வேலூரில் சிமெண்ட் சாலை போடும்பொழுது ஓரத்தில் நின்று கொண்டிருந்த பைக்கை பொருட்படுத்தாமல் அலட்சியமாக பைக்கின் டயர் புதையும்படி சாலை போடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வேலூர் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் நான்காம் மண்டலத்திற்கு உட்பட்ட காளிகாம்பாள் தெருவில் நேற்று இரவு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் நேற்று இரவு 11 மணிவரை அங்கு சாலை அமைப்பதற்கான எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபொழுது அந்தப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டிருந்தது. அதில் நின்றுகொண்டிருந்த பைக்கை பொருட்படுத்தாமல் அப்படியே சாலை போட்டதில் பைக் டயர் சாலைக்குள் புதைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் சாலை போடப்பட்டுள்ளது. ஒருவேளை அறிவிப்பு கொடுத்திருந்தால் பைக்கை இப்படி நிறுத்தி இருக்க மாட்டோம். அதேபோல் தெருவில் கிடந்த குப்பைகள், கழிவுகளை நீக்காமல் அப்படியே சாலை போட்டுள்ளார்கள் எனக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.