தொடங்கிய இடம் சீனாவின் யூகான் மாநிலம். இப்போது அங்கு கொரோனாவை விரட்டி விட்டார்கள். மேலும் செஞ்சீன நாடு முழுக்க எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இத்தாலியில் அதன் கோர தாண்டவம் கூடிவர உலகில் 163 நாடுகள் அதன் பரவலால் கத்தியின்றி ரத்தமின்றி கடும் போர் நடத்தி வருகிறது.
இந்தியாவில் மிக கவனமுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அன்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து எல்லைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டு விட்டது. இன்று இந்தியா முழுக்க சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் வாகனம் செல்லவில்லை. வீதிகளில் மனித நடமாட்டம் இல்லை. செல்வந்தர்கள் முதல் ஏழை உழைப்பாளிகள் வரை வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கு தொன்னூறு சதவீத மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்கு பிடித்தமான அல்லது அவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, மீன் என இறைச்சி வகைகள் கடைகளில் வாங்கிச் சென்று வீட்டில் சமைத்து குடும்பத்தோடு சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் இன்று சுய ஊரடங்கு என்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன. எனவே என்ன செய்வார்கள் மக்கள் என்று சிந்திப்பதற்கு முன்பே நமது மக்கள் எப்போதும் அட்வான்ஸாக யோசிப்பவர்கள் என்பதை நிறுபித்துவிட்டார்கள். நேற்று சனிக்கிழமை மாலை 7 மணி முதல் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. சில கடைகளில் விடிய விடியவும் ஒரு சில கடைகள் விடியற்காலை இரண்டு மணி முதல் காலை 6 மணி வரையும் கறி விற்பனை செய்தனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு கசாப்புக் கடையில் கறி வாங்கிக் கொண்டிருந்த கருங்கல்பாளையம் ஜெகநாதன் என்பவரிடம் பேசினோம், "கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடாது முன் எச்சரிக்கை வேண்டும் என்பதெல்லாம் சரி, அதென்னங்க ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு? ஏன் சனிக்கிழமை விட்டிருக்கலாம் அல்லது திங்கள்கிழமை விட்டிருக்கலாமே? ஏழை, பாழைகள் நடுத்தர மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தானே கறி குழம்பு வைக்க முடியும்...? அதுவும் இல்லாமல் இருக்க முடியுமா? அதனால் தான் சனிக்கிழமை நைட்டு புல்லா கறி வியாபாரம் நடந்தது. மக்கள் எல்லோரும் வாங்கிட்டாங்க. இனி வீட்டுல போய் வழக்கம் போல் சமைச்சு சாப்பிட வேண்டியது தான்.... நீங்க லீவு நாளுக்கே லீவு வுடுவீங்க அப்படியெல்லாம் நாங்க விட முடியாது. சுய ஊரடங்கு தான். ஆனால் மட்டன், சிக்கனுடன் தான்" என எதார்த்தமாக பேசினார்.
ஈரோடு போல் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் சனிக்கிழமை இரவு முழுக்க இறைச்சி விற்பனை குறைவில்லாமல் நடந்துள்ளது.