருக்குக் காய்ச்சல் ஏற்படும். உடனே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்வார். பரிசோதனை முடிவுகள் கிடைக்க 3 நாட்களாகும். அதில் கரோனா பாசிட்டிவ் எனத் தெரியவரும். இதையடுத்து, அவருடைய உறவினர்கள் யார் யார்? இந்த 10 நாளில் அவர் எங்கெல்லாம் சென்றார்? யார் யாரைச் சந்தித்துப் பேசினார்? என்பதைச் சுகாதாரத் துறையினர் தேட வேண்டும். எனவே தான் இதுபோன்ற நபர்களை செல்போன் எண் மூலம் நாம் டிராக் செய்தாலே, அவரோடு தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிக்க முடியும்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர் மட்டுமல்ல. அண்டை மாநிலத்தில் வேலை செய்து, அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். கடந்த 2,3 வாரங்களில் அவர் எங்கெங்கு சென்றார். யார் யாரைச் சந்தித்தார் என்பதைக் கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்த முடியும். ஒருவகையில் இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது தான். என்றாலும், இப்போதைக்கு இது அவசியமானது. அதனால் தான் உள்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. விரைவில் இந்த செயல்பாடு தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்" என்கிறார் அவர்.