Skip to main content

அ.தி.மு.க.வில் இருந்து வந்த ஐந்துமுனை அழுத்தங்கள்..! டெல்லி போட்ட அதிரடி உத்தரவு!!!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

eps

 

அ.தி.மு.க சண்டை உச்சத்தை அடைந்தபோது சசிகலா, ஓ.பி.எஸ், எடப்பாடி என மூன்று தரப்பினரும் பா.ஜ.க.வின் கதவைத் தட்டினார்கள். அதனுடன் ஆன்மீக குருவான ஜக்கிவாசுதேவும் தொழிலதிபருமான அதானியும் அ.தி.மு.க. சண்டையில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். சசிகலா, ராஜ்நாத் சிங்கை வைத்துக்கொண்டு காய் நகர்த்தினார். எடப்பாடி பியூஷ் கோயல் மூலமாக காய் நகர்த்தினார். நரேந்திர மோடியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், மோடியை இருமுறை சந்தித்துப் பேசினார். அமித்ஷாவுடன் நெருக்கமாக இருக்கும் ஜக்கிவாசுதேவ், அவர் மூலமாக காய் நகர்த்தினார்.

 

இதற்கிடையே அ.தி.மு.க. சண்டையில் தொழிலதிபர் அதானியும் தலையிட்டார். சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் தங்களை பா.ஜ.க. ஆதரிக்க வேண்டும் எனக் கூற ஜக்கிவாசுதேவ், அமித்ஷா மூலமாக, தமிழக உள்ளாட்சித்துறை வேலுமணியை முதல்வராக்கினால் பிரச்சனை தீரும் என்று புது வியூகம் வகுத்து காய் நகர்த்தினார். அதானி தங்கமணியை முதல்வராக்கினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார். இப்படி ஐந்து முனைகளில் ஐந்து விதமான கோரிக்கைகள் வந்தன.

 

ops

 

சசிகலாவை ஆதரிக்கக்கூடாது என எடப்பாடியும், எடப்பாடியை ஆதரிக்கக் கூடாது என ஓ.பி.எஸ்.சும் அழுத்தம் கொடுத்தனர். எடப்பாடியை நீக்கிவிட்டு எஸ்.பி. வேலுமணியை முதல்வராக்க வேண்டுமென ஜக்கிவாசுதேவ் அழுத்தம் கொடுத்தார். எடப்பாடியை நீக்கினால், வேலுமணியைவிட, தங்கமணி பெட்டர் சாய்ஸ். அவரை முதல்வராக்க வேண்டும் என்று அதானி அழுத்தம் கொடுத்தார். எடப்பாடி, வேலுமணி, தங்கமணி மூவருமே கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமுதாய பேலன்ஸ் என்பது சரியாக இருக்கும் என்றும், பா.ஜ.க. மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. விவகாரத்தைக் கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமித்ஷா, ராஜ்நாத்சிங், பியூஷ்கோயல் ஆகிய பா.ஜ.க. பிரமுகர்களுடன் தொழிலதிபர் அதானி, சாமியார் ஜக்கிவாசுதேவ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவுத் தரப்பிலிருந்தும் ஒவ்வொரு விதமான அழுத்தம் பா.ஜ.க.வுக்கு வந்ததால் கடைசியில் முடிவு எடுக்கும் அதிகாரம் நரேந்திரமோடியின் கைக்குப் போய்விட்டது.

 

ஐந்து முனைகளில் இருந்து வந்த அழுத்தங்களை பரிசீலித்த நரேந்திர மோடி, சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் அவர் நம் நம்பிக்கைக்கு உரியவராக தொடர்வாரா என்பதில் சந்தேகம் அடைந்தார். அதே நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் தனித்தனியாக பிரிந்து நிற்பது சரியல்ல என அவர் நினைத்தார். இதைப்பற்றிய விவாதங்களில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான புபேந்திரயாதவ் ஒரு நிலையை எடுத்து மோடியிடம் தெரிவித்தார்.

 

sasikala

 

"தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நீடிக்கும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி நிறைய ஊழல்கள் செய்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பா.ஜ.க.வின் ஆதரவுதான் என்கிற கெட்டப்பெயர் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது. அதை தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பேசுகின்றன. ஊழல் அமைச்சர்கள்- அதிகாரிகள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்கள் மீது என்ன நடவடிக்கை என்ற கேள்வி சாதாரண மக்களிடமும் இருக்கிறது. அதனால், இந்த ஐந்து பேரில் யாரை நாம் ஆதரித்தாலும் அது அ.தி.மு.க.வை மட்டுமல்ல, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் இலக்கையும் பலவீனப்படுத்திவிடும். எனவே நாம் இந்த மோதலில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளட்டும். அடிச்சி... முடிச்சி... வரட்டும். அதில் யார் பலம்பெற்று வருகிறார்களோ அவர்கள் அ.தி.மு.க.வைக் கைப்பற்றட்டும். இனி பா.ஜ.க.வுடன் பேசும் அ.தி.மு.க.வினரிடம், முதலில் உங்கள் வீட்டை ஒழுங்காக வையுங்கள் எனச் சொல்லுவோம். அதுதான் இப்பொழுது பா.ஜ.க.வுக்கு நல்லது'' என்றார்.

 

spv

 

அவரது நிலையைச் சரியென ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி அ.தி.மு.க.வில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ஐந்து பேரிடமும் முதலில் உங்கள் வீட்டை ஒழுங்காக வையுங்கள் என பொத்தம் பொதுவான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இப்படி, பா.ஜ.க.வின் ஆதரவு இப்போதைக்கு யாருக்கும் இல்லை எனத் தெளிவான உத்தரவு மோடியிடமிருந்து வந்ததும் அ.தி.மு.க.வில் யார் பெரியவர் என்கிற சண்டை பலம்பெற ஆரம்பித்தது.

 

சசிகலா நம்பத்தகுந்தவர் அல்ல என டெல்லியிடம் பேசிய எடப்பாடி மேல் அவர் கடும் கோபம் கொண்டார். கூவத்தூர் முகாம் நடந்தபோது, எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுத்த சசிகலா, ஓ.பி.எஸ். பக்கம் யாரும் போய்விடாமல் எடப்பாடியை ஆதரிப்பதற்காக அ.தி.மு.க.வின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 4 கோடி ரூபாய் கொடுத்தார். அதை இப்போது சுட்டிக்காட்டி, ""எடப்பாடியை முதலமைச்சராக்க நான் செலவு செய்தேன். அனைத்து முக்கியத்துறைகளையும் கைப்பற்றி ஏகப்பட்ட பணம் சேர்த்தார். இப்போது அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்னை எதிர்க்க துணிந்துவிட்டார்'' என தன்னிடம் பேசவந்த ஓ.பி.எஸ். ஆட்களிடம், "எடப்பாடியை எதிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். நமது வலு என்னவென்று எடப்பாடிக்கு காட்டுவோம்'' என உத்தரவிட்டார்.

 

THANGAMANI

 

இதனால் சசிகலாவும் ஓ.பி.எஸ்.சும் அரசியல் களத்தில் இணைந்துள்ளனர். இந்த முடிவு ஓ.பி.எஸ். வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவாக மாறியது. சென்னையில் இருந்து கிளம்பி தனது பூர்வீகமான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில், திண்டுக்கல் பகுதியில் உள்ள பெருமாள் கோவில், கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவில் என மூன்று கோவில்களுக்கு ஓ.பி.எஸ். விஜயம் செய்தார்.

 

ஓ.பி.எஸ். தனது அரசியல் வாழ்வில் எந்த முடிவு எடுத்தாலும் இந்த மூன்று கோவில்களுக்கு விஜயம் செய்துவிட்டுத்தான் எடுப்பார். சசிகலாவுடன் இணைந்து செயல்படுவது என்கிற முடிவை ஓ.பி.எஸ். எடுத்ததன் பின்னணியில்தான் இந்த கோவில் விசிட்டுக்கள் நடந்தது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.


கலந்தம் என்கிற ஊரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது ஓ.பி.எஸ்.ஸை. ஆர்.பி.உதயக்குமார் 3 எம்எல்ஏக்களுடன் சந்தித்தார். இதுதவிர நத்தம் விஸ்வநாதன் ஓ.பி.எஸ்.சுடன் ஒருநாள் முழுவதும் இருந்து அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்திருக்கிறார். தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸின் சொந்த சமூகமான மறவர் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஓ.பி.எஸ்.க்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர்களும் ஓ.பி.எஸ்.க்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

 

Ad

 

சசிகலா, முக்குலத்தோர் சமுதாயத்தில் மற்ற பிரிவுகளான கள்ளர், அகமுடையார் ஆகிய சமூகத்தினரின் ஆதரவை ஒன்றாக திரட்டி வைத்துள்ளார். நாடார் இனமக்களின் ஆதரவை மனோஜ்பாண்டியன் மூலம் ஓ.பி.எஸ். திரட்ட ஆரம்பித்துள்ளார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்திலிங்கத்தை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். வன்னியர்களின் ஆதரவை திரட்ட எடப்பாடி சி.வி.சண்முகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

அ.தி.மு.க. எல்ஏக்களுடன் சசிகலா பேசத் தொடங்கியதை அறிந்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 50 லட்ச ரூபாய் தர எடப்பாடி முடிவு எடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ளார். இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அ.தி.மு.க.வில் நடைபெறும் மோதல் நீயா? நானா? என உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைவிட விறுவிறுப்பான இந்த ஆளுந்தரப்பு அரசியல் கிரிக்கெட் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என ஒவ்வொரு பந்தையும் உற்றுக்கவனிக்கும் அம்பயர் வேலையை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது.