மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வந்தது. ரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர்.
அதே போல், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்படும் என்றும், அக்னிவீர் திட்டம் குறித்தும் காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது. காங்கிரஸ் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை குறித்தும், பா.ஜ.க தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவின் தேர்தல் மரபுகளின் நேர்மையை பா.ஜ.கவும் காங்கிரஸும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் அளித்திருந்த கடிதத்தில், ‘தங்களது நட்சத்திர பேச்சாளர்களின் பொது உரையாடல்களில் அலங்கரிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பா.ஜ.க., நட்சத்திரப் பேச்சாளர்கள் ஜாதி, மத மற்றும் வகுப்புவாத மேலோங்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடிய எந்தவொரு பிரச்சாரத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதிய கடிதம் போலவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒழிக்கப்படலாம் அல்லது விற்கப்படலாம் என்று கூறுவது போன்ற தவறான எண்ணங்களை உருவாக்கக்கூடிய அறிக்கைகளை காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாரகர்கள் வெளியிடக்கூடாது. அதே போல், ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டத்தை காங்கிரஸ் விமர்சிக்கக்கூடாது.
தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி தேர்தல் காலங்களில் கூடுதல் பொறுப்பை வகிக்கிறது. பாதுகாப்புப் படைகளின் சமூக பொருளாதார அமைப்பு குறித்து பிளவுபடுத்தும் அறிக்கைகளை காங்கிரஸ் வெளியிடக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் காலங்களில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது எதிர்க்கட்சிகளுக்கு வரம்பற்ற சலுகையை வழங்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.