Skip to main content

கரோனா தேவி தெரியும்... ஆனால் எய்ட்ஸம்மாவையும், ப்ளேக்கம்மாவையும் தெரியுமா..?

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

diseases and deities culture in india

 

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வையும், தங்கள் அன்புக்குரியோரையும் இழந்து, ஒரு அமைதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர். வேலைக்குச் சென்றால்தான் வாழவே முடியும் என்ற கட்டாயத்தில் பலர் இருக்கின்றனர். ஆனால், ஊரடங்குதான் தொற்றுநோயைக் குறைக்கும் ஒரே வழி என்ற கட்டாயமும் இருக்கிறது. இப்படி மக்களின் பொருளாதாரம் ஒருபுறமும் சுகாதாரம் மற்றொரு புறமும் மக்களை வாட்டி வதைக்க, இந்த முரனுக்கு மத்தியில் எப்படி வாழ்வது என்று திட்டமிடும் முன்னரே காலம் பலரை இந்த ஓட்டத்தில் இருந்து விலக்கிவிட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் மக்களின் வணங்குதலுக்கு உரிய தேவியாக மாற்றப்பட்டுள்ளாள் இந்த கரோனா. கோயம்புத்தூர் அருகே இருகூரில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தின் 51வது சக்தி பீடத்தில் கரோனா தேவிக்கான சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் மகா யாக பூஜை நடைபெற இருக்கிறது.

 

இச்செய்தி, சமூகவலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல்தான், நம்பிக்கை என ஒரு பக்கமும் மூட நம்பிக்கை என மற்றொரு பக்கமும் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருக்கையில், செவ்வனே பீடத்தில் அமர்ந்து யாகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் கரோனா தேவி. தமிழகத்தில் மட்டும் கரோனா கடவுளாக்கப்படவில்லை, கடந்த வருடமே கேரளாவின் கொள்ளம் பகுதியில் கரோனா நோயைக் கடவுளாக்கி ஒருவர் சிலை எழுப்பியிருக்கிறார். அஸ்ஸாமிலும் ஒரு கரோனா தேவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

இன்றைய நவீனம் எனும் போர்வையின் கீழ், மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கும்போதும், கரோனா போன்ற பெரும் தோற்றுக்கு உயிர்களைப் பலிகொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது மனித இனம். ஆனால், நவீன மருத்துவம் மேம்படாத அக்காலகட்டத்திலும் பல கொள்ளை நோய்கள் நம் மக்களின் உயிரைக் குடித்திருக்கின்றன. அந்த சமயங்களிலும், பல நோய்கள் புனிதமாக்கப்பட்டன, கடவுளாக்கப்பட்டன என்பது நிதர்சனம்.

 

diseases and deities culture in india

 

தற்போது கரோனா தேவியாக உருவெடுத்துள்ள இதே கோயம்புத்தூரில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிளேக் என்னும் கொள்ளை நோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், அப்போதைய மக்கள் தொகையில் 50,000 பேர் வரை பிளேக்குக்குப் பலியாகினர். அப்போது, கோவையில் பிளேக் மாரியம்மன் உதயமானாள். அதாவது, கிணத்துக்கடவு என்னும் பகுதியில் பிளேக் மாரியம்மன் என்னும் கோவில் உருவாகியுள்ளது. தற்போதும் இக்கோயில் அங்கு இருக்கிறது. பிளேக் போன்ற கொள்ளை நோயை விரட்ட என்ன வழி என்று தெரியாத மக்கள், அக்காலத்தில் இதுபோலதான் சிலை எழுப்பி வழிபட்டு வேண்டியுள்ளனர். கர்நாடகத்திலும் பல இடங்களில் பிளேக் நோயை ஓட்ட, பாதிக்கப்பட்டவர்களைக் காக்கப் பல பிளேக் அம்மா கோவில்கள் உருவாகியுள்ளன. இவ்வளவு ஏன், கர்நாடகாவிலுள்ள மாண்டியா- மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் எய்ட்ஸம்மா இன்றளவும் மக்களுக்கு அருள்புரிந்து வருகிறாள். 

 

இது பிளேக் நோயுடன் முடிந்துவிடவில்லை. பெரியம்மை, காலரா உள்ளிட்ட பல கொள்ளை நோய்களிலிருந்தும் காப்பாற்ற இங்கு சிலை உண்டு, அதற்கு வழிபாடும் உண்டு. இது முட்டாள்தனமானது எனச் சிலர் விமர்சித்தாலும், இது மக்களுக்குள் எதோ ஒருவகையில் நம்பிக்கையை விதைக்கும் முறையாகவும் இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. உலகளவில் பல கோடி பேரைக் காவு வாங்கிய, பலருக்கும் அழியா தழும்பைத் தந்த பெரியம்மை நோயை விரட்ட வணங்கப்படுவதுதான் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன். மாரியம்மனாகத் தொடங்கி தற்போது பல வடிவத்தில் பல துணைப் பெயர்களைக் கொண்டு மாரியம்மன் கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. 

 

அதேபோல, அம்மை நோய் வந்து இறந்தவர்களையும் கடவுளாகப் பாவித்து வழிபடும் வழக்கமும் பல இடங்களில் காணப்பட்டுள்ளது. இந்த கலாச்சாரம் தமிழகத்தில் மட்டும்தானா என்று கேட்டால், இல்லை. இந்தியா முழுவதும், புவியியல் சார்ந்தும், சமூகம் சார்ந்தும், பல விஷயங்களுக்காகப் பல தெய்வங்களை மக்கள் வழிபடத் துவங்கி இன்றுவரை அது தொடர்ந்து வருகிறது.  இங்கு செல்வி, அம்மன் என்றால் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் அம்மே, அம்மா என்ற பெயரில் வணங்கியிருக்கிறார்கள். வட இந்தியாவில் சீதளாதேவி என்னும் பெயரில் அம்மை நோய்க்கான சாமியாக வழிபட்டிருக்கிறார்கள். சீதளா என்றால் குளிர்ச்சி என்று பொருளாம். தென்னிந்தியாவைப்போல வட இந்தியாவிலும் இந்த கொள்ளை நோய்களை விரட்ட, அவற்றை தெய்வமாக்கியோ, அல்லது அவற்றை விரட்டும் பொருளை தெய்வமாக்கியோ வழிபட்டிருக்கிறார்கள். 

 

diseases and deities culture in india

 

பிளேக், பெரியம்மை, காலரா என இதுவரை மக்களுக்குப் பெரிதும் அச்சத்தைக் கொடுத்த, அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட பல நோய்கள் தெய்வங்களாகிவிட்டன. தெய்வத்துடைய கோபம்தான் இதுபோன்ற மக்களை அழிக்கும் நோய்கள் என்று அப்போதைய மக்கள் நினைத்தார்கள். ஆனால், இப்போதும் கூட குறிப்பிட்ட சில மக்கள் கரோனாவை அப்படி நினைக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க அவர்களுக்கு ஏற்றார்போல நோய்களைத் தெய்வமாக்கி வணங்கி வருகிறார்கள். ஆதிகாலத்தில்கூட மனிதன் எதைக் கண்டு பயந்தானோ, அதையே சிலையாக்கி பின்னர் தெய்வமாக்கி  வழிபடத் தொடங்கினான் என்றொரு கோட்பாடு உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக ‘லயன் மேன்’என்கிற 40,000 ஆண்டுகள் பழமையான சிங்கம் மற்றும் மனித உருவத்தில் இருக்கும் சிலையை சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு பாம்புகள் சிலைகளாகவும், பாம்புப் புற்றுகள் வழிபாட்டுத் தளங்களாகவும் இருப்பதற்கும் இந்த கோட்பாட்டைதான் சுட்டிக்காட்டுகிறார்கள். மனிதன் அஞ்சும் ஒரு விஷயத்தையே புனிதமாக்கி தெய்வமாக்குவது அன்று இருந்தது என்பது மறுக்கமுடியாது. ஆனால் அது இன்றும் இருக்கிறது என்பது கவனிக்கவேண்டியது. 

 

இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ கொள்ளை நோய்களை மனித இனம் கண்டிருக்கிறது. அதற்குச் சிலை வைத்துக் கும்பிட்டு தெய்வமாக வழிபட்டிருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பும் இதைத்தான் மனிதன் செய்திருக்கிறான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதைத்தான் செய்திருக்கிறான். ஆனால், இந்த நவீன உலகத்தில் தடுப்பூசிகள் வந்த பின்பும் அதைப் போட்டுக்கொள்ள அடம்பிடிப்பவர்களை கரோனா தேவியும் காப்பாளா என்பது கேள்விக்குறியே. 

 

 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.