Skip to main content

'திருமணம், வளைகாப்பு, சடங்கு நிகழ்ச்சிகளில் பறை இசைக்கலாம்' அமெரிக்க பேராசிரியை தடாலடி!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் சோயிக் செரினியன். இசையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ள இவர், இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தமிழகம் வந்து மதுரையில் உள்ள கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இசை குறித்து படித்துள்ளார். அதையும் தாண்டி நாட்டுபுற கலைகள் தொடர்பாக புத்தகம் எழுதி உள்ளார். அவரிடம் பறை இசை தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அவரை போன்றே அவரின் தமிழும் அழகாக இருந்தது. நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

 

 Dr. Zoe C. Sherinian speak about parai music




கிராமபுற கலைகளில் நீங்கள் நிறைய ஆராய்ச்சி செய்துள்ளீர்கள். குறிப்பாக பறை இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறீர்கள். அதற்கு என்ன காரணம். எதற்காக அதை தேர்ந்தெடுத்தீர்கள். அதனுடைய நோக்கம் என்ன?

தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரே என்னுடைய குருநாதர். அவரே எனக்கு ஆக்கமும், ஊக்கமுமாக இருந்துள்ளார். அதையும் தாண்டி சின்ன வயதில் இருந்தே நான் ஃடிரம் இசை மீது அதிக நாட்டம் கொண்டு இருப்பேன். குறுகிய காலத்தில் அதனை சிறப்பாக கையாளவும் கற்றுக்கொண்டேன். மேலும், அதை குறிப்பிட்டவர்கள் தான் இசைக்க வேண்டும் என்பதையும், அது அவர்களுக்கானது என்று மற்றவர்கள் திணிப்பதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எதற்காக இந்தியாவை தேர்தெடுத்தீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?

அமெரிக்காவில் நான் இருக்கும் போதே எனக்கு இசையின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கர்நாடக இசையை ஆர்வமாக கேட்பேன். இசை சம்பந்தமான பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வேன். அப்போது எனக்கு வயது பதினெட்டுதான். ஆனால், இசையின் மீதான ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. இதனால், மிருதங்கம், கர்நாடக இசை முதலியவற்றை ஆசிரியர் உதவியுடன் நானே கற்றேன். நாளடைவில் அதில் சிறப்பானதொரு பயிற்சியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றேன். தமிழகத்தில் மதுரையில் உள்ள கல்லூரிகயில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். அங்கு அதை பற்றிய புரிதல்  அதிகமாக கிடைத்தது. என்னுடைய தமிழ் ஆசிரியர் எப்போது தமிழ் வாழ்க என்று சொல்வார். அது எனக்கு ஊக்கமாக இருந்தது.

நீங்கள் தமிழில் பேசுவீர்களா?

நீங்கள் கேளுங்க, நான் பேசுகிறேன். எனக்கு நல்லா தமிழ் தெரியும். இந்த முப்பது வருடங்களில் 6 வருடங்கள் மதுரையில் இருந்தேன். இசை படித்தேன். ஆராய்ச்சி செய்தேன். அப்புறம் பி.ஹச்.டி படித்தேன். அதனால் எனக்கு தமிழ் புரியும், பிடிக்கும்.

இந்தியன் மிசியூக் மற்றும் ஃபோக் மியூசிக் பற்றி உங்களுடைய பார்வை எப்படி இருகிறது. 

உங்களுடைய கேள்வியை மிக நேர்த்தியாக கேட்டுள்ளீர்கள். பெரும்பாலான கிராமபுற மக்கள் என்ன வகையான இசையை கேட்கிறார்கள். ஃபோக் மியூசிக் தான் கேட்கிறார்கள். அவர்கள் கார்நாடக இசையை கேட்பதில்லை. எனவே இந்திய இசையே ஃபோக் இசையை மையமாக கொண்டுதான் செயல்படுவதாக நான் கருதுகிறேன்.

பெரும்பாலும் பறை இசை குறிப்பிட்ட நபர்களை சார்ந்ததாகவும், துக்க நிகழ்ச்சிகளில் மட்டுமே இசைக்கப்படுகின்றதை பற்றிய உங்களின் பார்வை என்ன?

நானும் அதை பற்றி படித்துள்ளேன். அவ்வாறு இருந்தால் அது தவிற்க்கப்பட வேண்டும். பறை அனைவருக்கும் பொதுவானது. பறை இசை நமக்கு மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும் என்பதே என்னுடைய எண்ணம். எனவே துக்க நிகழ்ச்சியில் மட்டும் பறை என்பது சிலருடைய தவறான புரிதல் என்றுதான் நான் கருதுகிறேன். திருமணம், வளைகாப்பு, சடங்கு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பறை இசையை இசைக்கலாம்.