Skip to main content

மோடி, சீன அதிபர் சந்திப்பின் முழுப் பின்னணி...வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

"இப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு, சென்னை டூ மாமல்லபுரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பெங்- இந்திய பிரதமர் மோடி விசிட். சீன அதிபருக்காக சென்னை விமான நிலையம், அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி. ஓட்டல் செல்லும் வழி, அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம் வழியிலான ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகள் எல்லாம் பளபளக்க, பல்லவர் கால கலைநகரமான மாமல்லபுரம், நேற்றுதான் வடிவமைக்கப் பட்டதுபோல பாலீஷ் செய்யப்பட்டிருந்தது. ஆச்சரியமூட்டும் அலங்காரத்தை சென்னை வாசிகள் வாய்பிளந்து பார்த்தனர். சாக்கடை அடைத்துக்கொண்டால் கார்ப்பரேஷன் ஆட்கள் வர நாட்கணக்கில் ஆகும் மாநகரத்தில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சிமெண்ட் தூண்களும் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன. 10 நொடியில் 100 கி.மீ பயணிக்கும் சீன அதிபரின் கார் வியாழனன்றே வந்திறங்க, ஆச்சரியம் கூடியது.

 

meeting



இந்த ஆச்சரியத்துக்கு நடுவே கெடுபிடிகளுக்கும் அடாவடிகளுக்கும் பஞ்சமில்லை. ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டு, சாஃப்ட்வேர் நிறுவனத்தினர் வீட்டிலிருந்தே வேலை செய்ய பணிக்கப்பட்டனர். சென்னையில் படிக்கும் திபெத் மாணவ-மாணவியர் பாலின வேறுபாடின்றி போலீஸ் கஸ்டடியில் சிக்கித் தவித்தனர். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ராமுமணிவண்ணன் வழக்கறிஞர்களோடு நேரில்சென்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தபிறகு, உத்தரவாதத்துடன் மாணவர்களை விடுவித்தது காவல்துறை. முதல்வரில் தொடங்கி தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் சீன அதிபர் வருகையில் மட்டுமே முழு கவனம் செலுத்தியது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருகைக்கும், இந்தியப் பிரதமருடனான சீன அதிபரின் சந்திப்புக்கும் என்ன காரணம், விவாதப் பொருள் என்ன, மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி வெளியுறவுத்துறை மூச்சு விடவில்லை.


இது பற்றி விசாரித்தபோது, "இரு வருடங்களுக்கு (2017) முன்பு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. போர் பதட்டம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 2018-ல் சீனாவில் உள்ள ஹூபெய் நகரில் ஷி ஜின்பெங்கை சந்தித்து எல்லைக்கோடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார் மோடி. அதில் முழுமையான உடன்பாடு எட்டப்படாத நிலையில் இந்தியாவுக்கு வருமாறு ஜின்பெங்கை அழைத்தார் மோடி. அந்த அழைப்பின்படியே இந்தியா வந்துள்ளார் சீன அதிபர். சந்திப்புக்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்ததும் சீன அதிபர்தான்'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

இந்திய-சீன உறவு குறித்து பல வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்து வரும் தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "வரலாற்று ரீதியாகப் பார்த்தால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் சீனாவின் ஆதர்சபுருஷராக இருக்கிறார். கடந்த 1956-ல் சீனாவின் பிரதமராக இருந்த சூஎன்லாய் இரண்டுநாள் பயணமாக தமிழகம் வந்தவர், மாமல்லபுரத்திற்கும் விசிட் அடித்தார். மாமல்லபுரத்திற்கும் புத்தமதத்திற்குமுள்ள தொடர்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டவர் சூஎன்லாய். அதன் பாதிப்பில் தற்போதைய சீன அதிபரும் மாமல்லபுரத்தை தேர்வு செய்திருக்கலாம்'' என்கிறார்.

"சமீபகாலமாக தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வரும் பிரதமர் மோடி, அதன் ஒரு முகமாகவே ஜி ஜின்பெங்கின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்'' என்கிறார்கள் டெல்லி தரப்பினர். மேலும் விசாரித்தபோது, ""காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு இந்தியாவுக்கு எதிராக இருந்தது. இந்தியாவுக்கு சீன அதிபர் செல்வது உறுதியானதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அவசரம் அவசரமாக சீனாவுக்கு பறந்தார். இரண்டு நாட்கள் ஜி ஜின்பெங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, ‘ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின் படியும், இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படியும் காஷ்மீர் விவகாரம் முறையாக தீர்க்கப்படவேண்டும். சூழலை கடினமாக்கும் ஒரு தரப்பு நடவடிக்கையை சீனா எதிர்க்கிறது’ என இந்தியாவுக்கு மெசேஜ் சொன்னது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அதிகார உரிமைகளை பாதுகாக்க சீனா ஆதரவு தெரிவிக்கும் என வெளிப்படையாகவே சொன்னார் ஜி ஜின்பெங். இதனை எதிர்த்து பதிலடி தந்தது இந்திய வெளியுறவுத்துறை. இப்படிப்பட்ட சூழலில்தான் சீனா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மோடி'' என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்கோடு தகராறுகள், வர்த்தகத்திலுள்ள முரண்பாடுகள், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.