அண்ணாமலையின் பாத யாத்திரை மற்றும் தற்கால தமிழ்நாடு அரசியல் குறித்துப் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி அவர்கள்.
“பாஜக நடத்தும் பாத யாத்திரை பற்றி முதலமைச்சர் தளபதி அவர்கள் அருமையாகச் சொன்னார். இது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை. மணிப்பூரில் இவர்கள் அவ்வளவு அட்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். அங்கு மக்கள் அழுகிறார்கள். அந்த மண்ணை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்காக பழங்குடியின மக்களை அங்கிருந்து விரட்டி வருகிறார்கள். சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக வைத்துள்ளனர். பெண்களை நிர்வாணப்படுத்தி, துன்புறுத்தி இவர்கள் செய்த கொடுமைகளுக்குப் பரிகாரம் தேடும் யாத்திரை தான் இது.
இந்த யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்தார். அவர் இதற்கு முன்பு செய்துள்ள கொடுமைகள் எண்ணிலடங்காதவை. பாஜக என்பது அனைத்து வகைகளிலும் மிக மோசமான ஒரு அமைப்பு. இதுதான் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இறுதி யாத்திரை. இந்தியாவிலும் இதுதான் அவர்களுக்கு இறுதி யாத்திரையாக இருக்கும். வாரிசு குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு கிரிக்கெட்டே விளையாடத் தெரியாது. ஆனால் அவர் கிரிக்கெட் சங்கத்தை ஆண்டு வருகிறார். கோடிக்கணக்கில் அவரிடம் பணம் புரள்கிறது. இதைத்தான் எங்களுடைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சொன்னார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜகவுக்கு டெபாசிட் போகும். இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிர்ப்பு அதிகரித்துவிட்டது. வாக்கு கேட்கவே இவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. பாஜகவால் அதிகபட்சம் 140 தொகுதிகளில் தான் வெல்ல முடியும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகாது என்று இவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அது நடந்துவிட்டது. இப்போது அவர்களுக்கு பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. மோடி இதுவரை மக்களுக்கு செய்த நன்மை என்ன?
இந்தியாவில் துறைமுகங்களை அதானிக்கு விற்கின்றனர். அதன் மூலம் போதைப் பொருட்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சியைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவது தான் இவர்களின் நோக்கம். இதுவரை பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர்கள் மக்களின் நலனுக்காக அதைச் செய்தனர். ஆனால் அண்ணாமலை மக்களுக்கு பிரச்சனையை உண்டாக்குவதற்காக பாதயாத்திரை செல்கிறார். ஊழலில் ஊறித் திளைத்த பாசிச பாஜகவும், அண்ணா திமுகவிலிருந்து மாறி அமித்ஷா திமுகவாக செயல்பட்டு வரும் அதிமுகவும் பேச மட்டுமே முடியும்.
ஒன்றாக இருந்தபோது விட்டுவிட்டு இப்போது கொடநாடு வழக்கில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஓபிஎஸ். குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு வேலைகள் செய்தனர். திமுக அரசு நிச்சயமாக தன் கடமையைச் செய்யும். குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாகக் கிடைக்கும்” என்றார்.