தமிழகத்தில் பதவிக்காக காலில் விழுந்தவர்களைப் பார்த்து மானமுள்ள தமிழர்கள் வெறுத்துப் போனார்கள். தமிழீழத்துக்காகப் போராடி உயிரையே விட்ட பிரபாகரனை வீரம் செறிந்த தலைவனாகப் பார்க்கிறார்கள். அதனால்தான், எந்த மேடையிலும், பிரபாகரன் பெயரை யார் உச்சரித்தாலும் ஆர்ப்பரிக்கின்றனர். கூட்டத்தை வசீகரிப்பதற்காக, பிரபாகரன் குறித்து ‘கப்சா’ விடும் தலைவர்களும் உண்டு. உண்மையை அறிந்த தலைவர்கள், ‘இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள்?’ என்று உள்ளுக்குள் புழுங்கினாலும், அமைதி காத்து வந்தார்கள். ஒரு கட்டத்தில், எரிமலையாய் வெடித்தார்கள். “இவர்கள் பேசுவதெல்லாம் அண்டப்புளுகு” என்று பகிரங்கமாக விமர்சித்தார்கள். ஆனாலும், பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லை விட்டுவிட போலிகளுக்கு மனமில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வவுனிக் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரண்டு தடவை நேரில் சந்தித்தவர். நீண்ட நேரம் பேசியவர். ஆளாளுக்கு பேசும் போது, நாமும் பிரபாகரனுடனான சந்திப்பின் போது உண்மையிலேயே நடந்ததையெல்லாம் சொல்வோமே என்று எண்ணியிருப்பார் போலும். சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில் நடந்த மே 17 – தமிழீழ முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் குறித்து நிறையவே பேசினார். திருமாவளவனின் உரை இதோ -
“நான் இட்டுக்கட்டிப் பேசுகிறவன் அல்ல. பிரபாகரன் இல்லையென்று ஏதேதோ பேசக்கூடியவன் அல்ல. ஒரு வார்த்தை கூட கூட்டிக் குறைத்துப் பேசவில்லை. குறைத்தாவது பேசுவேன், கூட்டிப் பேசுவதில்லை. இதையெல்லாம் பேசவே வேண்டாம் என்று பல காலம் மேடையில் பேசாமல் இருந்தேன். யாருடைய பேச்சையும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் இருந்தேன். இப்போது பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சிலருக்கு ‘பஞ்ச்’ விட்ட பிறகே, பேசத் தொடங்கினார்.
“இந்த இயக்கத்தை மிகவும் நேசித்தவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள். 2002-லும் 2004-லும் இரண்டு முறை நான் வன்னிக்குப் போயிருந்தபோது, இரண்டு முறையும் என்னை அழைத்து, அதிகாலை வேளையில், 5-30 மணியளவில், அந்தச் சீருடையோடு, அந்த கம்பீரமான ஆடையோடு, ஒரு இல்லத்தில் காத்திருந்த என்னை, வரவேற்றவர்; அரவணைத்தவர்; கட்டித் தழுவியவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள். அவரும் நானும் இரண்டு பேர் மட்டுமே, 2002-ஆம் ஆண்டு ஒரு மணி நேரம் பேசினோம். 2004-ஆம் ஆண்டு, நாங்கள் இருவர் மட்டும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினோம். தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், சாதிய முரண்பாடுகள், மதவெறி அரசியல் என்று தமிழ்நாட்டில் இருப்பவனைவிட, அதிகம் அறிந்தவராக அண்ணன் பிரபாகரன் இருந்தார்.
ஒரு முறை எல்லோருடனும் சேர்ந்து நான் சந்தித்தேன், 2002-ம் ஆண்டு. சர்வதேச தலைமைச் செயலகத்தின் வாசலிலே நின்று, எங்களை வரவேற்று, மார்போடு கட்டித் தழுவி, ஆலிங்கனம் செய்தார். உடனே, எங்களை அழைத்துக்கொண்டு போய், மதிய உணவில் அமரவைத்தார். அவருடைய வலது பக்கத்தில் எனக்கு இருக்கை போட்டு, உட்காருங்கள் என்று என்னை உட்கார வைத்தார். இலை போடப்பட்டது. எல்லோருக்கும் வறுத்த கோழி வைக்கப்பட்டது. கொஞ்ச நேரம் கழித்து கறியைச் சாப்பிடுகிறபோது என்னுடைய இலையைப் பார்த்தார். 'எங்கே தம்பிக்கு கறி வைக்கவில்லையா? கோழி வைக்கவில்லையா?' என்று கேட்டார். 'நான் சாப்பிடுவதில்லை அண்ணா' என்று சொன்னேன். அவர் அதிர்ச்சியடைந்து, 'இது என்ன சைவ சிறுத்தையாக இருக்கிறது. கோழிக்கறி சாப்பிடுவதில்லை என்றால் உடம்புக்கு எப்படி தெம்பு வரும்?' என்று அந்த இடத்தில் நகைச்சுவையாகப் பேசினார். அடுத்த 15 நிமிட நேரம் அவரிடம் பல்வேறு கதைகளைப் பேசிக்கொண்டு, அரசியல் பேசிக்கொண்டே உணவு எடுத்துக்கொண்டோம். பேசி முடித்து, மீண்டும் வீடியோ, படம் போன்றவற்றை எல்லாம் நிறைய எடுத்தபிறகு, என் காதோரம் வந்து சொன்னார், 'நாளை காலை 5-30 மணிக்கு உங்களுக்காக காத்திருப்பேன். நீங்கள் மட்டும் காலையில் வாருங்கள்' என்று சொன்னார். ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றைக்கு அதிகாலையில் மறுபடியும் நீண்ட தூரம், கடற்கரையோரம் நாங்கள் போய்விட்டோம்.
கடற்கரையோரத்தில் ஒரு இல்லத்திலே, நடுநிசிக்கு மேல் படுத்து உறங்கிவிட்டு, 4 மணிக்கு எழுந்து அந்த அதிகாலை வேளையிலே, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, இரு சக்கர வண்டியில் ஏறத்தாள 40 கி.மீ. தூரம் பயணம் செய்து, வன்னியில் இருந்த பிரபாகரனை, அந்த அதிகாலை வேளையில் சந்தித்தேன். அப்போது ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தவர், கடைசியாக எழுந்து, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, நெஞ்சோடு என்னை அணைத்துக்கொண்டு, 'உங்களுக்காக ஒரு அண்ணன் இங்கே இருக்கிறேன். தைரியமாக நீங்கள் போராடுங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி அனுப்பினார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஒன்றைச் சொன்னார். 'உங்களுக்குத் தெரியுமா? எங்கள் படை புலிப்படைதான். ஆனால், அதில் சிறுத்தை அணி ஒன்று இருக்கிறது. எங்கள் தோழர்களிடத்தில் நான் பேசுகிறபோதெல்லாம், உங்களை மேற்கோள் காட்டிப் பேசுவேன்'. அந்த அளவுக்கு இந்த இயக்கத்தை நேசித்தவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள். இந்த இயக்கத்தின் மீது மிகப்பெரிய அளவிலே ஒரு நம்பிக்கையை வைத்திருந்தார்.
அன்றைக்கு எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், போனவுடன் 'நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை?' என்று கேட்டார். நான் வழக்கம்போல புன்னகைத்தேன். 'அம்மா பேட்டியைப் படித்தேன். என் மனம் கலங்கிப்போனது'. தமிழ்ப் பத்திரிகை ஒன்றிலே வந்த பேட்டியை, எங்கோ வன்னிக்காட்டிலே இருந்துகொண்டு படித்திருக்கிறார். 'ஒரு அண்ணனாகச் சொல்கிறேன். போனவுடன், நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. உங்கள் திருமணத்தைச் செய்ய வேண்டும். நான் திருமணம் செய்துகொண்டு காட்டிலே போராடவில்லையா?' என்று பிரபாகரன் என்னிடத்திலே அறிவுரை கூறினார். இந்த இயக்கத்தின் மீதும், என் மீதும் அவருக்கு அன்பு, பாசம் இருந்தது.
2004-ம் ஆண்டு நடந்த சந்திப்பில், நீண்ட நேரம் பேசினார். தமிழ்நாட்டில் சாதிதான் தமிழர்களை ஒருங்கிணைக்கவிடாமல் தடுக்கிறது. அவன் தமிழைப் பெருமையாக நினைப்பதைவிட, கேவலம் சாதியைப் பெருமையாக நினைக்கிறான். சாதிப்பெருமை தமிழர்களின் ஒற்றுமையை சீரழித்துக்கொண்டிருக்கிறது. பிரபாகரனோடு நான் பேசியது, படம் எடுத்துக்கொண்டது, வீடியோவாகவும், படங்களாகவும் இருந்த நேரத்தில் நான் அவரிடத்தில் கேட்டேன். எனக்கு வேண்டுமென்று. அவர் சொன்னார் எல்லாவற்றையும் இங்கேயே வைத்துவிட்டுப் போங்க. அங்கே போனால், ஜெயலலிதா ஏர்போர்ட்டிலேயே பிடுங்கிவிடுவார். உங்களைக் கைது செய்வார்கள். ஈழம் மலரும்போது உங்களை அழைப்பேன். பத்திரமாக இருக்கும். அப்போது உங்களிடத்திலே தருவேன் என்று 2002-லே சொன்னார். அவர் அப்படி சொன்னபோது எனக்கு மெய்சிலிர்த்துப்போனது.” என்று திருமாவளவன் கூறியபோது, உணர்ச்சிவசப்பட்டார்கள் தொண்டர்கள்.
தமிழர் வரலாற்றில் ‘தம்பி’ வேலுப்பிள்ளை பிரபாகரன், தனித்துவம் மிக்க ஒரு வியத்தகு ஆளுமைதான்!