
கோவை அடுத்த பூச்சியூர் பகுதியில் அண்மையில் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று நான்கு ஆடுகளை கடித்துக் குதறியது. தொடர்ச்சியாக சிறுத்தை இந்த பகுதியில் அச்சுறுத்தலைக் கொடுத்து வந்தது. அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் சிறுத்தை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அறிந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே கார்த்தி, சுஜித் என்ற இரண்டு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சி செய்தனர். அவர்கள் வைத்திருந்த வலையை வைத்து வலை வீசி சிறுத்தையைப் பிடித்துள்ளனர். இதில் கார்த்திக், சுர்ஜித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் வலையில் சிக்கிய சிறுத்தையை மீட்டுக் கொண்டு சென்றனர். அச்சுறுத்தல் கொடுத்து வந்த சிறுத்தை சிக்கியதால் அந்தப் பகுதி மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டுள்ளனர்.