இப்படி, சைவம் வைணவம் ஒரு பக்கமும் புத்தம், சமணம் இன்னொரு பக்கமும் வளர்ந்த நிலையில் சைவத்திலும், வைணவத்திலும் உட்பிரிவுகள் உருவாகத் துவங்கின. எல்லா மதத்துக்குள்ளும் தீவிர மத பற்றாளர்கள், மிதமான மத பற்றார்கள் என்கிற இரண்டு வகை உண்டு. சைவ சமயத்திலும் இந்த இரண்டு வகை இருந்தனர். ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்ததும் சைவத்துக்குள் தீவிர மத பற்றாளர்கள் போக்கு அதிகரித்தது. அவர்கள் அதிகமான சடங்குகளை செய்தார்கள், சாமியை வணங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தார்கள், பலி கொடுப்பது, யாகம் நடத்துவது என்று தீவிரம் அதிகரித்தது. இவர்கள் மதத்துக்குள் தீவிரமானவர்கள். 'இதற்கு முன்பு இப்படியெல்லாம் இல்லையே?' என கேள்வி கேட்பவர்களும் இருந்தனர். அவர்கள் மதத்தில் மிதமானவர்கள். பிற்காலத்தில் அது காஷ்மீர் சைவம், கர்நாடகா சைவம் என உருவானது. ஆரியர்கள் காஷ்மீர் சைவமாகினர். தென்னிந்தியர்கள் கர்நாடகா சைவ சமயத்தினரானர்கள். அவர்களே வீரசைவ சமயத்தினர் எனவும் அழைக்கப்பட்டனர்.
பசவண்ணா...
இதில் கர்நாடகா சைவத்தில் உருவானவர்தான் பசவண்ணா. பசவர் என்கிற பெயருடைய இவர் பிரமாண சமுதாயத்தை சேர்ந்தவர். சாளுக்கிய மன்னரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். சாளுக்கியர்கள், இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பகுதியை ஆண்டவர்கள். இவர்களது காலம் கிபி 6ஆம் நூற்றாண்டில் தொடங்கி 12ஆம் நூற்றாண்டில் முடிகிறது.
இந்த பசவண்ணாதான் சைவ சமயத்தில் இருந்த சாதிவெறி, உருவவழிபாடு, உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கத்தை எதிர்த்து போராடினார். அக்கால புரட்சியாளராய் விளங்கினார். பசவண்ணரின் கருத்துக்கள் புரட்சிகரமானதாகவும், பகுத்தறிவு மிக்கதாகவும் இருந்துள்ளது. அவர் சமூக அரசியல் சீர்திருத்தங்களை 12ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் நிகழ்த்தியுள்ளார். அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்வேறு சாதி மக்கள் அவருடைய 'சரணா' இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அந்த இயக்கம் பசவா இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.
இவர்கள் தங்களோடு எப்போதும் லிங்கத்தை உடன் வைத்திருக்க வேண்டும், லிங்கத்தை கைகளில் வைத்து பூஜிக்க வேண்டும், குழந்தை பிறந்ததும் லிங்கத்தை கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பது பசவண்ணா உருவாக்கிய கோட்பாடுகள். அதோடு அசைவம் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது போன்றவை பசவண்ணா உருவாக்கிய கொள்கைகள். சாதிகளை வைத்து மக்கள் பிரியக்கூடாது என்றார். விதவை திருமணத்தை ஆதாரித்தார், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்றார். இந்த முற்போக்கு கருத்துக்களால் பசவண்ணா பின்னால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இவர்களே லிங்காயத்தார் என அழைக்கப்படுகின்றனர். தீவிர சைவ பிராமணர்களும் பசவா இயக்கத்தில் இணைந்தனர். அவ்வாறு இணைந்த அனைவரும் லிங்காயத்துகளாக மதமாற்றமடைந்தனர். லிங்காயத்து மக்கள், இருமுக லிங்கத்தையே வணங்குவார்கள். அதில் ஒரு முகம் கிழக்கு பார்த்தும், மற்றொரு முகம் மேற்கு நோக்கியும் காணப்படும். விருட்சி என்கிற பூவை கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தங்களுடன் இருமுகம் கொண்ட ருத்திராட்சமாலையை அணிந்துகொண்டு இருப்பார்கள்.
16ஆம் நூற்றாண்டுகளில் பசவா இயக்கத்தில் சிலர் தங்களது வழிபாட்டு சடங்குகளை லிங்காயத்து சமூகமாக மாறியப்பின்பும் செய்ய துவங்கினார்கள். இதனை வீரசைவத்தை பின்பற்றியவர்கள், லிங்காயத்துக்களும், சடங்குகளை செய்கிறார்கள், அவர்களும், நாங்களும் ஒன்றே எனச்சொல்லி லிங்காயத்துக்களை தங்களுக்குள் ஐக்கியமாக்க நினைத்தார்கள், பேசினார்கள், எழுதினார்கள். அதாவது, வீரசைவர்களின் குருக்கள் மூலமே பசவண்ணர் லிங்காயத்து மதத்தைத் தோற்றுவித்தார் என்றும் வீரசைவர்கள் வாதிட்டு வந்தனர். வீரசைவர்களின் இக்கூற்றுகளை உண்மையென்று நிறுவ எந்தவொரு நிரூபணமும் வரலாற்றிலிருந்து லிங்காயத்துகளுக்கு கிடைக்கவில்லை. சாதியை விட்டொழிந்த லிங்காயத்து ஆதினங்கள் இதனை எதிர்க்க துவங்கின.
வீரசைவமும் லிங்காயத்தும் முற்றிலும் வேறு வேறானவை. வீரசைவர்கள் என்பவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டு, அதை பின்பற்றுபவர்களாவர். வீரசைவம் வேத சாஸ்திர, புராணங்கள், சாதி மற்றும் பாலின வித்தியாசங்களை ஏற்றுக் கொண்டு அவற்றைப் பின்பற்றுவதாகும். லிங்காயத்து மார்க்கத்தைத் தோற்றுவித்த பசவண்ணர், சாதி மற்றும் பாலின வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமின்றி, இந்து மதத்தின் உட்கருவான சனாதன தர்மத்திற்கு மாற்றான சித்தாந்தங்களை முன்மொழிந்தார். வர்ணாசிரம அடிப்படையிலான சாதிய சமூக அமைப்பினையும், சாதிய அடுக்குமுறை மற்றும் சொர்க்கம், நரகம், பாவம், புண்ணிம் போன்றவற்றையும் நிராகரித்தார். அதோடு, சாதிய அடுக்குமுறையை தகர்க்க ஒரேயிடத்தில் அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமபந்தி முறையை வளர்த்தார், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் பேசினார், எழுதினார். இவைகளை சமஸ்கிருத மொழியில் சொல்லாமல் கன்னட மொழியிலேயே இயற்றினார். இதனை சைவ மத தீவிர பற்றாளர்கள் தங்களுக்கு தோதான ஆட்சி வந்தபோது தேடித்தேடி அழித்தனர். அப்படியும் ஆயிரக்கணக்கில் அவர் எழுதிய இலக்கிய பாடல்கள் பதுக்கிவைக்கப்பட்டன. அவைகளை தற்போது ஆதாரங்களாகக் காட்டித்தான் நாங்கள் வேறு, அவர்கள் வேறு, அவர்களை எங்களுடன் இணைக்ககூடாது என்று லிங்காயத்துக்கு பிரிவின் மடாதிபதிகளின் கோரிக்கை. அந்த கோரிக்கைதான் சித்தராமையாவால் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அது முழுமையாக நிறைவடையவில்லை.
இன்று உலகத்தின் மூன்றாவது பெரிய மதமென்றால் அது இந்து மதம்தான். உலகின் பெரிய மதமான கிருஸ்த்தவம், இஸ்லாம், சிறுபான்மை மதமான பௌத்தம், சமணம் போன்ற மதங்களுக்கு என தனித்தனியாக மத தலைமையிருக்கும். ஆனால் இந்து மதத்துக்கு என்று தனியாக தலைமை கிடையாது. பணமும், செல்வாக்கும் இருந்தால் ஒரு மடத்தை தொடங்கி மடாதிபதியாகி, இந்து மதத்தின் பிரதிநிதி என்று சொல்லும் நிலையிருக்கிறது. அப்படித்தான் தமிழகத்தில் சில மடங்கள் உள்ளன.
இந்து மதம் என்கிற சொற்றொடர் ஆங்கிலேயர்கள் உருவாக்கி சட்டமாக்கியது. அதற்கு முன்பு வரை சைவம், வைணவம் என்றே இருந்தன. சிவன், விஷ்ணுவுக்கு முன்பு முனீஸ்வரன், மாரியாத்தா, எல்லைவீரன், மதுரைவீரன் என வணங்கிய மக்கள் அனைவரும் ஒரே மதம் என்று சொல்லி இந்துக்கள் என பெயர் சூட்டிவிட்டனர். அனைவரும் இந்துக்கள் என அறிவித்தாலும் பல வித்தியாசங்கள் பேதங்கள் இருக்கின்றன. இது வேறு எந்த மதத்திலும் இல்லாதது. ஒரே பட்டிக்குள் ஆடு, மாடு, கழுதை, குதிரை, யானை, சிங்கம், புலி, மான்களை அடைத்துவைப்பது போல இது இருக்கிறது. ஆடு, மாடு, குதிரை, யானை, சிங்கம், புலி, மான் எல்லாம் தனித்தனி குணங்கள் கொண்டது என்பது மறுக்க முடியாதது.
இதை எதிர்த்து தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லிங்காயத்துக்கள் என்கிற மதம் உருவானது. அந்த மதம் என்னை இந்து என சொல்லாதே லிங்காயத்து எனச்சொல் எனக்கேட்டு போராடி இன்று வெற்றிக்கோட்டின் அருகே நிற்கிறது. லிங்காயத்துக்கள் என்பவர்கள் கர்நாடகாவில் மட்டுமில்லை. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்டிரா, தமிழகத்திலும் உள்ளார்கள். லிங்காயத்துக்களை மத்திய அரசு தனி மதமாக அங்கீகரித்தால் மேற்கண்ட மாநிலத்தில் உள்ள லிங்காயத்துக்களும் சிறுபான்மை மதம் என்கிற வரையரைக்குள் வந்து அங்கீகாரம் பெறுவார்கள். இதுபோல ஒவ்வொரு சிறு குழுக்களும் கேட்டால் என்ன நடக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இப்பொழுது கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றியை நெருங்கிவிட்டது. இந்நிலையில், லிங்காயத்து மதம் கோரிக்கை என்னவாகும் என்பது இன்னும் பெரிய கேள்விக்குறி.
முந்தைய பகுதிகள்:
கர்நாடகாவில் எப்போதும் இது அல்லது அது... இந்த முறை எது? கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #1!
கடவுளுக்கு உருவம் தந்தார்கள், மனிதனுக்கு பிரிவைத் தந்தார்கள்...! கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #2