சு.தமிழ்ச்செல்வி. மாணிக்கம், அளம், கற்றாழை, ஆறுகாட்டுத்துறை என பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சிக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை தனது எழுத்துக்களுக்காக பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் முதன்மையான பெண் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றுகிறார்.
எழுத்திலும் சரி, ஆசிரிய பணியிலும் தான் எடுத்துக் கொண்ட பொறுப்பை, வேலையை மிகவும் அர்ப்பணிப்போடு செய்யக் கூடியவரான தமிழ்ச்செல்வி, தான் தலைமை ஆசிரியராக பணிபுரியும் பள்ளியின் பின்தங்கிய நிலைமையை மாற்ற வேண்டும் எனகனவு கண்டார். இப்பள்ளிக்கு வரும் பிள்ளைகள் மிகவும் பின் தங்கிய, ஏழ்மையான வீட்டு பிள்ளைகள். அப்பிள்ளைகளின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என நினைத்து பள்ளியின் வளர்ச்சியிலும், மாணவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
2015 ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு தமிழ்ச்செல்வி வந்தபோது குளம்-குட்டைக்கு நடுவில் பள்ளி இருப்பது போல் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்திருந்தது. மூன்று நாள் மழை பெய்தாலும் முப்பது நாளைக்கு தண்ணீர் சூழ்ந்திருக்கும். பள்ளிக்கு வரும் வழியையும் சாக்கடை மறித்திருந்தது. அவற்றை மாற்ற தனது சொந்த பணத்தை முதலீடாக்கி அத்துடன் நண்பர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உதவியுடன் பள்ளியை சுற்றிலும் மண் அடித்து மேடாக்கினார். வரும் வழியில் சிறு பாலம் அமைத்து வழி ஏற்படுத்தினார்.
அடுத்து பள்ளி கட்டிடத்துக்கு பெயிண்ட் அடித்து, அதில் பூக்கள், தவாரங்கள், தமிழ்ப்புலவர்கள், தேசத்தலைவர்களின் படங்களை வரைந்து அழகாக்கினார். வகுப்பறைகளுக்கு பீரோ, கணினி, மேஜை, நாற்காலிகள் என தனியார் பள்ளிக்கு இணையான தரம் உயர்த்தினார்.
மாணவர்களுக்கு பாட படிப்புடன் பொது அறிவு, நாட்டு நடப்பு, தமிழர்களின் வாழ்வியல் முறை, வரலாறு என சமூக கல்வியையும் சொல்லி கொடுக்கிறார். ஒரு மாணவருக்கு பிறந்த நாள் என்றால் அன்று வகுப்பறையில் வரைந்துள்ள பிறந்த நாள் கேக் படத்தில் அம்மாணவரின் பெயர், பெற்றொர் பெயர் எழுதி ஆசிரியைகளுடன் படம் எடுத்து சக மாணவர்கள் வாழ்த்து கூறி மகிழ்ச்சி படுத்துகின்றார். இதுபோன்ற சின்ன சின்ன மகிழ்ச்சியான மாற்றங்களை தருவதால் மாணவர்கள் விடுப்பு எடுக்காமலும், இடை நிற்றல் இல்லாமலும் பள்ளிக்கு வருகிறார்கள். இவைகளால் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். 2015-ஆம் ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து நடிகர் சமுத்திரகனி தலைமையில் மேளதாளங்கள் முழங்க அழைத்து வந்து, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பணியாற்றும் பள்ளி மீதும், படிக்க வரும் பிள்ளைகள் மீதும் அக்கறையுடன் செயலாற்றுவதாலேயே கடந்தாண்டு பள்ளியில் நடந்த விரும்பத்தாகாத நிகழ்வுகளால் பணியிலிருந்து விடுபட விரும்பி விருப்ப ஓய்வு கொடுத்த போது மாணவர்கள் போரட்டங்கள் செய்து பணி தொடர வைத்தனர்.
தன் பிள்ளைகளை போல ஒவ்வொரு பிள்ளையையும் நினைத்து பழகுவதாலேயே ‘அம்மா… அம்மா…’ என அழைக்கின்றனர் பிள்ளைகள். அதே தாயன்புடன் கல்வியுடன் கனிவையும் தரும் தமிழ்ச்செல்வியை வாழ்த்துவோம்!.
நாடோடிகளின் மொழியில் வகுப்பெடுக்கும் நல்லாசிரியை:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நரிக்குறவர், மலையாள ஜோதிடர் போன்ற நாடோடி மக்களின் பிள்ளைகளும், மிகவும் பின் தங்கிய பழங்குடி இருளர்கள் சமூகத்தை சார்ந்த குழந்தைகளும் அதிகளவில் படிக்கின்றனர். நாடோடி சமூகத்தை சார்ந்த குழந்தைகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தி ஆர்வமுடன் பயின்று வந்தாலும் அவர்களுக்கு ஆங்கில மொழி பாடம் கற்பது பெரும் சவாலாக இருந்துள்ளது. பாடத்தை புரிந்து படிக்க வேண்டும் என்றால் முதலில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்குமான அந்நியோன்யம் நெருக்கமாக இருக்க வேண்டும். அதன் பிறகுதான் கல்வி என உணர்ந்தார் மூன்றாம் வகுப்பு ஆசிரியையான கீதா.
இந்த குறையை எப்படியாவது போக்க வேண்டும் என்று எண்ணினார். தாய் மொழிக்கல்வி மூலமே தரமான கல்வியை கொடுக்க முடியும் என முடிவெடுத்தவர் நரிக்குறவர்களின் மொழியான “வக்ரிபோலி”என்கின்ற எழுத்துகளற்ற, ஒலிவடிவம் மட்டுமே உள்ள மொழியையும், மலையாள ஜோதிடர்கள், பழங்குடி இருளர்கள் பேசும் மொழியையும் தான் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார். நரிக்குறவர்களின் வாக்ரி போலி மொழியை கற்பது அவ்வளவு எளிதானதாக இல்லாத நிலையிலும் அப்பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஓய்வு நேரங்களில் அப்பள்ளியின் அருகில் வசித்து வரும் நாடோடி சமூக மக்களிடம் பழகி அவர்களின் மொழிகளை கற்றுக்கொண்டு அம்மொழியிலேயே ஆங்கில பாடங்களை சொல்லிக்கொடுக்கிறார் கீதா.
அவருடைய இம்முயற்சிகள் நல்ல பலனை கொடுத்துள்ளதாகவும், பிற மொழியின் மேல் அக்குழந்தைகளுக்கு இருந்த தயக்கம் விலகி இப்பொழுது அந்த குழந்தைகள் ஆங்கிலத்தில் எழுதுவது, வாசிப்பது, ஸ்போக்கன் இங்கிலீஷ் வரை முன்னேறி உள்ளதாக தெரிவிக்கிறார். மேலும் இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் திருவிழா காலங்களில் ஊசி, பாசி விற்க, ஜோதிடம் பார்க்க செல்கையில் அந்த பிள்ளைகளையும் அழைத்து சென்று விடுவதால் பள்ளியில் நாடோடி சமூக பிள்ளைகளின் வருகை பதிவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. அதனால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கபடுவது தொடர் கதையாகயாகவும் இருந்துள்ளது.
அதற்கும் தீர்வை யோசித்தவர் “மாதம் முழு வருகை பதிவு; முகம் மலர பரிசு திட்டம்” என்ற திட்டத்தை துவங்கி ஒவ்வொரு மாதமும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் படிப்புக்கு தேவையான பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்குகிறார். இதனால் குழந்தைகள் விடுப்பு எடுக்காமல் வருவது அதிகரித்துள்ளதாகவும், இந்நடவடிக்கைகளால் நாடோடி சமூக மக்கள் இவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணுவதாக கூறுகிறார் கீதா. இவருடைய நல் முயற்சிகளை அறிந்து சில தனியார் அமைப்புகள். தொண்டு நிறுவனங்கள் இவருக்கு விருதுகள் வழங்கி ஊக்க படுத்தியுள்ளன. அரசு பள்ளியில் பயிலும் நாடோடி சமூகத்தினரின் குழந்தைகளின் மொழி அறிவை மேம்படுத்த அவர்களின் மொழியை தானும் கற்றுகொண்டு, விளிம்பு நிலை குழந்தைகளை ஆங்கிலம் வாசிக்க பேச. வைக்கும் அரசு பள்ளி ஆசிரியையின் முயற்சிக்கு பாராட்டுகள்.
மாடல் பள்ளியை உருவாக்கும் மாற்றுத்திறன் ஆசிரியை:
அரசு பள்ளியில் பணிபுரியும் மாற்றுத் திறனாளியான இடை நிலை ஆசிரியையால் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை அனைவரின் பாரட்டையும் பெறுகிறது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மாற்றுத்திறனாளியான ஹேமகுமாரி. இவர் உயர்கல்வி படிப்பிற்காக தமிழக அரசு கொடுத்த ஊக்க தொகையான 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தனது சம்பளத்தில் சேமித்த தொகையை வைத்து சொந்த செலவில் அவர் பணிபுரியும் பள்ளியில் 90 ஆயிரம் மதிப்பிலான ‘ஸ்மார்ட் கிளாஸ்’ எனப்படும் நவீன வகுப்பறையை நிறுவியுள்ளார்.
அரசு பள்ளியும், அதில் பயிலும் ஏழை மாணவர்களும் வளர்ச்சி பெறவதற்காக தனியார் பள்ளிகளில் இருப்பதை போன்று தொடு திரை மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற முயற்சியினால் நவீன வகுப்பறையை உருவாக்கியுள்ளார். ‘இதன் மூலம் அரசு பள்ளியில் பயிலும் ஏழை , எளிய மாணவர்களின் கல்வி திறன் உயரும்” என்கிறார் ஹேமகுமாரி.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் மற்றவர்களையும் திறமைசாலிகளாக மாற்ற வேண்டும் என நல்ல மனதுடன் செயல்படும் ஹேமகுமாரியை மனதார வாழ்த்தலாம்.
தாங்கள் இணைத்துக்கொண்ட துறைகளில் அர்ப்பணிப்போடும், அக்கறையோடும் பணீயாற்றும் இப்புரட்சி பெண்களை இந்த மகளிர் நாளில் வாழ்த்தி மகிழ்வோம்!