நீதிபதி பதவி ஆண்களுக்கு மட்டுமானது என்ற மனநிலையில் இருந்து எப்போது வெளியே வருவீர்கள் என்று டெல்லி பெண் நீதிபதி இளம் வழக்கறிஞரிடம் கோபப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரேகா அமர்வு முக்கிய வழக்கு ஒன்றை விசாரித்து வந்தது. அப்போது ஒருதரப்பு வழக்கறிஞர் ஒருவர் வாதத்தின் போது பெண் நீதிபதியை பார்த்து, கனம் நீதிபதி சார் என்று அழைத்துள்ளார். வாய் தவறி வந்துவிட்டது போல என பெண் நீதிபதியும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த வழக்கறிஞர் வார்த்தைக்கு வார்த்தை சார் என்று தொடர்ந்து அழைக்கவே பெண் நீதிபதி கடும் கோபமடைந்தார். வழக்கறிஞரை இடைமறித்த அவர் அடுத்து பேசிய வார்த்தைகள் நீதிமன்றத்தை அதிரச்செய்தது. அப்போது பேசிய அவர், " இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நீதிபதி "சார்"களுக்கானது என்ற எண்ணம் வேதனை அளிக்கிறது. இளம் தலைமுறையினரே இப்படி பாலின பாகுபாடு காட்டினால் வரும் தலைமுறையினர் எப்படி இருப்பார்கள். உங்கள் மனதில் பதிந்திருக்கின்ற வார்தைகளின் வெளிப்பாடே இந்த வார்த்தை" என்றார்.