தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல், கடந்த 2 வருடமாக பல்வேறு ஊழல் வழக்குகள் அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஒரு ஊழல் வழக்கில் கூட அ.தி.மு.க. மாஜிகள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டில் குற்றப்பத்திரிகை கூட கடந்த 2 வருடமாக தாக்கல் செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி சீரியஸாக பேசினார். கரப்ஷன், கமிஷன் இது தான் அ.தி.மு.க. என ஸ்டாலின் வர்ணித்தார். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் அ.தி.மு.க.வினர், தி.மு.க. ஆட்சியை கமிஷன், கரப்ஷன் என தி.மு.க.வினர் விமர்சித்த அதே பாணியில் விமர்சித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது அறப்போர் இயக்கம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக சென்னை, கோவை மாநகராட்சிகளில் நடைபெற்ற டெண்டர்களில் ஊழல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அந்த குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அ.தி.மு.க. ஆட்சியின்போதே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையில் டி.ஐ.ஜி.யாக இருந்த ராதிகா, எஸ்.பி.யாக இருந்த பொன்னி மற்றும் சண்முகம் ஆகியோருக்கு இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் சொல்லி உத்தரவு போட்டது.
குற்றச்சாட்டுகளை விசாரித்த எஸ்.பி. பொன்னி, அமைச்சர் வேலுமணி மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்தார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க., மாநகராட்சிகளில் டெண்டர் விடுவதில் எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக டெண்டர் எடுத்து பலகோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார் என வழக்கைப் பதிவு செய்தது.
சமீபத்தில் இந்த வழக்கை எதிர்த்து வேலுமணி தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வேலுமணியை சரியாக விசாரிக்கவில்லையென அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது. அத்துடன், அ.தி.மு.க. ஆட்சியில் குற்றமற்றவர் என லஞ்ச ஒழிப்புத்துறை சொன்ன அதே அமைச்சர் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் குற்றவாளியாகிறார். ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு லஞ்ச ஒழிப்புத்துறை மாறி மாறி செயல்படுவதை உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என தீர்ப்பளித்தது. இது லஞ்ச ஒழிப்பத்துறைக்கு ஒரு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட ராதிகா, தி.மு.க. ஆட்சி வந்தபிறகும் ஓராண்டு காலத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரிந்தார். அவரை மாற்றச் சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறை தலைவரான கந்தசாமி, டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகே ராதிகா மற்றும் வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட பொன்னி ஆகியோர் மாற்றப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்முகம் என்கிறவர் இன்றளவிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக தொடர்கிறார். வருகிற மார்ச் மாதம் கந்தசாமி ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்கு யாரை போடுவது? என்கிற ரேஸ் காவல்துறையில் வலுவாகி உள்ளது.
சி.பி.ஐ. அதிகாரியாக இருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் கந்தசாமி, அமித்ஷாவை கைது செய்தார். அந்த நடவடிக்கைதான் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் பதவியைப் பெற்றுத் தந்தது. தற்பொழுது அவரது இடத்தைப் பிடிக்க கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்ட காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறையில் தமிழகம் முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. காஞ்சிபுரத்தில் பத்திரப்பதிவு துறையில் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அங்கு அதிகாரியாக இருக்கக்கூடிய ராஜவேலு என்பவர் காஞ்சிபுரத்தில் கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றிவரும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஒருவர் மூலம் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பழிவாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.யாக இருப்பவர், இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த டாஸ்மாக் மண்டல மேலாளர் ஒருவர் வீட்டுக்கு ரெய்டு செல்கிறார். அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அவரது மண்டல மேலாளரின் டிரைவர் வீட்டில் லட்சக்கணக்கான பணத்தை கைப்பற்றுகிறார். அந்தப் பணம் டிரைவரின் மகனின் பொறியியல் பட்டப்படிப்புக்கு கட்ட வைத்திருந்த பணம். அதை மண்டல மேலாளரின் பணம் என வாக்குமூலம் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை சொல்கிறது. அவரும் வாக்குமூலம் அளித்தார். ஆனால் வாக்குமூலம் அளித்தால் பணத்தை திருப்பித் தந்துவிடுகிறோம் என லஞ்ச ஒழிப்புத்துறை சொன்னதை செய்யவில்லை. அதனால் மகனுக்கு பீஸ் கட்ட வைத்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பொய்யாக பறித்துக் கொண்டார்கள் என அவர் கலெக்டரிடம் புகார் கொடுத்தார். புகாருக்குள்ளான லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கன்னியாகுமரியிலிருந்து தேனிக்கு மாற்றப்பட்டார்.
இப்படி லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஊழல் புகார்கள் அணிவகுக்க அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக சுற்றித் திரிகிறார்கள் என வருத்தப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.