தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை மற்ற மாவட்டத்திற்கும் அல்லது மாவட்டத்திற்குள் பணியிடமாற்றம் செய்வது வழக்கம். அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக தேனி மாவட்டத்தில் பணியாற்றிய சப் - இன்ஸ்பெக்டர்களைப் பணியிடமாற்றம் செய்தனர். சப் - இன்ஸ்பெக்டர்களை மாவட்டத்திற்குள் பல்வேறு பகுதிகளிலும் பணியிடமாற்றம் செய்தனர்.
இதில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தலைமை தேர்தல் அதிகாரி வாபஸ் வாங்கிய பிறகு தேர்தல் பணிக்காக இடமாற்றம் செய்தவர்களை மீண்டும் அவர்கள் பணிபுரிந்த பழைய இடத்திற்கோ அல்லது மாவட்டத்திற்குள் வேறு இடத்திற்கோ மாற்றம் செய்வார்கள். ஆனால் தேர்தல் முடிந்து 1 மாதத்திற்கு மேலாகியும் தேர்தல் பணிக்காக சென்ற போலீசாரை இன்னும் மாற்றம் செய்யவில்லை. கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவிவந்த காரணத்தால் தேர்தல் பணிக்காக மாற்று இடத்திற்குச் சென்றவர்கள் தற்போதுவரை அதே இடத்தில் பணிபுரிந்துவருகின்றனர். இதனால் சப் - இன்ஸ்பெக்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களின் குடும்பங்கள் ஒரு இடத்திலும், பணி வேறு இடத்திலும் இருப்பதால் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனர். மேலும், 50 வயதிற்கு மேல் உள்ள சப் - இன்ஸ்பெக்டர்கள் கரோனா காலத்தில் வீட்டிற்கும் பணிபுரியும் இடத்திற்கும் சென்று வர சிரமப்படுகின்றனர். மேலும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிப்படைந்திருக்கும் நிலையில் அவர்களை சரிவர கவனிக்க முடியாமல் இருப்பதாகவும் போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தேர்தல் பணிக்காக மாற்றிய போலீசாரை ஏற்கனவே பணியாற்றிய இடத்திற்கோ அல்லது புதிய இடத்திற்கோ இடமாற்றம் செய்ய வேண்டும் என்று போலீசார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.