Skip to main content

"யாருக்கும் சீட் கேட்கமாட்டேன்"...எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை...களத்தில் இறங்கும் அமைச்சர்கள்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் நடந்த நாங்குநேரி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில், எனது உறவினர்கள் யாருக்கும் சீட் கேட்கமாட்டேன் என அகில இந்தியத் தலைமையிடம் சொல்லிவிட்டேன் என்றார் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வும் கன்னியாகுமரியின் இப்போதைய எம்.பி.யுமான வசந்தகுமார். ஆனால் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு சீட் வாங்குவதில் மும்முரம் காட்டினார்.

 

congress



இவரின் விருப்பத்தின் பேரிலேயே விருப்பமனு கொடுத்தார் குமரி அனந்தன். சிலபல காரணங்களால் நிற்க மறுத்தார் குமரி அனந்தன். அடுத்ததாக, தனது சகலையான ஆலங்குளம் காமராஜை சீட் சீனுக்கு கொண்டுவர, வசந்தகுமார் முயன்றும் முடியவில்லை. கடைசியாக தனது சம்பந்தி ரூபி மனோகரனை களத்தில் இறக்கிவிட்டார். எத்தனை "சி' என்றாலும் தயார் என்ற முடிவுடன் களத்தில் குதித்திருக்கிறார் ரூபி மனோகரன்.


ரூபி மனோகரனை காங்கிரஸ் மேலிடம் ஓ.கே. சொல்வதற்கு முன்னால் மற்றொரு ரகசிய டீல் ஒன்றும் நடந்திருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வான ஊர்வசி செல்வராஜின் மகன் அமிர்தராஜ், மாஜி எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன் மூலமாக சீட்டுக்கு காய் நகர்த்தி, 25 "சி' வரை செலவழிக்கத் தயார் என கே.எஸ்.அழகிரிக்கு அட்வான்ஸ் சிக்னல் போட்டிருக்கிறார். ஆனால் அமிர்தராஜின் உறவினர்களோ ஒன்றரை வருஷ எம்.எல்.ஏ. பதவிக்கு இம்புட்டு செலவழிப்பது வேஸ்ட் என்றதும், சிக்னல் இடம் மாறி ரூபி மனோகரன் பக்கம் வந்துள்ளது.

தேர்தல் பணிகளை காங்கிரஸ் ஆரம்பிக்கும் முன்பே தி.மு.க. ஜரூராக ஆரம்பித்துவிட்டது. கட்சியின் து.பொ.செ. ஐ.பெரியசாமியின் தலைமையில், கடந்த 29-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாவட்ட தி.மு.க. பெருந்தலைகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. "நாங்குநேரியில் நிற்பது காங்கிரஸ் வேட்பாளர் தானேன்னு அலட்சியமா இருந்துடாதீங்க. நம்ம தளபதியே நிற்பதா நினைச்சு வேலை பாருங்க. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியப் பிடிப்பதற்கு இந்த இடைத்தேர்தல்தான் அச்சாரம்''’என உற்சாகமூட்டியிருக்கிறார் ஐ.பி. தேர்தல் பணிக்குழுவில் கருப்பசாமி பாண்டியன் பெயர் விடுபட்டிருப்பதை சிலர் சுட்டிக்காட்டியதும் "கானா'வின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஆளும் கட்சி தரப்பிலோ நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நாராயணன் களம் இறங்கியிருக்கிறார். பொருளாதார ரீதியில் நாராயணன் சுமார் ரகம் என்றாலும், இது எடப்பாடிக்கு கௌரவப் பிரச்சனை என்பதால் அமைச்சர்கள் பட்டாளத்தின் பணப்பாய்ச்சல் தாராளமாக இருக்கும். இதை சமாளிப்பதில்தான் காங்கிரஸ் ரூபி மனோகரனின் சாமர்த்தியம் இருக்கிறது.