1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது. 1990 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் பரிந்துரைகளை வி.பி.சிங் அரசு அமல்படுத்தியது. அதேசமயம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவை யாத்திரையை தேசியமுன்னணியில் இடம்பெற்றிருந்த பாஜக தலைவர் அத்வானியும் தொடங்கினார்.
அந்த யாத்திரை பிகாரில் நுழைந்தபோது, பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்தார்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கத்தை எதிர்த்து பாஜகவின் துணை அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், அத்வானியும் கைதுசெய்யப்பட்டதால் தேசியமுன்னணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.
இதையடுத்து வி.பி.சிங் 1990 நவம்பர் 10 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். உடனே, தேசியமுன்னணியில் இருந்த ஜனதாதள தலைவரான சந்திரசேகரின் பிரதமர் ஆசையை பயன்படுத்தி, அவர் ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு தரும் என்று ராஜிவ் அறிவித்தார். சந்திரசேகர் பிரதமர் பதவியை ஏற்றார். உடனே, தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான அரசை கலைக்க சந்திரசேகருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டது. அப்போது, ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பார்ப்பனரான ஆர்.வெங்கட்ராமன் பொறுப்பு வகித்தார்.
காங்கிரஸ்காரரான அவர், தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் மாநில அரசுக்கு எதிராக அறிக்கை தரும்படி கேட்டார். ஆனால், திமுக அரசுக்கு எதிராக பர்னாலா அறிக்கை தர மறுத்தார். இதையடுத்து, அரசியல் சட்டத்தில் ஆளுநர் அறிக்கையைப் பெற்றோ, அவர் தரமறுத்தால், அதர்வைஸ் என்று இருந்த ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி திமுக அரசாங்கத்தை கலைத்தார் ஆர்.வெங்கட்ராமன்.
ஆக, 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான ஆட்சி நல்ல திட்டங்களை அமல்படுத்திய நிலையிலும் கலைக்கப்பட்டது.
கலைஞர் தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகமாக இருந்தது.
இலவச மின்சாரம் வழங்கியதால் கலைஞருக்கு விவசாயிகளும், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதால் பெண்களும், சத்துணவில் முட்டை சேர்த்ததால் பெற்றோரம், கல்லூரி வரை இலவச பஸ்பாஸ் வழங்கியதால் மாணவர்களும் திமுகவை ஆதரித்தனர்.
ஆளுநரின் அறிக்கை இல்லாமல், திமுக அரசை கலைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு நிறைவேற்றிய நாடகம் என்பது வாக்காளர்களுக்கு புரிந்திருந்தது.
திமுகவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்குச் சாதகமாகவே இருந்தன. இந்நிலையில்தான் அந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.
1991 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் காங்கிரஸும் அதிமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
திமுக, ஜனதாதளம், சிபிஐ, சிபிஎம், டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி பொறுப்பு வகித்தார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி சென்னை வந்தார். இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்னை வந்த ராஜிவ், ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவருடைய காரில் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவரும் பயணித்தார்.
பின்னர் இரவு 10 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரின் வெளிப்புறத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு ராஜிவ் வந்தார். அங்கு அவரை வரவேற்க வந்திருக்க வேண்டிய தொகுதி வேட்பாளர் மரகதம் சந்திரசேகரோ, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியோ வரவில்லை.
மேடைக்கு செல்லும்போது ராஜிவை இடைமறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களும் பள்ளிக் குழந்தைகளும் ராஜிவுக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடன் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைப்பிரிவைச் சேர்ந்த தணு என்கிற தேன்மொழி ராஜரத்தினம் என்கிற காயத்ரி என்ற மனிதவெடிகுண்டும் கலந்திருந்தார்.
ராஜிவை நெருங்கிய அவர், அவருடைய காலைத் தொட்டு வணங்குவதற்காக குனிபவர்போல தனது இடுப்பில் கட்டியிருந்த ஆர்டிஎக்ஸ் என்ற சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
நொடிகளில் அந்த இடம் ரத்தக் களறியானது. ராஜிவ் உடல் சிதறி உயிரிழந்தார். அவருடன் மேலும் 14 பேரும் உயிரிழந்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கிடந்த கேமரா ஒன்றில் இந்தக் காட்சிகள் அனைத்தும் பதிவாகி இருந்தன. சம்பவத்தை கேள்விப் பட்டதும் மூப்பனார்தான் முதலில் அந்த இடத்துக்கு சென்றார். ராஜிவின் சிதறிய உடலை அவர்தான் அடையாளம் கண்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிவிட்டது.
நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை, அதிமுகவினரும், காங்கிரஸாரும் திமுகவினருக்கு எதிராக திருப்பி விட்டனர். திமுக பிரமுகர்களின் வீடுகள், சொத்துக்களை அடித்து நொறுக்கினர். பலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
முரசொலி அலுவலகம், தீக்கதிர் அலுவலகம் ஆகியவை தீவைத்து கொளுத்தப்பட்டன. ராஜிவ் கொலைக்கு திமுகவே காரணம் என்று அபாண்டமாக பிரச்சாரம் செய்தனர்.
விடுதலைப் புலிகள் நடத்திய இந்த கொடூரமான வெடிகுண்டு தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட சதி என்று கூறப்பட்டாலும், விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சுப்பிரமணியன் சாமி கூறிய பொய்யை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை பறிகொடுத்த திமுக மீதே, ராஜிவ் கொலைக்கான பழியையும் சுமத்தினார்கள்.
ஆயிரக்கணக்கான திமுகவினர் அதிமுக மற்றும் காங்கிரஸாரால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தினர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திமுகவினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
ஊர்முழுக்க ராஜிவ் மரணத்தையொட்டி ஒப்பாரி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் வட மாநிலங்கள் பலவற்றில் நடந்து முடிந்திருந்தன. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில்தான் ராஜிவ் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில்தான் காங்கிரஸுக்கு கணிசமான இடங்கள் கூடுதலாக கிடைத்தன. அப்படி இருந்தும் ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
அதேசமயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பொய் பிரச்சாரத்தால், விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி ராஜிவை திமுகவினர்தான் கொன்றார்கள் என்ற பிரச்சாரத்தை நம்பிய வாக்காளர்கள் திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடித்தார்கள்.
மக்களவைத் தொகுதிகள் அனைத்தையும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக 164 காங்கிரஸ் 60 என்று பெரும்பகுதி தொகுதிகளை கைப்பற்றி ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.
சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா மிக அதீதமாக நடந்துகொண்டார். தனது தோழியா சசிகலாவை சபாநாயகர் ஆசனத்தில் அமரச் செய்து தனது முதல் அட்டூழியத்தை நடத்திக் காட்டினார். இதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கக்கூட இல்லை.
அடுத்துப் பேசிய ஜெயலலிதா "நான் ஒரு பாப்பாத்திதான்" என்று தனது அகங்காரத்தை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகளை உதிர்த்தார். விடுதலைப் புலிகள் பற்றி பேசியபோது, "பிரபாகரனை கைதுசெய்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். ஈவிரக்கமில்லாமல் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும்" என்றெல்லாம் பேசினார்.
தமிழ்நாட்டில் ராஜிவ் காந்தியின் ரத்தத்தால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியபோது, அதை உடனே எழுந்து மறுத்த ஜெயலலிதா, தனது செல்வாக்கால் மட்டுமே கூட்டணி வெற்றி பெற்றது என்று தனது அகம்பாவத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து காங்கிரஸை தனது ஆட்சி செயல்பாடுகளில் தலையிடாமல் செய்து தனது விருப்பப்படியான ஆடம்பர, ஆணவ தர்பாரை தொடங்கினார். அப்போதிருந்து தமிழகம், ஜெயலலிதா மற்றும் சசிகலா கூட்டத்தின் வேட்டைக்காடாக மாறியது.
ஜெயலலிதா சொன்னதில் ஒரு உண்மை இருக்கிறது. ராஜிவ் கொலைக்கு திமுகதான் காரணம் என்று பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்ட அதிமுகவின் சாதுர்யமும், வீண்பழியைச் சுமந்த திமுகவினர் சிந்திய ரத்தமும்தான் அதிமுக ஆட்சிக்கு வர உதவியது என்பதை அவர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் என்பது காலப்போக்கில் வெளிப்பட்டது.
சமீபத்தில் இறந்த ம.நடராசன், சுப்பிரமணியன் சாமி, சந்திராசாமி ஆகியோர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ராஜிவ் கொலைச் சதியை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. மத்தியில் இந்திரா குடும்பத்தினர் இல்லாத அரசு அமையவும், அதன்மூலம் இந்தியாவில் நிலையற்ற தன்மை உருவாகவும், தமிழகத்தில் ஜெயலலிதா அரசு அமைவதன் மூலம் திமுகவை தொடர்ந்து மாநில அரசியலில் பின்னுக்குத் தள்ளவும் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்பட்டது.