Published on 01/05/2020 | Edited on 01/05/2020
சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த மருத்துவ மாணவி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இவர் சென்னை பெரம்பூரில் வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில், தற்பொழுது கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையிலேயே தங்கி பயிற்சி மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக அவர் மருத்துவமனை வளாகத்திலேயே பயிற்சி மருத்துவர்கள் தங்கக்கூடிய அறைகளில், ஆறு என்ற எண் கொண்ட அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று பணிமுடிந்து அறைக்கு சென்ற அவர் இன்று அறையிலிருந்து வெளியே வராததால் சக பயிற்சி மாணவிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவலாளிகளை கொண்டு அறையை திறந்தபோது அவர் அறையின் உள்ளே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் கரோனாவால் உயிரிழந்தாரா என கேள்விகள் எழ, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சார்பில் அந்த மாணவி கரோனா வார்டில் பணிபுரியவில்லை என்றும், கர்ப்பிணிகளுக்கான வார்டில்தான் அவர் பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவருடைய மரணம் பற்றி உறுதியான தகவல்கள் வெளியாகும். அதேபோல் போலீசார் விசாரணையில் இது தற்கொலை இல்லை என்றும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று அவர் பெற்றோர்களுடனும், தோழிகளுடனும் செல்போனில் பேசியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அவரது செல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மருத்துவ பயிற்சி மாணவி மரணம் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.