Skip to main content

பூவிலே முதல் பூ எந்தப் பூ?

Published on 04/08/2017 | Edited on 04/08/2017
பூவிலே முதல் பூ எந்தப் பூ?



14 கோடி ஆண்டுகளுக்கு முன் பூத்த முதல் பூ எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

"குறைந்தபட்சம் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய முதல் பூவைப் போல இப்போதுள்ள எந்தப் பூவும் இல்லை. இப்போதுள்ள பல்வேறு வகையான பூக்கள் உருவாக கணிசமான காலம் பிடித்திருக்கும்."

என்கிறார் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் ஹெர்வ் சவ்கொயட். இவர் பாரீஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்வு வார இதழில் இந்தக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.

பூக்களை ரசிக்காதவர்கள் பூமியில் இருக்க முடியாது. பூமியில் உள்ள தாவரங்களில் 90 சதவீதம், பூத்துக் காய்த்து விதையாகி பெருகும் தன்மை கொண்டவை.

ஆனால், பூக்களின் பூர்வீக வம்சம், பூவின் முதல் வடிவமைப்பு மர்மமாகவே இருந்தது. 

இப்போதுள்ள பூக்களில் ஆண் மற்றும் பெண் பாலினம் இருக்கிறது. இதழ்களின் அடுக்குகள் வித்தியாசமாக இருக்கின்றன.

“முதல் பூவின் இதழ்கள் எப்படி இருந்திருக்கும், ஒரு பாலினப் பூவாக இருந்திருக்குமா? இருபாலினப் பூக்களாக இருந்திருக்குமா? காற்றின்மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் வகையில் இருந்திருக்குமா? பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றிருக்குமா? இதெல்லாம் புதிராக இருக்கின்றன."

என்கிறார், பர்மிங்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேஸன் ஹில்டன்.

முதல் பூவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் 792 வகையான பூக்களை மாதிரியாக எடுத்துக் கொண்டனர்.

அவற்றின் இதழ்களையும் புற இதழ்களையும் ஆய்வு செய்தனர்.

பூவின் இதழ்கள் சுழலாக இல்லாமல், சுருளாக அமைந்திருக்கும் வகையில் கட்டமைத்தனர். இன்றைய லில்லி, அல்லது தாமரை பூக்களைப் போல அது இருந்தது.

முதல் பூவின் பாலினம் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. கடைசியில் முதல் பூ ஆண் பெண் உறுப்புகளைக் கொண்டதாக இருந்திருக்கும் என்று முடிவு செய்தனர்.

இந்த ஆய்வு மிக முக்கியமானது. சிக்கல் நிறைந்தது. ஆனால், இந்த மாதிரிப் பூ எந்த அளவுக்கு பொருத்தமானது என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்