Skip to main content

குடிக்க  தண்ணியில்ல, குழந்தைகளுக்கு பாலுமில்ல... நாங்க என்ன தீண்டத்தகாதவங்களா? கதறிய மக்கள்; ஆறுதல் படுத்திய வேல்முருகன்!!

Published on 25/11/2018 | Edited on 25/11/2018


 

velmurugan tvk



டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட "கஜா" புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லவில்லை. அரசின் நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை. 


இந்த நிலையில் அப்பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தை நேரில் பார்வையிட்டும்,  புயலால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரண உதவிகளை அளிக்கும் வகையிலும் கடந்த 21- 11- 2018 முதல் 23 -11 -2018 வரை மூன்று நாட்கள் தங்கி 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிவாரண உதவிகள் செய்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். 


 

velmurugan tvk

 

புயலால் பாதிக்கப்பட்ட  டெல்டா  மாவட்டங்களிலுள்ள  திருமண மண்டபங்களில் தங்கி  தன் சொந்த நிதியிலிருந்து இரண்டு கட்டமாக  நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தற்போது மூன்றாவது கட்ட நிவாரண பணிகளுக்காக ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, பிரட், பிஸ்கட், பால், போர்வை, தார்பாய்கள், உடைகள், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி  ஆகியவற்றை வழங்கி வருகின்றார். நிவாரண உதவிகளுக்கான பொருட்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றனர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.
 

velmurugan tvk

 

கீழையூர் ஊராட்சியில் உள்ள தாழபந்து கிராமத்தில்  மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்றனர்.   புயலால் பாதிக்கப்பட்டு  சிதிலமடைந்து கிடக்கிறது இந்த கிராமம்.  இப்பகுதிக்கு சென்ற வேல்முருகனிடம், 
 

velmurugan tvk


"புயலால் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களாகியும் ஒருத்தரும் இந்த பகுதிக்கு எட்டிப் பார்க்கலை. அரசாங்க அதிகாரிங்களும் வரலை தம்பி. குடிக்க  தண்ணீ இல்லாம. குழந்தைகளுக்கு பாலில்லாம  கஷ்டப்படுறோம். நாங்க என்ன தீண்டத்தகாதவங்களா? "  என கேட்டு கதறியுள்ளனர் மூதாட்டிகள். அவர்களை ஆறுதல் படுத்திய வேல்முருகன், " அரசாங்கம் வரலைன்னு கவலைப்படாதீங்கம்மா. உங்களுக்கு தேவையானதை அனைத்தும் நாங்க செய்றோம் " என சொல்லி, நிவாரன உதவிகள் அனைத்தையும் செய்துள்ளார்.
 

velmurugan tvk


 

அதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோவில் பத்து கிராமத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை செய்து வந்தனர் வேல்முருகனும் வாழ்வுரிமைக் கட்சியினரும். அப்போது, அப்பகுதி  மக்கள்  , " இன்று காலைதான் ஆளுநர் வந்து பார்த்து விட்டு போனார்.  ஆனால் நிவாரண உதவிகள் எதுவும்  எங்களுக்கு  இதுவரையில் கிடைக்கவில்லை. எங்கள் கிராமத்துக்கு வந்து முதன்முதலில் பார்வையிட்டு நிவாரண  உதவிகளை அளித்தது நீங்கள்தான்" என்று நெகிழ்ச்சியோடு கூறினார்கள். 

 

velmurugan tvk



 

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வேல்முருகன் வழங்கிய போது, அங்குள்ள பள்ளிவாசலில் ஒன்றாக தங்கியுள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள், நிவாரண பொருட்களை தங்களிடம் மொத்தமாக கொடுத்து விடுமாறும் அதை தங்களுக்குள் ஒற்றுமையாக பங்கிட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர். அவர்களின் ஒற்றுமையக் கண்டு மெய்சிலிர்த்த வேல்முருகன், நிவாரணப் பொருட்களை மொத்தமாக அவர்களிடம் வழங்கினார். 

 

நிவாரண உதவிகள் குறித்து வேல்முருகனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, "புயலால் கடும் சேதத்தையும் பாதிப்புகளையும் சந்தித்துள்ள டெல்டா மாவட்டங்களில் பல கிராமங்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்கவில்லை. பல இடங்களை அதிகாரிகள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. இதனை மக்கள் வேதனையுடன் சொல்லி கதறும் போது நெஞ்சே வெடித்துவிடுவது போலிருக்கிறது.
 

velmurugan tvk


புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லையில் அமைந்துள்ள ஈழத்தமிழர் குடியிருப்புகள் பக்கமும் அரசு ஊழியர்களின் பார்வை படவே இல்லை. இதனையறிந்து ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதிகளைப் பார்வையிட்டு அங்கிருந்த மக்களிடம் புயலால் அவர்கள் சந்தித்த இழப்புகளை  கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடி  வழங்கினேன்.

 

அத்துடன் எமது வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகளை எந்த நேரத்திலும் தொடர்புகொண்டு எந்த உதவிகள் வேண்டுமானாலும் உரிமையுடன் கேளுங்கள் என அவர்களிடம் தெரிவித்தேன். இப்படி நிவாரண உதவிகள் எட்டிப்பார்க்காத கிராமங்களை கண்டறிந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள்" என்கிறார் .

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நானே போராடுவேன்” - வேல்முருகன் எம்.எல்.ஏ

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

velmurugan struggle on behalf of against sipcot factories in Cuddalore

 

கடலூரில்  சிப்காட் தொழிற்சாலைகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.

 

கடலூர் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளை கண்டித்து நேற்று(10.10.2023) தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் போராட்டத்தை கைவிடுமாறு கூறப்பட்டது. ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு வந்தனர். 

 

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அதற்கு பதில் கடலூர் உழவர் சந்தை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினர். இந்த நிலையில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர், காலை கடலூர் உழவர் சந்தை பகுதியில் திரண்டனர். அங்கு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ  தலைமை தாங்கி சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக பேசினார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், மாநகராட்சி கவுன்சிலருமான கண்ணன் வரவேற்று பேசினார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால் வளவன், மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ஆனந்த்,  மாநகர மாவட்டச் செயலாளர் லெனின், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

 

பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூர் தொழிற்பேட்டையில், தொழிற்சாலை வளாகத்தில் இயங்கக்கூடிய பல்வேறு நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ரசாயன உற்பத்திகளை செய்து வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு மர்மமான நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரியை திறந்த வெளியில் கையாள்வதால் அதன் துகள்கள் படர்ந்து 250 மடங்கு மாசு ஏற்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. கடலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்குவதாகக் கூறி பொதுமக்களின் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி 10 ஆண்டுகள் தொழில் நடத்திவிட்டு, பின்னர் அந்த இடத்தை மனை வணிகமாக மாற்று தொழில் செய்து வருகின்றனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது. அந்த இடத்தில் வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகள் அல்லது கால்நடை பண்ணையுடன் கூடிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக அந்த இடங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் விரட்டியடிக்கப்பட்ட சாயப்பட்டறை ஆலைகள் சைமா என்ற பெயரில் பெரியப்பட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுத்து தொடங்கும் வேலை நடைபெற்று வருவதாக செய்திகள் வருகிறது. அந்த நிறுவனம் இங்கு தொடங்கப்படக்கூடாது. பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை சுடு நீராக்கி கடலில் விடுவதால் கடல் நீர் மாசு படுவதோடு, கடல்வாழ் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுள்ளது.

 

மாசு ஏற்படுத்தும் ஆலைகளை பூட்டி சீல் வைக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியமாற்று விகிதம் ஏற்படுத்தாமல் அடிமையாக வேலை வாங்கி வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பிவிட்டு, தகுதி உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தொழிற்பேட்டை அருகே முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தேன். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஆலைகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தனியார் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக பேரணிக்கு அனுமதி மறுத்து ஆர்ப்பாட்டத்துடன் கலைந்து செல்ல கூறிவிட்டனர். இதற்கான பலனை எதிர்காலத்தில் அரசுகள் அனுபவிக்கும். சட்டமன்ற உறுதிமொழி குழு மூலம் ஆய்வு செய்து பல குற்றச்சாட்டுகள் வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த வேல்முருகன், அதில் ஒன்றை கூட மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் ஆணையம், மாவட்ட நிர்வாகம் சரி செய்யவில்லை. அதற்கான கால அவகாசம் அளித்து தான் இந்த போராட்டத்தை அறிவித்தேன்” என்றார்.

 

மேலும், கூட்டணி கட்சியில் இருந்தாலும் எங்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கு வேல்முருகன் களத்தில் நிற்பான் என்பதற்காக தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முன்னறிவிப்பின்றி நானே பூட்டுப் போடும் போராட்டத்தை முன்னெடுப்பேன். சாதி வாரி கணக்கெடுப்புக் கோரி ஜனவரி மாதம் கோட்டையை நோக்கி பேரணியை அறிவித்துள்ளேன். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கான சமூக நீதி வழங்க வேண்டும். அதுவரை 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என்றார்.