Skip to main content

பொற்பனைக்கோட்டை சங்க காலக் கோட்டைச் சுவரில் அகழாய்வு பணிகள் தொடக்கம்!

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Excavation work has started on the wall of the Sangam Fort of Porpanaikottai

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக் கோட்டையான பொற்பனைக்கோட்டை அகழாய்வு 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'அரண்மனை திடல்' என்னும் இடத்தில் 14 குழிகள் அமைத்து அவற்றுக்கான அகழியில் 1 குழி அமைத்து அகழாய்வு பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த அகழாய்வில் வட்டச்சுவர் கட்டுமானம், கழிவு நீர் வாய்க்கால், வட்டச்சில், தங்க ஆபரணம், பானை ஓடுகள் எனப் பல்வேறு பொருட்கள் காணப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், அடுத்த கட்டமாக கோட்டை கரை என்னும் இடத்தில் தற்போது கோட்டை சுவரின் கட்டுமானத்தை அறிந்து கொள்ளும் வகையில் வடக்கு கோட்டை கரையில் 5x5 மீட்டரில் குழிகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக அளவிடும் பணியும் குழிகள் அமைக்கும் முன்னேற்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

 

Excavation work has started on the wall of the Sangam Fort of Porpanaikottai

 

2.5 கி.மீ சுற்றளவு கொண்ட கோட்டைச் சுவரானது பல்வேறு இடங்களில் உயர்வாகவும், தாழ்வாகவும் காணப்படுகிறது. இதில் வடக்கு பகுதியில் சுமார் ஐந்து மீட்டர் உயரம் கொண்டதாகவும் ஒட்டுமொத்த கோட்டையின் உயரமான மண் மேட்டுச் சுவராகவும் காணப்படுகிறது. இந்த மண் மேட்டுச் சுவரின் மேல் மட்டத்தில் சுமார் ஒரு மீட்டர் அகலத்தில் நீளமான செங்கல் கட்டடமானது கோட்டைச் சுவராகக் காட்சியளிக்கிறது. இதில் ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோட்டைச் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது மற்றும் உயரமான கட்டுமான அமைப்பினை ஆய்வு செய்யும் நோக்கில் இந்த அகழாய்வு குழியானது அமைக்கப்பட உள்ளது. 

 

Excavation work has started on the wall of the Sangam Fort of Porpanaikottai

 

சுமார் 6 முதல் 7 குழிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்படுத்தப்பட உள்ள அகழாய்வு குழியானது படிக்கட்டு போன்ற அமைப்பில் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்படும். இந்த அகழாய்வில் கோட்டைச் சுவரின் கட்டுமானம், அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், அதன் தரம் ஆகியவையும் இத்தனை ஆண்டுகள் அழிவில்லா உறுதியான கோட்டையாக எப்படி அமைந்துள்ளது என்பது பற்றியும் தெரியவரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தப் பணிகளில் அகழாய்வு இயக்குநர் தங்கதுரை மற்றும் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.